எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 27 டிசம்பர், 2023

சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 95 ஆவது கவியரங்கு 26-12-2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.

      - என். நஜ்முல் ஹுசைன்
        தலைவர்,
        வலம்புரி கவிதா வட்டம்
        (வகவம்)

தனக்கென கவிதையின் உலகில் நின்று
தனித்துவம் பெற்றவன்; தகைமையாளன்
கனத்திட வைப்பவன் கவிதை மொழியால்
கதைகளில் அனுபவச் சோகம்
பிழிவான்
மனங்களை வென்றிடும் கவிதை பாடி
மலைத்திடும் அளவினில் ரசிகர்
பெற்றான்
கனவதில் நிலைக்கின்ற போதும்
கூட
கவிதையில் வாழ்ந்திவன் இன்பம் காண்பான்

இளமையை தமிழுக்கே தாரை வார்த்து
இலக்கணம் இலக்கியம் பாடம் கற்றான்
விளக்கென பலருக்குச் சுடரும் ஏற்றி
விதிமுறை நடைமுறை சொல்லித் தந்தான்
வளம்பெறும் கவிதையில் வாழும் கவிஞன்
வகவத்தில் இருப்பது பெருமை என்போம்
உளமெலாம் நிறைந்தவன் இவனை இன்று
உரிமையாய் தலைமைக்கே அழைத்து வந்தோம்

அமீர் எனும் சொல்லுக்குத் தலைவன் பொருளாம்
அரங்கிற்கு இன்றிவன் பொருத்த மானான்
அமீர் அலி என்கின்ற சந்தக் கவிஞன்
அமீர் எனும் தலைவனாய்
அமைந்து கொண்டான்
டுமீலென வெடித்திடும் கைத் துப்பாக்கி
போலிவ னரங்கிலே வெடிக்க வந்தான்
தமிழெனும் அமுதினைச்
சாறாய்பி ழிந்து
தன்அக வாழ்க்கையைப்
படிக்க வந்தான்


சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி

இது
தொண்ணூற்றி ஐந்தாம்
கவியரங்கு
இதில் இருக்கிறதே
உனக்கும் பெரும் பங்கு
எம் கவிஞர் படையும்
துணைக்கிங்கு
சங்கத் தமி ழெடுத்து
நீ முழங்கு !

வருக
சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி
- என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஐம்பது எழுத்து ஆளுமைகள்" வாழ்த்துப் பா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


பாவேந்தல் பாலமுனை பாறூக் தொகுத்த "ஐம்பது எழுத்து ஆளுமைகள்" நூல் அறிமுக விழா 16/12/2023 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வாசித்த வாழ்த்துக் கவிதை

ஓர் ஆளுமை
ஆழ
மைத் தொட்டுள்ளது

ஆளுமைகளை
ஆழம் பார்த்து
காலை விட்டுள்ளது

காலை வாரும் உலகில் தலையை வாரி விட்டுள்ளது

இளமைத் தொட்டு
எழுதியவர்கள்
இள "மை"த் தொட்டு எழுதியவர்கள்
தம் முதுமைத் தொட்டும்
எழுதி இருப்பதை

தன் புது மைத்
தொட்டு எழுதி
பார்வைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பார் வைத்திருக்கிறார்

பாவேந்தல் பாறூக்

அது அவர்
பேர் வைத்திருக்கிறது

எழுத்துலகில்
வேர் வைத்தவர்களை
தன் வேர்வை வைத்து
எழுதி இருக்கிறார்

தன் இமைகள்
சுமைகள் தாங்கிய போதும் நித்திரை மறந்து
இதனை சுகப்பிரசவம்
ஆக்கித் தந்துள்ளார்

எத்தனையோ சுகப்பிரசவங்களின் மகப்பேற்று
மனை

தமிழன் -
தமிழ் முரசு

ஆம்
தமிழ்
முரசு கொட்டியல்லவா
பிரசவம் நடத்தியுள்ளது


அன்பைக் கொட்டி ஆளுமைகளை அணைத்துக்கொண்டது

அவர்கள் அணைத்துக் கொண்டதால்
இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஆளுமைகள்

பத்திரிகைகளே
உங்கள்
திரி கைகளால் தானே
இந்தப் பிரகாசம்
எங்களுக்கு



சஞ்சிகைகளே
எங்கள் சிகைகளே   அலங்காரமாய்
இருப்பது உங்களால்தானே

உங்களின்
அச்சகங்களும்
அட்சரங்களும்
உச்சரித்ததால்
உச்சம் தொட்ட
ஆளுமைகள்

பேனைத் தொட்டு எழுதிய நாங்கள் இப்போது
"போனை"த் தொட்டு எழுதுகிறோம்

நாங்கள் எப்படி
எழுதினாலும் உங்கள்
பிரசுர பானை தானே
அதனைச் சமைத்து அகப்பையில் அள்ளி
வாசகர்
அகப்
பைக்கு ஊட்டி விடுகின்றது

அப்பக்கம் இப்பக்கம் இருந்தவர்களுக்கெல்லாம்
தன் பக்கம்
ஒரு பக்கம் வழங்கி
அக்கம் பக்கமாக்கிய
தமிழ் முரசு பொறுப்பாசிரியர் ஜீவா சதா
சிவம்
நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் இலக்கிய இதயங்களில்
மகத் துவம்


பாலமுனை பாறூக்

ஆளுமைகளின்
பாலம் உனை
பாராட்டி மகிழ்கின்றேன்

நீங்கள் துணிந்த கருமம் யாரும் துணியாத கருமம்

இந்த ஆளுமைகளை
ஒரு நூலால் கட்டியிருக்கிறீர்கள்

ஒரு நூலாய் கட்டியிருக்கிறீர்கள்

பாவேந்தலே நீங்கள்
பூ வேந்தி இருக்கிறீர்கள்

பல்லோரின் பிரார்த்தனைகள் உங்களை ஏந்தி இருக்கின்றன

நன்றி !

என். நஜ்முல்  ஹுசைன்

16/12/2023

புதன், 13 டிசம்பர், 2023

அவர்களுக்காக - சிறுகதை

 

அவர்களுக்காக.........!


             - என். நஜ்முல் ஹுசைன்


செய்தியை கேள்விப்பட்டவுடன் அபூநஜாத் திகைத்துப் போய்விட்டான்.  அவன் நினைத்ததோ ஒன்று; ஆனால் நடக்கப் போவதோ ஒன்று. அவனால் அதனை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.  தீயில் விழுந்த புழுவாக அவன் துடித்தான்; துவண்டான்.  

உயிரை துச்சமென மதித்து அவன் செய்த செயல் எத்தனை அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும்.  ஆனால் அது போன்ற ஒரு செயலில் ஈடுபடக் கிடைத்ததை பேரருளாகவே அபூநஜாத் கருதினான்.  அவ்வாறான ஒரு தீரமான செயலைச் செய்வதற்கு அவன் மட்டுமல்ல அவனது சக தோழர்களும் எப்போதும் தயாராகவே இருந்தனர்.

எனினும் இதனை செய்வதற்கு அபூநஜாத்தையே தெரிவு செய்தமைக்கு காரணம் அவனிடமிருந்த விசேடமான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவுதான். இச் செயலை செய்வதற்கு வெறுமனே உடல் வலிமையும் துணிவும் மட்டும் போதாது. அபாயகரமான அச் செயலை செய்வதற்கு நுண்ணிய அறிவும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சில செயல்களை செய்யும் ஆற்றலும் இருக்க வேண்டும்.  அந்த ஆற்றல் நிரம்பப் பெற்றவன்தான் அபூநஜாத்.

தனது தாய் நாட்டு மக்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக போராடும் அந்தப் போராளிக்கு தீவிரவாதி பட்டம் சூடி அவனது போராட்டத்தை சில மேற்குலக நாடுகள் மழுங்கடிக்கப்  பார்த்தாலும் அவனும் அவனது சக தோழர்களும் முன் வைத்த காலை என்றென்றும் பின் வைக்க  மாட்டார்கள்.

இடைக்கிடை கண்முன்னே தங்களது உறவுகள் குறிப்பாக வயோதிபர்கள், பெண்கள் குழந்தைகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ் வேளை அவர்களது போராட்டம் இன்னும் கூர்மையாகிக் கொண்டுதானிருந்தது. அவ்வப்போது அப்பாவிகளைக் தாக்கிவிட்டு வீர பிரதாபம் பேசித் திரியும் இஸ்ரேலுக்கும், அதனைப் பார்த்துக் கொண்டே குருடர்களாக இருக்கும் மற்றைய  நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டுமென சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அந்த   காஸா மண்ணின் மைந்தர்கள் காத்துக் கிடந்தனர். 

அந்தச் சந்தர்ப்பம்தான் அபூநஜாத்துக்கும் அவனது நண்பர்களுக்கும் வாய்த்தது.

விடுதலை வேட்கையோடு எத்தனை நாட்கள் தான் கற்களை மட்டுமே நம்பி இருப்பது. அபூ நஜாத் போன்ற உறுதிமிக்க இளைஞர்கள் எதிரிக்கு இணையான போர் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.  எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாளும் ஆற்றல்களையும் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்ல நவீன அறிவியல் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் கண்ணில் மிளகாய் தூள் தூவும் வண்ணம்  சில பல நுணுக்கமான ஆற்றல்களையும் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டனர்.  அந்த ஆற்றலே அபூநஜாத்தை எதிரியின் நாட்டுக்குள் - இல்லை இல்லை தமது நாடு என நினைத்துக் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் எதிரியின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லும் திறனை அவனுக்கு வழங்கி இருந்தது. தான் செல்வது மரணத்தின் பயணம் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கொஞ்சம் கூட அச்சச்சிறையில் தன்னை பூட்டி வைத்துக் கொள்ளவில்லை.

கண்முன்னே தனது அப்பாவி உறவுகள் அடிக்கப்பட்டு,  உதைக்கப்பட்டு, ஈவிரக்கமின்றி  துவம்சம் செய்யப்படுவதை அன்றாடம் கண்டு கண்டு அபூநஜாத்தினதும்,    அவனைப் போன்றே அவனது தோழர்களினதும்   நெஞ்சங்கள் புழுங்கிக் கொண்டிருந்தன. நிச்சயம் தமது எதிரி ராணுவம் அழிக்கப்பட வேண்டியவை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.  அந்த போராட்டத்தின் விலை தங்கள் உயிர்கள்தான் என்பதை அவர்கள் அறியாமலில்லை. தாங்களும் வீரச் சொர்க்கம் அடைய வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. எனினும் மரணிக்கும் முன்பு சுதந்திர பாலஸ்தீனத்தைக் கண்டுவிட்டு மரணிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உறுதியாக கொண்டிருந்தனர்.  நியதிப்படி எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகவே இருந்தனர். கொடூர இஸ்ரேலுக்கு பல மேற்குலக நாடுகள் துணையாக இருக்கும் போது தங்களுக்கு வெறும் வாய்ஜாலங்களே துணையாக இருக்கின்றன என்பதை எண்ணும் போதெல்லாம் அவர்களின் இரத்தம் கொதிப்பேறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. தம் கைகளே தமக்கு உதவி என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.

தாம் எதிர்பார்த்து காத்திருந்த வேளை வந்த போது, அவனும் அவனது நண்பர்களும் திட்டம் தீட்டினார்கள். அதனை திறம்படச் செய்யும் ஆற்றல்  தொழில்நுட்ப அறிவில் அனைவரையும் மிஞ்சிய அபூ நஜாதிற்கு இருக்கிறது என்று ஒருமித்துத் தீர்மானித்தார்கள்.

மிக சூசகமான முறையிலே திட்டமிட்டு அபூநஜாத் எதிரியின் எல்லைக்குள் சுரங்கம் வழியாக நுழைந்தான். எப்போதுமே தங்கள் கைகள் ஓங்கி இருப்பதன் கர்வத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் மிகவும் மெத்தனமாகவே இருந்தனர்.

அபூநஜாத்தும்  நண்பர்களும் குறிவைத்த  இடத்திற்கு ஒரு சில இராணுவ வீரர்களே பாதுகாப்புக்காக இருந்தனர். அவர்கள் கூட அவர்களது கவனங்களையெல்லாம் வெவ்வேறு திசைகளில்தான் செலுத்தி இருந்தார்கள். கேலிப்பேச்சுக்களை உதிர்த்து  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அது அபூநஜாத்தின் வேலையை அவன் நினைத்து வந்ததைவிட இலகுவாக்கியது. தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தானோ அது இத்தனை இலகுவாக முடியும் என்று அவன் கூட நினைக்கவில்லை.

எதிரிகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கும் கருவிகளை ஏமாற்றும் கலையில் அபூநஜாத் விசேட பயிற்சிப் பெற்றிருந்தான்.

அந்த அறிவைப் பயன்படுத்தி அவன் செய்து வந்திருந்த பொருள் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தது.

அதே வேளை வெளியே பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு இஸ்ரவேலின் தொழில்நுட்பம் இல்லையோ என்பதையும் அபூநஜாத்தினால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.  இல்லாவிட்டால் இப்படியான ஒரு திட்டத்தை இவ்வளவு இலகுவாக முடிக்க முடியுமா ?

அவனும் அவனது நண்பர்களும் திட்டமிட்ட காரியத்தை ஒரு சிறு கீறலுமின்றி அவனால்  செய்ய முடிந்தது அவனுக்கே பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.

"அல்ஹம்துலில்லாஹ்" என்று பாதுகாப்பாகத் திரும்பி வந்து அமர்ந்த போதுதான் அவனுக்கு இடி போல் அந்தச் செய்தி கிடைத்தது.

அச்செய்தி கிடைத்தவுடன் அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. பலமுறை சிந்தித்தான். பலவாறு சிந்தித்தான். நண்பர்களுடன் ஆலோசனை செய்ய நினைத்தான். என்றாலும் செய்யவில்லை. அவன் செய்ய நினைத்திருக்கும் காரியம் முன்பை விட அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும். தனது நண்பர்கள் அதனை தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் அவனை அவர்களிடம் ஆலோசனைப் பெறுவதைத் தடுத்தது.

எதையுமே யோசிக்கவில்லை தன்னந் தனியனாய் தன் பயணத்தைத் தொடர்ந்தான். எத்தனை நீளமான பயணம். சென்று வந்த வழி தான் என்றாலும், உள்ளம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. 'சென்ற முறை எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவிச் சென்றேன் இம்முறையும் அப்படி முடியுமா ? அல்லது உயிரைத் தியாகம் செய்ய நேரிடுமா ? '

"யா அல்லாஹ் நான் நினைத்த காரியத்தை முடிக்கச் செய். அதன் பிறகு எனது உயிர் பிரிந்தால் பரவாயில்லை" என்பதே அவன் வழியெங்கும் செய்த பிரார்த்தனையாக இருந்தது. 

சிரமத்துடன் தான் போக வேண்டிய எல்லையை அடைந்து விட்டான். இன்னும் ஒரு ராணுவ வீரனையும் காணவில்லை. எனினும் பதுங்கிப் பதுங்கிச் சென்றான். 

"டுமீல்" தலைக்கு மேலால் வெடிச்சத்தம். மயிரிழையில் அபூநஜாத் உயிர் தப்பினான்.

ஆறு ராணுவ வீரர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அவனைச் சூழ்ந்து விட்டார்கள்.

அவர்களது மேலதிகாரி கத்துவது கேட்டது.  அவர்களது மொழியிலேயே அவன் கத்தினான்      

"சுட வேண்டாம். அவனை உயிருடன் பிடியுங்கள். எப்படி இத்தனை தூரம் வந்தான் என்று கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும்"  என்றான்.

அதனால் ராணுவ வீரர்கள் அவனை அமுக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.  என்றாலும் அவர்களையெல்லாம் விட அபூநஜாத் மிகவும் பலசாலியாக இருந்தான். அவர்களது பிடியிலிருந்து திமிரி  அவனை விடுவித்துக் கொண்டான். தப்பி ஓட முயற்சி செய்தான். என்றாலும் ஒவ்வொரு ராணுவ வீரனும் அபூநஜாத்தை நையப் புடைக்க ஆரம்பித்தனர். மேனியிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

என்றாலும் அபூநஜாத் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அவர்களுடன் போராடிப் போராடி முன்னேறினான். துப்பாக்கியின் மறுமுனையாலும்,  சப்பாத்துக் கால்களினாலும் அவனை தாக்கினர். அத்தனையையும் தாங்கிக் கொண்டு அபூநஜாத் இன்னும் முன்னேறினான்.

ராணுவ வீர்களின் பிடிக்குள் இருந்து கொண்டே அவர்களையும் மீறி,  இரத்தம் தோயத் தோய உடைந்த கால்களை இழுத்துக் கொண்டு ஓரிடத்திலே வந்து நின்றான்.

ஒரு பெரும் கல்லை அகற்றினான்.

அங்கே பெரியதொரு வெடிகுண்டு மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கண்டு ராணுவ வீரர்கள் அனைவருமே அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர்.  அதனை வெடிக்கச் செய்யத்தான் அவன் அங்கே வந்திருக்கிறான் என்று அவர்களுக்கு விளங்கிவிட்டது. அது வெடித்தால் அங்கே பேரழிவு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. 

அச்சத்தின் காரணத்தால் அவர்கள் அவனை விட்டுவிட்டு நெடுந் தூரம் ஓட ஆரம்பித்தனர்.

'இப்போது குண்டு வெடிக்கும், இப்போது குண்டுவெடிக்கும்' என எதிர்பார்த்து இருந்த வேளை அந்தக் குண்டு வெடிக்கவே இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது....

இல்லை குண்டு வெடிக்கவில்லை'

மெது மெதுவாக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கே அபூநஜாத் குண்டுக்கருகில் நின்று கொண்டு  ஏதோ செய்து கொண்டிருந்தான்.  ஏதோ வயர்களைத் தேடி  வெட்டிக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் அங்கே இருந்த ராணுவ அதிகாரிக்கு புரிய ஆரம்பித்தது.  அங்கே வந்திருந்தவன் குண்டை வெடிக்க வைக்க வரவில்லை.

அந்தக் குண்டை செயலிழக்கச் செய்ய வந்திருக்கிறான்.

அவன் குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த போதும் தனது பணியை செய்து முடித்திருக்கிறான். 

தனது பணி முடிந்து "அல்ஹம்துலில்லாஹ்" என்று அபூநஜாத் நிலத்தில் சாய்ந்தான். 

ராணுவ அதிகாரி, சிறிய மயக்கத்திலிருந்த அபூநஜாத்தின் கன்னத்தில் தட்டினான். முகத்தில் தண்ணீர் தெளித்தான். 

மெதுவாக கண்களைத் திறந்த அபூநஜாத்திடம்  "என்ன செய்கிறாய் ? " என்று கொச்சை அரபியில் கேட்டான்.

பேசும் திறனை இழந்திருந்த அபூநஜாத் மெது மெதுவாக பேசினான்.

"இந்த நிலத்துக்கு மேல் பெரியதொரு ராணுவ அணிவகுப்பு நடக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அந்த வேளையிலே இக்குண்டை வெடிக்கச் செய்தால் பெருந்தொகையான ராணுவ வீரர்களை, அரசியல் தலைவர்களை கொல்லலாம் என்று தீர்மானித்தோம்.

அதனால் தான் இந்த இடத்தை கண்டுப்பிடித்து நானே வந்து உங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைவாக இதனைக் கொண்டு வந்து பொருத்தினேன்.

"அப்படியா ?" நடுக்கத்தோடு கேட்ட ராணுவ அதிகாரி

"அப்படி என்றால், அப்படி என்றால் ஏன் இத்தனை கஷ்டப்பட்டு வந்து இதனை செயலிழக்க செய்கிறாய் ?"

"நான் இந்தக் குண்டை பொருத்தி விட்டு சென்ற பிறகுதான், எனக்கு அந்தத் தகவல் கிடைத்தது. 

அந்தப் பேரணியில் 400 சிறுவர் சிறுமியர் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்திதான் அது.  எங்களது இலக்கெல்லாம் ராணுவ வீரர்கள் ஆன உங்களை நோக்கித் தானே தவிர அந்த மழலைகளை நோக்கி அல்ல. அந்தச்  சிறுவர்கள் வெடித்துச் சாவதை நாங்கள் எப்போதுமே விரும்புவதில்லை.  அவர்களை பாதுகாக்கவே நான் மீண்டும் வந்தேன்"  என்று தட்டுத்தடுமாறி சொன்ன போது அந்த ராணுவ அதிகாரியின் விழிகளில் நீர் முட்டியது.

 இரத்தம் தோய்ந்த அபூநஜாத்தை அந்த ராணுவ அதிகாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

அவனது தழுதழுத்த நாவில் இருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன

" நீங்கள் தீவிரவாதிகள் அல்ல- போராளிகள்".

 ("விடிவெள்ளி"   7/12/2023)


செவ்வாய், 12 டிசம்பர், 2023

கவிஞர் பொன். தாட்சாயினி சர்மா

 தாட்சாயினி சர்மா


ஊற்றெடுக்கும் தமிழைத்தான் துணைக்கழைத்து
உற்சாக மே பொங்க வகவத்தில்
ஆற்றலினை யே காட்ட முன்வந்த
ஆரணங்கே இந்தப் பெண்கவிஞர்
போற்றலுடன் இன்றவர்க்கு தலைமை தந்து
பேருவகையே நாங்கள் கொள்ளுகின்றோம்
சாற்றுகின்ற கவிதைகளால் மனங்கவர்ந்த
சாதனையாள் இவளை நாம் வாழ்த்தி நின்றோம்

இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பிடித்து
இடறிவிழாதே எங்கும்  தடம்பதித்து
உலவுகின்ற இவர் எழுந்து நிற்கின்றார்
உதவுகின்ற சமூகத்தின் சேவைதன்னில்
நிலவுக்கு ஒப்பான குளிர் மனத்தாள்
நிமிர்ந்திருப்பார் உயர்வான பண்புகளால்
வலம்வந்தார் இன்றெங்கள் வகவத்தில்
வாகாவே அரங்கத் தலைமையேற்று


தாட்சாயினி சர்மா எனும் இவரின்
தகைமைகள் பற்பலவாம் சாற்றவொண்ணா
வாட்டமின்றி எப்போதும் சிரித்த முகம்
வாஞ்சையுடன் பணிவதனின் துணையால் எங்கள்
நாட்டமதில் முன்னணியில் வந்து நின்றார்
நாடியே நாம் தலைமையினைத் தந்தே மகிழ்ந்தோம்
பாட்டெடுத்து எம்கவிஞர் அணியோ டிணைந்து
பாராட்டும் வண்ணம்தான் முன்னே செல்வார்

கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா
எங்கள் கவியரங்கம் தொண்ணூற்றி நாலு
இன்று நீங்கள் கிளப்புங்கள் தூளு

சர்மா பொன் தாட்சாயினி
உங்கள் கவியரங்கம்
இனித்திடட்டுமே இனி

வருக
கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா

செவ்வாய், 7 நவம்பர், 2023

கவிஞர் கலைமகன் பைரூஸ்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 93 ஆவது கவியரங்கு 28/10/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கலைமகன் பைரூஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

              - என். நஜ்முல் ஹுசைன்
               தலைவர்,
               வலம்புரி கவிதா வட்டம்
              (வகவம்)

கலைமகன் பைரூஸ்



ஆழமாய் தமிழை கற்க
ஆர்வமாய் தன்னை ஈந்தான்
வேழமாய் மொழியின் உள்ளே
வேகமாய் சென்று கற்றான்
வீழுதல் இன்றி எழுந்து
விசையுடன் கற்ப தாலே
பாழ் படலின்றி இவனும்
பண்டித னாகி நின்றான்


தமிழுக்கு தன்னைத் தந்தான்
தமிழினால் பெருமை கொண்டான்
அமிழ்தமாய் தமிழைப் பருக
அழகுற எழுது கின்றான்
இமியள வேனும் தமிழை
எவருமே களங்கம் செய்தால்
உமிழ்ந்திட அவரின் முகத்தில்
என்றுமே தயங்க மாட்டான்

வித்தகன் இவனும் கணிணி
வித்தைகள் கற்ற தாலே
புத்தமே புதிதாய் இவனின்
பெயரினில் எழுத்த மைத்தான்
சித்திரம் எழுத்தின் உருக்கு
சிறப்பிவன் பெயரை வைத்தே
முத்திரைப் பதிக்கும் கவிஞன்
கலைமகன் பைரூஸ் என்பான்


இருகரம் நீட்டி இவனை
இதயத்தால் அழைத்து நின்றோம்
வருகவே எங்கள் கவிதை
அரங்கினை தலைமை யேற்க
பருகவே உந்தன் தமிழை
பைந்தமிழ் தேனாய் பொழிக
உருகியே எங்கள் கவிஞர்
உன்னையே போற்றி மகிழ

கவிஞர் கலைமகன் பைரூஸ்
கவியரங்கு தொண்ணூற்றி மூன்று
காட்டிடுமா உன் தலைமைக்கு
சான்று !

வருக
வெலிகம மதுராப்புர
கவிஞர் கலைமகன் பைரூஸ் !

  - என். நஜ்முல் ஹுசைன்





திங்கள், 2 அக்டோபர், 2023

கவிஞர் ந. தாமரைச் செல்வி

 

வலம்புரி கவிதா வட்டத்தின் 92 ஆவது கவியரங்கம் 29/09/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவிஞர் ந. தாமரைச் செல்விக்கு கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த வருமாறு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
       - என். நஜ்முல் ஹுசைன்.                            தலைவர்,                                                         வலம்புரி கவிதா வட்டம்
         (வகவம்)

வலம்புரிக்கே நலம் புரிய
வந்து நின்றார் எங்கள்
வகவத்தில் தனக்கெனவோர் இடம் பிடித்தார்

நிலம்மீது ஓங்கு மொழி
தமிழைப் பற்றி
நின்றிருப்பார் தலைநிமிர்ந்து நாளும் வெல்வார்
சிலம்பெடுத்து வீசுகின்ற வீரனைbப் போல்
சிலிர்க்கின்ற சொல்லெடுத்து சுழன்று அடிப்பார்
நலம் பெறவே நானிலமும் வாழும் மாந்தர்
வளம் பெறவே எழுத்தெடுத்து பணியும் செய்வார்

ஆயிரமாய் முகநூலில் பதிவு செய்து ஆற்றலினை பலரறிய வைத்து இவரும்
ஆயுதமாய் தமிழைத்தான் ஏந்தி நாளும்
ஏற்றமுடன் முன்னேறி செல்வார் உண்மை
பாய்கின்ற புலி போலே பெண்களுக்காய்
அவர் உரிமை நலன்களுக்காய் எழுந்து நிற்பார்
தேய்கின்ற நிலவைப் போல் அல்ல இவரும்
வளர்கின்ற வான் பிறைக்கு உவமையானார்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் உள்ளம் தனிலேதான் தன் பெயரை பதிவு செய்து
உலவிடுவார் பொய்கை என்னும் தமிழின் ஆற்றில்
மெய் கையை நீட்டி இவர் புகழும் பெற்றார்
வலக்கையாய் இடக்கையாய் நண்பர் சூழ
வலம் வருவார் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்பார்
இலங்கிடவே இவர் வடிக்கும் கவிதை மொழியால்
இங்கேயும் தனக்கென ஓர் இடமும் பெற்றார்

நூறுக்காய் நடை போடும் எங்கள் அரங்கம்
தொண்ணூற்றி யிரண்டை உன் தலைமேல் வைத்து
பூரித்து நிற்கிறதே புகழின் மணியே வா வந்து தலைமையினை ஏற்று நடாத்தி
நீயும் தான் சேர்த்துவிடு தமிழுக் கணியே


இது என்ன கேள்வி
உனக்கு இல்லையே தோல்வி
வா என் புதல்வி
கவிஞர்
ந. தாமரைச் செல்வி
என்றழைக்கிறதே
வகவ அரங்கம்
உன் கவிதையிலே அது
நிச்சயம் கிறங்கும்!

கவிஞர் ந. தாமரைச் செல்வி


    - என். நஜ்முல் ஹுசைன்

சனி, 30 செப்டம்பர், 2023

மீலாத் வானொலி கவிதை 2023

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 28/09/2023 அன்று குருநாகல் கெகுணகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து நேரடியாக ஒலிபரப்பிய மீலாத் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்புக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.  கவியரங்கிற்கு கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமை தாங்கினார்.


மண்பாடும் மா நபியின்

பண்பாடு எனும் மகுடத்தில் இடம்பெற்ற கவியரங்கில் எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு -


பகை வென்று பலம் தந்த.    பத்ர் களத்து மண்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும்


ஒரு.                                             பண் பாட வந்தேன்

பத்ர் களத்து மண் 

நான் -

பாட வந்தேன்

வல்லவனே அல்லாஹ்வே

வந்து விழட்டுமே 

என் வாயில் தேன்

அதை நினைத்தேன்

உனை துதித்தேன் 


கவிதை கசிகிறது

இந்த

பத்ர் களத்து

மண் வாசனையில் 

நான்

மூழ்கித் திளைக்கிறேன் 

அன்றைய

ரமழான் பதினேழின் 

யோசனையில்


உங்கள்

கல்புகளும் 

இணைந்து கொள்ளுமா 

இந்த சம்பாஷணையில் 


என் மேனிதானே

இஸ்லாம்

வாழப் போகிறதா 

மாளப் போகிறதா 

என்று


பலப் பரீட்சை

நடாத்திய இடம்


ஆமையிடம் 

முயல்

தோற்றுப் போனதை

நான் 

எழுதி வைத்தேன் -

சரித்திரப் புத்தகத்தில்


ஆயிரமாய்

ஆயுதமேந்திய கைகள்

ஈரமாய் 

துஆ ஏந்திய கைகளிடம்

என்

மண்ணைத்தானே 

கவ்வின 


சொற்ப முஸ்லிம்களை

எதிர்க்க

அற்பப் பதர்கள் 

அல்லவா 

ஆயிரமாய்

வந்திருக்கிறார்கள்

என்று காட்டிய 

பத்ர்

நானல்லவா


பத்ரை

சேறாக்க நினைத்தவர்கள்

இஸ்லாமிய 

கதிர்களை அல்லவா

விவசாயம் செய்தார்கள்


அவர்கள் குதிரைகளின்

குளம்போசை 

முஸ்லிம்களின்

தக்பீர் ஓசையின் 

முன் தோற்றுப் போனது


குதிரைகளில் வந்த

கழுதைகளாய் 

அவர்களுக்கு

அடையாளம் கிடைத்தது


இன்றோடு

கதை முடியும்

என்று வந்து

இஸ்லாத்திற்கு 

முடி சூடிவிட்டு

மடிந்து போனார்கள்-

பத்ரீன்கள் 

இஸ்லாமிய இதயங்களில்

படிந்து போனார்கள்


 புதிய அத்தியாயத்தை

எதிரிகளே

எழுதிச் சென்றார்கள் -


அவர்களது 

தோல்வியை

முதலீடு செய்து


பத்ர் நான்

பேரதிர்ஷ்டம் செய்த

மண்


நான்தானே

முதன் முதல்

முன்னூற்றி பதின்மூன்று

ஈமான்தாரிகளை

ஆயுதமேந்திய

வானவர்கள்

தழுவிக் கொள்ள

இடம் கொடுத்தவன்


மனப்பால் குடித்து

வந்தவர்களை

மண்டியிட வைத்து

அவர்களின்

வயிற்றில்

புளி கரைத்தேன்

இந்தப்

பாலையிலே

பாலை வார்த்தேன்


இங்கிருந்துதானே 

அகிலத்துக்கே

காலை

உதயமானது


நான்

சாதனை மண் மட்டுமல்ல 

சோதனை மண்ணும்தான் 


வாளேந்தி போராடுகிறார்களா அல்லது

வாலைச் சுருட்டிக் கொண்டு

புறமுதுகு காட்டுகின்றார்களா 

என்று

இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு

பரீட்சை வைத்தேன்


அவர்களது ஈமானை

அல்லாஹ்விடம்

சொல்லி வைத்தேன்


அவர்களை

பத்ரீன்கள் என்ற 

சொல்லில் வைத்தேன் 


முன்னூற்றி பதின்மூன்று

வெறும்

இலக்கமல்ல 

இடி

முழக்கம்

என்று பறைசாற்றியவன் நான்


அந்த 313

நூற்ற நூலாடைதான் 

முஸ்லிம்களின்

மானத்தை


இன்றும் 

பாதுகாத்து நிற்கின்றது

என்று காட்டியவன் 

நானல்லவா


 நான் மண்ணல்ல

இஸ்லாத்தை

உலகுக்கே காட்டிய கண்


என் மண்மீதுதானே 

உலகம்

கண் வைத்தது

ஈமான்

இதயம் வைத்தது


நான்

முஸ்லிம் உலகின்

இதயமானேன் 


என்னை

மண்ணாக நினைத்தார்கள்

முஸ்லிம்களை

மண்ணாக்க நினைத்தார்கள்

அவர்கள்தான்

மண்ணோடு

மண்ணாகிப் போனார்கள்


இஸ்லாமிய சாம்ராஜ்யம்

உலகமெங்கும் 

கட்டிடம் கட்ட

என்னிடமிருந்துதானே

மண் அள்ளினார்கள் 


ஒற்றை மரம் கூட இல்லாத

என்

வெற்று மேனியின் மேல்தானே 

அந்த ஈமான்தாரிகள்

வெற்றிக் கனி

பறித்தார்கள்


இன்றும் அதன் சுவை

முஸ்லிம் உம்மாவின்

நாவில்


நான் இன்றும்கூட

இறுமாப்போடிருக்கிறேன் 


எங்கள் அண்ணல் நபியின்

கண்ணீரைத்

துடைத்ததில் 

எனக்கும்

பங்கிருக்கிறதே 

என்று

எண்ணி எண்ணி.....


ஒப்பிட்டால்

முஸ்லிம்கள் என்மீது

வடித்த

உதிரத்தை விட

நான் அவர்களுக்கு

வழங்கிய

உதிரம்தானே அதிகம்


அதனால் தானே 

உலக தரைகள் எங்கும்

அவர்கள்

காலூன்றி நிற்கின்றார்கள்


அதனால்

என்றென்றும் நான்

உலகளாவிய முஸ்லிம்களின்

மனங்களில் எல்லாம்

மணந்து கொண்டே

இருப்பேன்


எங்கெங்கெல்லாம் 

அண்ணலே யாரஸூலே 

உங்கள் உம்மத்தை

தலைகுப்புறப் புரட்ட

சதி நடக்கிறதோ 

அங்கெல்லாம்

அவர்களைத் தூக்கி நிறுத்த 

நான் இருக்கிறேன்


இந்த 

பத்ர் களம்

இருக்கின்றது -

இன்றும் அதே

உயிர்ப்போடு !


ஸல்லல்லாஹு அலா முஹம்மத்

ஸல்லல்லாஹு அலைவஸல்லம் !


 - என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மாட்டிக்கொண்டான் - சிறுகதை

 

மாட்டிக்கொண்டான்


    - என். நஜ்முல் ஹுசைன்


முபாரக் ஒரு காலமும் இப்படி நடுங்கியதில்லை.  அச்சம் அவன் உள்ளத்தை மட்டுமல்ல உடம்பையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தான் கைது செய்யப்பட்டால் தனக்கு என்ன நிலைமையாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாமலிருந்தது.


மீடியாக்கள் முண்டியடித்துக் கொண்டு அவனது வீட்டு வாசலில் கெமராக்களை தூக்கிக் கொண்டு வருவது போன்றே அவனது மனக்கண் முன் தோன்றிக் கொண்டிருந்தது. அந்த மாயத் தோற்றத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.  அவனது கைதுக்குப் பிறகு மீடியாக்கள் அவனது குடும்பத்தை என்ன பாடுபடுத்தும் என்று அவனால் யோசிக்கவே முடியாதிருந்தது.


தொலைக்காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. சிங்கள செய்திகளிலெல்லாம் இவ்வாறான செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தன. அதுவும் வேதனையைத் தந்து கொண்டிருந்தது.


அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே குலை நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த வரிசையில் தானும் வந்து விடுவேனோ என்று நினைப்பே அவனது தலையில் இடி விழுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.


பொலிஸாரும் இராணுவத்தினருமாக இணைந்து வீடு வீடாக தேடுதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  தனது வீட்டுக்கு வந்தால் நிச்சயமாக அவர்கள் கண்டுப் பிடித்து விடுவார்கள்.


அவர்களது தேடுதலுக்குப் பயந்து முபாரக் எத்தனைப் பெறுமதியான நூல்களை எரித்துப் போட்டான் . அவன் மட்டுமல்ல அவனைப் போன்ற பலர் இதனைத்தான் செய்தார்கள். வருபவர்களுக்கு அரபு மொழியைப் பார்த்தாலே அது தீவிரவாதிகளின் நூல்கள் போலல்லவா தெரிகிறது.  அதனால் பலர் குர்ஆனைக்கூட எப்படி மறைப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  வீட்டில் அரபு கிதாபுகளையும் குர்ஆன்களையும் வைத்திருந்த ஒரு சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வந்த செய்திகளும் முபாரக்கின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன.  "அல்ஹசனாத் " சஞ்சிகையை வைத்திருந்த பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் அவனை குழப்பமடைய செய்திருந்தன. அவனது மனைவியும் அவனை விடாது நச்சரித்துக் கொண்டே இருந்ததால், தான் இஸ்லாமிய அறிவினைப் பெருக்கிக் கொண்ட பல பொக்கிஷங்களைத் தடயமின்றி  எரித்துப் போட்டான். அப்போது அவனது ஈமானிய இதயம் பட்ட பாட்டை வரிகளில் உள்ளடக்கிவிட முடியாது.


ஆனால் இப்போதுள்ள இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவதென்றுதான் புரியாமல் தவித்தான்.  இதிலென்றால் எப்படியும் தான் மாட்டிக் கொள்வேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. பொலிஸார் வந்து அவனது கைகளில் விலங்கு மாட்டி அவனை இழுத்துக் கொண்டுச் செல்லும் காட்சி அவனது மனக் கண் முன் தோன்றிக் கொண்டேயிருந்தன.


கண்டியில் அவனுக்குத் தெரிந்த உறவினர் ஒருவரையும் கைது செய்து அடைத்து வைத்து சில மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் விட்டிருந்தார்கள்.  இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் - அவரது தேநீர் வைக்கும் மேசையில் போட்டிருந்த விரிப்பு. அது இராணுவ சீருடைக்கு ஒத்ததாக இருந்ததாம். அதனைக் காரணம் காட்டியே அவரைக் கைது செய்திருந்தார்கள். தொலைக்காட்சி செய்திகளில் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் வாய் கூசாமல் கூறப்பட்டன.  அவர் ஓர் அப்பாவி என்பது முபாரக்குக்கு நன்கு தெரியும். இருந்தாலும் என்ன செய்ய பாதுகாப்புப் படையினர் எங்களையெல்லாம் சந்தேகக் கண் கொண்டுதானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


முபாரக் எந்தத் தவறுமே செய்யவில்லை. இருந்தாலும் இப்போது அவனிடம் இருக்கும் சான்று அவர்களுக்கு முபாரக்கை சந்தேகத்திற்குரியவனாகத்தானே காட்டும்.


அதை நினைத்து நினைத்துத்தான் இரவும் பகலும் அச்சத்துடனும் கவலையுடனும் இருந்தான்.


அந்த அச்சத்துடனும் கவலைக்கும் மூல காரணமாக இருந்தது அவனிடமிருந்த அந்த "கத்திகள்தான்".


வீடுகளிலிருந்த ஓரிரு கத்திகளுக்காகக் கூட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே.   முபாரக்கிடம் கைவசம் இருப்பதோ  32  கத்திகள்.


இது சில வருடங்களுக்கு முன் அவன் செய்த வியாபாரத்தில் மிஞ்சியவை.  இப்போது அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் அவனிடமில்லை.


அதுதான் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தான் முபாரக்.  அவற்றையெல்லாம் ஒரு மூலையிலே போட்டு வைத்திருந்தான். அவை வெளிநாட்டுத் தயாரிப்பு என்ற காரணத்தால் ஆண்டுகள் பல கடந்தும் பளபளப்பாகத்தான் இருந்தன.  முபாரக் அவை தன்னிடமிருப்பதை மறந்தே போயிருந்தான். இந்தப் பிரச்சினைத் தோன்றிய பின்னர்தான் ஸ்டோர் அறையிலிருந்து அவற்றை வெளியில் எடுத்தான். அதிலிருந்து ஒரு சில கத்திகளையாவது எடுத்துச் செல்லுமாறு பல நண்பர்களிடம் கேட்டுப் பார்த்து விட்டான். என்றாலும் ஒருவர் கூட அதற்கு இணங்கவில்லை.  தங்களுக்கு இப்போதைக்கு கத்தி வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.


ஆனால் அதற்காக யாரையுமே குறை சொல்ல முடியாது. யாருமே தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.


எல்லா கத்திகளையும் குழி தோண்டிப் புதைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும். வீடுகளுக்கு மோப்ப நாய்களையும் அழைத்து வந்து தேடுகிறார்களாம்.


இதையெல்லாம் நினைத்து நினைத்தே முபாரக் பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.  அவனது மனைவி பரீதா கூட சமையல் செய்வதற்கும் திராணியற்று இருந்தாள். அவர்களது பிள்ளைகள் இது பற்றி எதுவுமே தெரியாமல் அவர்கள் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


இன்று முபாரக் வசித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதலை ஆரம்பித்திருந்தனர் என்ற செய்தி

அவனுக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது.


"முபாரக் அய்யே, முபாரக் அய்யே" யாரோ வாசலிலிருந்து பலமுறை அழைத்துக் கொண்டிருந்தது முபாரக்கின் காதுகளில் விழவேயில்லை.


முபாரக்கின் மனைவிதான் உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தாள். அது பக்கத்து வீட்டு சுனில் அய்யா.


அவளுக்கும் அச்சம் பிடித்துக் கொண்டது. நடுக்கத்துடன், "எய் அய்யே ?" (ஏன் அண்ணா ?) என்று கேட்டாள்.


உள்ளுக்கு வரவா என்று கேட்டுக் கொண்டே அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே வந்தான்.


"முபாரக், முபாரக் அந்தா பொலிஸெல்லாம் வாராங்க"


சுனில்  முபாரக்கின் அச்சத்தை அதிகரித்தான். முபாரக் விழிகளை விழித்து சுனிலைப்  பார்த்தான்


"ஒங்கட கத்திய எல்லாம் என்ன செஞ்சீங்க ?" சுனில்  கேட்டான்.


முபாரக்கிடம் இருக்கும் கத்திகளைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். பக்கத்து வீடென்றதால் சுனிலின் மனைவி மெனிக்கே முபாரக்கின் வீட்டிற்குள்ளே எல்லாம் சுதந்திரமாக நடமாடுவாள்.  அவள்தான் கத்திகளைப் பற்றியும் முபாரக்கும், மனைவியும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லியிருப்பாள்.


"எல்லாம் அப்படித்தான் இருக்கி" முபாரக் ஈனக் குரலில் சொன்னான்.


"அவங்க வந்தா ஒங்கள எப்படியும் புடிச்சுருவாங்களே" என்று சொல்லிக் கொண்டே சுனில்  வெளியே ஓடினான்.


முபாரக் ஆடாமல் அசையாமல் இருந்தான்.


இப்போது மீண்டும் சுனிலின்  குரல் கேட்டது.


"முபாரக்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.


"நங்கி கத்தியெல்லாம் எங்க ? " என்று பதறிக் கொண்டு கேட்டான்.


எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பரீதா கத்திகள் இருக்கும் இடத்தைக் கைக் காட்டினாள்.


ஓடிப் போய் எல்லா கத்திகளையும் சுனில்  அள்ளி எடுத்தான். ஒரே முறையில் அவற்றையெல்லாம் அவனால் எடுக்க முடியவில்லை. எல்லாமே பெரிய கத்திகள்.


மூன்று முறை கத்திகளை தூக்கிக் கொண்டு வெளியே போனான்.


முபாரக்குக்கும், மனைவி பரீதாவுக்கும் சுனில்  என்ன செய்கிறான் என்றே விளங்கவில்லை. வெளியே போய் பார்த்தார்கள்.


சுனில்  தான் அன்றாடம் மரக்கறி விற்கும் தனது தள்ளு வண்டியிலே கத்திகளைப் பரப்பி வைத்திருந்தான்


முபாரக்கையும், பரீதாவையும் பார்த்து அவன் சொன்னான்,

"பய வெண்ட எபா (பயப்பட வேண்டாம்)" என்று சொல்லி விட்டு தெருவுக்குப் போனதும் கூவ ஆரம்பித்தான்,


"பிஹிய, பிஹிய லாபெட்ட பிஹிய (கத்தி, கத்தி மலிவு விலைக்கு கத்தி" என்று முபாரக் வசித்த அந்தத் தெருவைத் தாண்டிச் சென்றான்.


அவன் அந்தத் தெருவைத் தாண்டிச் செல்லவும் அவனுக்கு முன்னால் பொலிஸ் ஜீப்பொன்று வரவும் சரியாக இருந்தது.


ஜீப்பின் முன் சீட்டில் அந்தப் பகுதியின் ஓ.ஐ.சி.தான் அமர்ந்திருந்தார். ஜீப் நிறைய பொலிஸ்காரர்கள்.


சுனிலின் தள்ளு வண்டியைக்  கண்டதும் கையை நீட்டி அதை நிறுத்தச் சொன்னார்.


கொஞ்சம் நடுக்கத்தோடு சுனில் வண்டியை நிற்பாட்டினான்.  ஓ.ஐ.சி. அவனை முன்னே வரச் சொல்லி சைகை காட்டினார்.


முன்னே போன சுனிலிடம் பெயர் என்ன என்று கேட்டார். பெயரைச் சொன்னதும் . அவனிடமிருந்த கத்திகளில் ஒன்றை எடுத்து வருமாறு

பணித்தார். கத்திகள் ஒன்றை எடுத்துச் சென்றதும் அதனைக் கையில் வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தார்.


நண்பனுக்கு உதவி செய்யப் போய் தான் மாட்டிக் கொண்டேனே என்று சுனில் நினைத்துக் கொண்டிருந்த போதே,


"மேக்க கீயத பங் ? (இது எவ்வளவு ?) " என்ற ஓ.ஐ.சீ. கேட்டதுமே சுனில் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.


"இது 1500/- ரூபா மஹத்தயா "  என்றான்.


"எச்சர காணத ? (அவ்வளவு விலையா ?)

.

" சேர் இது இத்தாலி கத்தி சேர்" . மறுபடியும்  ஓ.ஐ.சி. கத்தியை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு சுனிலிடம் கொடுத்து விட்டு தனது பரிவாரங்களோடு முன்னே போனார்.


சுனில் இன்னும் உற்சாகமாக, "பிஹிய, பிஹிய " என்று கத்திக் கொண்டு எதிர்புறமாகப் போனான்.


முஸ்லிம்களின் வீடுகளில் தேடுதல் நடத்துவதற்காக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருந்தார்கள்.


எந்தவிதமான கலக்கமுமின்றி முபாரக் தனது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். முபாரக்கின் மனைவி பரீதா இன்றாவது முபாரக்குக்கு வாய்க்கு ருசியாக   சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமையலிலே தீவிரமாக இருந்தாள்.


இனவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் அதற்கு அடிமைப்பட்டு விடாமல் பழைய அதே நேசத்தில் எவ்வித குறையும் வைக்காமல் சுனில் செய்த அந்த உதவியை வாழ்க்கையில் என்றென்றும் முபாரக்கினால் மறக்கவே முடியாது. அதற்கு கைம்மாறாய் சுனிலின் படத்தை முபாரக் இதயத்தில் மாட்டிக் கொண்டான்.


.........................................

(ஞானம்  - செப்டெம்பர் 2023)

கவிஞர் ரவூப் ஹஸீர்

 


கவிஞர் ரவூப் ஹஸீர்


வலம்புரி கவிதா வட்டத்தின் 91 ஆவது கவியரங்கு 30/08/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)



புரட்டித்தான் போடுகின்ற ஆற்றல் உள்ளான்
புதுக் கவி தைக்கு என்று ஒரு பேரும் உள்ளான்
விரட்டித்தான் கயமைகள் மாயவென்று
வீறு கொண்டு எழவைக்கும் புதுமை சொல்லான்
திரட்டித்தான்  இவன் வழங்கும் தகவல் கேட்டு
திணறுகின்ற வகையினிலே எம்மைக் குத்தி
உருட்டித்தான் மனமெங்கும் ரணங்கள் செய்து
உணர்வுகளில் கிளறி விடும்
சொற்கள்; முள்ளான்

மேடையிலே இவனேறி நின்றால்
செவிகள்
மெய்மறந்து இவனுக்கே அடிமை யாகும்
ஓடையிலே நாம் குளித்து அள்ளும்
இன்பம்
ஓதுகின்ற இவன் மொழிக்குள் வந்து சேரும்
பீடையிலே வாடுகின்ற மானுடத்தின்
பிணிதீர்க்க இவன் கையில் ஏந்தும் வாளும் 
கூடையிலே இவனள்ளி கொட்டுகின்ற
கொள்கைக்குள் பலர்தம்மை
கொடுப்பர் நாளும்

இன்றல்ல நேற்றல்ல கவிதை ஏந்தி
இலக்கியத்தில் இவன் நுழைந்த தந்தக் காலம்
இன்றும்தான் இளமைவரி மாறிடாமல்
இயங்கியிவன் மாற்றுகின்றான் எங்கள் ஞாலம்
குன்றெனவே வலம்புரியில் ஏறிநின்று
கூர்மையுடன் போடுகின்றான் புதிய கோலம்
இன்றெங்கள் அரங்கிற்குத் தலைமைத் தாங்க
இணங்கி ஹஸீர் வந்ததெங்கள்
நல்ல நேரம்

தொண்ணூற்றி ஒன்று இந்த கவியரங்கம்
தோள்கொடுக்க வந்து நின்றார் ரவூப் ஹஸீர்
வண்ணங்களால் கவிஞர் அலங்கரித்தே
வார்த்தைகளால் வழங்கிடு வாரே சீர்
எண்ணங்கள் சிறகடிக்க இடம் அளித்தோம்
எழுச்சிக் கவிஞரென கொடுத்தோம் பேர்

வாருங்கள்
கவிஞர் ரவூப் ஹஸீர்


கவிஞர் ரவூப் ஹஸீர்


வலம்புரி கவிதா வட்டத்தின் 91 ஆவது கவியரங்கு 30/08/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)



புரட்டித்தான் போடுகின்ற ஆற்றல் உள்ளான்
புதுக் கவி தைக்கு என்று ஒரு பேரும் உள்ளான்
விரட்டித்தான் கயமைகள் மாயவென்று
வீறு கொண்டு எழவைக்கும் புதுமை சொல்லான்
திரட்டித்தான்  இவன் வழங்கும் தகவல் கேட்டு
திணறுகின்ற வகையினிலே எம்மைக் குத்தி
உருட்டித்தான் மனமெங்கும் ரணங்கள் செய்து
உணர்வுகளில் கிளறி விடும்
சொற்கள்; முள்ளான்

மேடையிலே இவனேறி நின்றால்
செவிகள்
மெய்மறந்து இவனுக்கே அடிமை யாகும்
ஓடையிலே நாம் குளித்து அள்ளும்
இன்பம்
ஓதுகின்ற இவன் மொழிக்குள் வந்து சேரும்
பீடையிலே வாடுகின்ற மானுடத்தின்
பிணிதீர்க்க இவன் கையில் ஏந்தும் வாளும் 
கூடையிலே இவனள்ளி கொட்டுகின்ற
கொள்கைக்குள் பலர்தம்மை
கொடுப்பர் நாளும்

இன்றல்ல நேற்றல்ல கவிதை ஏந்தி
இலக்கியத்தில் இவன் நுழைந்த தந்தக் காலம்
இன்றும்தான் இளமைவரி மாறிடாமல்
இயங்கியிவன் மாற்றுகின்றான் எங்கள் ஞாலம்
குன்றெனவே வலம்புரியில் ஏறிநின்று
கூர்மையுடன் போடுகின்றான் புதிய கோலம்
இன்றெங்கள் அரங்கிற்குத் தலைமைத் தாங்க
இணங்கி ஹஸீர் வந்ததெங்கள்
நல்ல நேரம்

தொண்ணூற்றி ஒன்று இந்த கவியரங்கம்
தோள்கொடுக்க வந்து நின்றார் ரவூப் ஹஸீர்
வண்ணங்களால் கவிஞர் அலங்கரித்தே
வார்த்தைகளால் வழங்கிடு வாரே சீர்
எண்ணங்கள் சிறகடிக்க இடம் அளித்தோம்
எழுச்சிக் கவிஞரென கொடுத்தோம் பேர்

வாருங்கள்
கவிஞர் ரவூப் ஹஸீர்

- என். நஜ்முல் ஹுசைன்









கவிஞர் தி. ஸ்ரீதரன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 90 ஆவது கவியரங்கு 01/08/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் தி. ஸ்ரீதரன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

              - என். நஜ்முல்.         ஹுசைன்
               தலைவர்,
               வலம்புரி கவிதா வட்டம்
              (வகவம்)



அருவி என கொட்டி ஒரு கவி படிக்க
ஆர்வமுற்ற இளைய மகன் இங்கு வந்தான்
பெருவிருந்தாய் தமிழ் அள்ளித் தருவதிலே
பேராசை மிகக் கொண்ட ஆற்றலிவன்
உருவாகும் எண்ணத்தை உருவமாக்கி
உயிருள்ள தமிழ் கவிதை தந்து மகிழ்வான்
பெரும்பாலும் வகவத்தின் குழுமத்தை
பெயரெழுதி சொந்தமென ஆக்கிக் கொண்டான்

தினந்தோறும் கவி எழுதி வகவச் சுவரில்
திகட்டாமல் நாம் படிக்க வழிகள் செய்வான்
மனந்தோறும் நாம் வியந்து மலைத்து நிற்க
மாயம்தான் எங்கு பெற்றான் இது போல் எழுத
தனக்கேதான் வகவத்தைச் சொந்தமாக்கி
தன்பாணி யில் இதுபோல் எழுதிக் குவிக்க
சினந்தேதான் சிலபேர்கள் தாங்கள் எழுத
சிறிய இடை வெளிக்காகப் பார்த்து நிற்பர்

எப்போதும் கவிதையுடன் வாழும் இவனை
அழைத்தோம் நாம் கவியரங்கைத் தலைமையேற்க
தப்பாது வருகின்றேன் என்று கூறி
தலைநிமிர்ந்து தமிழோடு வந்து நின்றான்
உப்போடு இனிப்போடு உறைப்பும் சேர்த்து
உயர்கவிஞர் பட்டாளம் துணையும் சேர்த்து
இப்போது கவியரங்கைத் தலைமை தாங்க
இளங்கவிஞன் ஸ்ரீ தரனும் இசைந்து வந்தான்

கவிஞர் தி. ஸ்ரீதரன்
90 ஆவது கவியரங்கு
உந்தன் தலைமேல்

காட்டிவிடு  உன்திறமை
கன்னல் தமிழ்மேல்

வகவத்தின் கவிஞருடன்
வாகை சூடு
வாஞ்சையுடன்  நம்பிக்கை
வைத்தே  கவிமேல் !

கவிஞர் தி. ஸ்ரீதரன்

-     என். நஜ்முல் ஹுசைன்




கலா விஸ்வநாதன் வாழ்த்துக் கவி

 





(27/08/2023 அன்று இடம்பெற்ற கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களின் "சித்தரமிர்தம்" நூல் வெளியீட்டு விழாவின் போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)

நெஞ் சகலா விஸ்வநாதன்
---------------------------------------------------
எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்

மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்

வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே


எழுத்துலகில் அன்று முதல்
எழுச்சியுடன் நின்றவன்தான்
பழுத்த பலா வாக இங்கு மிளிருகின்றான்
இன்றவன்தான்
விழுதெனவே  இவன் விதைத்த
விருட்சமென இவன் எழுத்து
பழுதின்றி பலர் மனதில்
படர்திங்கே நிற்கிறது

நெஞ் சகலா விஸ்வநாதன்
எங்கள் கலா விஸ்வநாதன்
வஞ்சமிலா நெஞ்சுடையான்
வாஞ்சையுடன் எமை அழைத்தான்
கொஞ்சும் தமிழ் மொழியினையே
கோர்த்தெடுத்து வாழ்த்துகிறேன்
விஞ்சும் மொழி இவன் எடுத்து
வீறுடனே இனும் படைக்க

நூறாக இவன் நூல்கள்
பேறாக கிடைத்திடனும்
எழுதுகின்ற இவன் கைகள்
இன்னுமின்னும் பலம் பெறனும்
கூடிநிற்கும் நாங்களெல்லாம்
குதூகலமாய் துணை நின்று
பொருளா தாரத்தின் தூண் எனவே
நின்றிடனும்

வாழ்த்துப் பா மாலை
நான் சூடி புகழுகின்றேன்
கலா
விஸ்வநாதன் கவிஞனையே
வாழ்த்தியே நான் மகிழுகின்றேன்

வாழ்த்துகள் வாழ்த்துகள்

  - என். நஜ்முல் ஹுசைன்


ஞாயிறு, 9 ஜூலை, 2023

கவிஞர் சிந்தனைப் பிரியன் ஜமால்தீன் முஸம்மில்

 03/07/2023 அன்று வலம்புரி கவிதா வட்டத்தின் 89 ஆவது கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர்  சிந்தனைப் பிரியன் ஜமால்தீன் முஸம்மில் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.


         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,                                         வலம்புரி                                           கவிதா வட்டம் (வகவம்)


பல்வேறு ஆற்றல்கள் தன்னகத்தே
பவ்வியமாய் வைத்திருக்கும் இக்கவிஞன்
சொல்கொண்டு சொக்கித்தான் போய்விடவே
சுவையான கவிதைகள் சபை வைப்பான்
வில்லிருந்து பாய்ந்து வரும் அம்பைப்போல்
வித்தைகள் காட்டிவிடும் தகைமை உள்ளான்
பல்லாண்டைக் கடந்துஇவன் வகவத்தில்
பணிவோடு பயணிக்கும் குணமும் கொண்டான்

கவிதையொடு நாடகங்கள் புகைப்படமும்
கலைநயமாய் படைத்துவிடும் திறமை உள்ளான்
பவித்திரமாய் ஒளிப்பதிவு செய்து அதனை
பக்குவமாய் ஒளிபரப்பும் தளமும் கொண்டான்
தவிக்கின்ற பேர்களுக்கு கரங்கள் நீட்டி
தகும் வேளை உதவுகின்ற மனமும்
பெற்றான்
புவிமேலே வகவத்தின் புகழும் பரவ
புத்தாக்கத் தோடு இவன் பயணம் செய்வான்


சிந்தனைப் பிரியன் எனும் பெயரில் தன்னை
சிறப்பாக அடையாளம் காட்டும்  இவனை
வந்துநீ கவியரங்கின் தலைமையேற்று
வாழ்த்துக் கள் குவிக்க வேண்டும் என்றோம்
வந்தனன் வாஞ்சையாய் கவிதைப் படையை
சுந்தரன் பின்னால் அழகாய்
அழைத்துச் செல்ல

வலம்புரி கவிதா வட்டத்தின்
89 ஆவது கவியரங்கைத்
தலைமையேற்கும்
சிந்தனைப் பிரியன்
ஜமால்தீன் முஸம்மில்
அழகு தமிழ் சொல்லெடுத்துக்
கொள்

ஆற்றலுடன் 
கவிஞர் மனங்களை 
நீ வெல்
என்றென்றும் எங்கள் இதயங்களுக்குள்
செல்


இப்போது கவியரங்கைத் தலைமேயேற்க
எங்கள் முன் வந்து
நில்


சிந்தனைப் பிரியன்
ஜமால்தீன் முஸம்மில்

செவ்வாய், 13 ஜூன், 2023

கவிதாயினி வாசுகி பி. வாசு

 



வலம்புரி கவிதா வட்டத்தின் 88 ஆவது கவியரங்கு 03/06/2023 கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிதாயினி வாசுகி பி. வாசு அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)


அழகு தமிழ் மொழியெடுக்கும் ஆற்றல் உள்ளார்
அற்புதமாய் கவி படைக்கும் பேறும் கொண்டார்
பழகுதற்கு உயர் பண்பு தன்னை நெஞ்சில்
பக்குவமாய் ஏந்தியெங்கள் முன்னே வந்தார்
முழங்குகின்ற வரிகளிலே ஆழம் வைத்தே
முத்திரைகள் பதிப்பதிலே வெற்றி கண்டார்
வழங்குகின்ற வார்த்தைகளால் உள்ளம் கவர்ந்தே
வகவத்தில் தனக்கென ஓர் இடமும் பெற்றார்



உற்சாகம் கரைபுரள கவிதைபாடி
உள்ளங்க ளிலிவரும் அமர்ந்து கொண்டார்
பற்றோடு ஆற்றல்கள் நிரம்பப் பெற்று
பல்வேறு பணிகளையே தலைமேல் வைத்தார்
குற்றாலம் அருவி என்னும் மொழியின் நடையால்
குழுமங்கள் பலவற்றின் தலைமை யேற்றார்
பழுதில்லா மொழியாலே இணைய தளங்கள்
பக்கங் களில் கூட செவ்வி காண்பார்

புகழ்மாலை பலவற்றை சூடி இந்த
பெண்கவிஞர் வகவத்தின் மேடை வந்தார்
மகிழ்ந்தே நாம்  கவியரங்கத் தலைமை தந்து
மனதார வாசுகியை வாழ்த்து கின்றோம்
நிகழ்காலம் எதிர்காலம் வெல்லும் கவிஞர்
நிரையொன்றை அவர் பின்னே நடக்கச் செய்தோம்
தகைமையுடன் தலைமையினை செய்வார் என்று
தலைநிமிர்ந்தோம்; வாழ்த்தி நின்றோம்

கவிதாயினி
வாசுகி பி. வாசு
கவிதையினால்
நீ இன்று பேசு
காட்டிடு நீ உந்தனது
மாசு !

அன்புடன் அழைக்கின்றேன்
கவிதாயினி
வாசுகி பி. வாசு

        - என். நஜ்முல் ஹுசைன்












திங்கள், 8 மே, 2023

சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி


வலம்புரி கவிதா வட்டத்தின் 87 ஆவது கவியரங்கம் 06/05/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்த சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன் 

            தலைவர்,

            வலம்புரி கவிதா வட்டம்.              (வகவம்)



எழுத்தோடு தன் வாழ்வைப் பிணைத்து இங்கே

எதிர்நீச்சல் பலபோட்டு நிமிர்ந்தவராம்
இழுத்தேதான் பொதுப்பணியை
தனது பணியாய்
இன்பமென வேநினைத்து
உழைப்பவராம்
பழுத்தேதான் இனிக்கின்ற கனியைப் போல
பலபேரின் உள்ளங்களில் வாழ்பவராம்
உழைத்தேதான் வகவத்தை உயர்ந்த நிலையில்
உவகையுடன் வைத்து இங்கே பெருமை கொண்டார்

முதல்அடியை வகவத்தில் நானும் வைக்க
முகமலர்ந்து மனமுவந்து அழைத்தவராம்
நிதமும்தான்  மற்றவரின் ஆற்றல்கண்டே
நிறைமனதால் வாழ்த்திடவே
துணிபவராம்
இதயத்தில் எப்போதும் மற்றவர்க்கு
உதவிடவே வேண்டுமென
நினைப்பவராம்
பதவிக்குள் எம்மையெல்லாம் வைத்து இங்கே
பத்திரமாய்/பக்குவமாய் காத்து நிற்கும்
பெருந்தகையாம்


எண்பத்தி யேழான கவியரங்கம்
எழுச்சியுடன் சிறந்திங்கு நடப்பதற்கு
கண்பொத்தா பொறுப்புடனே பின்னால் நிற்கும்
காத்திபுல் ஹக்கென்னும் இவர்க்கே
நாங்கள்
கண்குளிர தலைமையினை தந்து
மகிழ்ந்தோம்
கண்ணியராம் நாகூர் கனி கவிஞரையே
கவியரங்கத் தலைவரென
அழகு பார்த்தோம்


சத்திய எழுத்தாளர் என்பதிலே
எப்போதும் நெஞ்சுயர்த்தி
நிற்பவரை
வித்தகமே இலக்கியத்தில் புரிந்தேதான்
தசாப்தங்கள் பல கடந்து
இருப்பவரை
இத்தினத்தில் கவியரங்கத் தலைவரென
ஆக்கியே நாம்
இறும்பூதி
பெருமை கொண்டோம்


சத்திய எழுத்தாளர்
வகவ சிரேஷ்ட ஸ்தாபகர்
எஸ். நாகூர் கனி அவர்களே
இது
இன்றைய கவியரங்கைத்
தலைமையையேற்று
நடத்துவதற்கான  அழைப்பு
இந்தக் கவிதையுள்ளங்களுக்கெல்லாம்
தெரியுமே
வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சியில்
நீங்கள் செய்துவரும் உழைப்பு
அடடா அதனால் இன்று நீங்கள்தானே
எங்கள் வகவ கவிஞர்களின் தலைப்பூ !

கவிஞர் கலாபூஷணம்
சத்திய எழுத்தாளர்
எஸ். ஐ. நாகூர் கனி
பேனா கூர் கனி அவர்கள் !


ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சொல் - கவிதை திக்வல்லையில் வாசிக்கப்பட்டது

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்



வாருங்கள் என்றெம்மை அழைத்ததுவே
திக்வெல்லை
தமிழ்த்தென்றல் தலைமையிலே
வந்தோம் நாம் இவ் வெல்லை

தென்றல் கவிதைகளை
சூறாவளி சொற்களிலே
சுமந்து வந்தோம்

கருக்களை மணந்து வந்த
சொற்களினால்
மணந்து நிற்போம்
உங்கள் மனங்களிலே
என்ற நம்பிக்கையில் !




கவியரங்கத் தலைவர்
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
உடன் பாட உடன் பட்ட
கவிஞர்கள்
அதிதிகள்
கேட்ட வுடன்
கைதட்ட காத்திருக்கும்
சபையோர்கள்
அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வந்து நின்றேன்
திக்வெல்லை

வரும் போது என்னோடு
கொண்டு வந்தேன் ஒரு
சொல்லை



சொல் என்னைப் பார்த்து
சொல் என்றது

உங்களைப் பார்த்து
சொல் என்றது

அதனைச்
சொல்ல வந்தேன்

அன்புள்ளங்களை
அள்ள வந்தேன்

குன் என்ற சொல்
உருவாக்கிய உலகம்

கூன் விழாமல் செல்
என்றுதானே
சொல்லித்தந்தது



இக்ரஹ் என்ற
ஒரு சொல்லே

இருளின் ஒளியின்
அர்த்தங்களைப்
பிரித்துக் காட்டியது
உலகத்தைப்
புரட்டிப் போட்டது

ஹிரா
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது

மனித இனத்தில்
மாற்றத்தை ஏற்படுத்திய
சொற்கள்
மறக்கடிக்கப்பட்டு விட்டனவா?

கஃபாவை
தனியே விட்டு விட்டு
சொர்க்கத்தை
இந்தப் பூமியிலேயே
கட்டப் பார்க்கும்
புதிய நம்ரூதுகள், காரூன்கள்

புதிய சொற்களுக்குள்
சின்னாபின்னமாகிறார்கள்

யாரிடமோ அவர்களை
விற்றுவிற்றார்கள்

அவர்களை
வல்லானிடம் நாங்கள்
விட்டு விடுவோம்

எங்களின்
பல சொற்கள்
இருளுக்கு மட்டுமே

எங்களைச்
சொந்தக்காரர்களாக்கி வைத்துக் கொள்கிறது

கனிகளை ஒதுக்கிவிட்டு
காய்களைக் கடித்தே
காலத்தை ஓட்டுகிறோம்

சுவையான கனிகள்
இருக்கின்றன
எங்கள் நாவுகள்
அழுகிய காய்களுடன்
நட்பு பாராட்டுகின்றன

சொல்லை
"ஷெல்" லாக்கி
குண்டு மழை
பொழிகிறோம்


எங்கள்
வாழ்க்கை
சொல் என்ற
வாகனத்தில்தானே
பயணம் செய்கிறது

கரடு முரடான
பாதைகளைக் கடக்க -
சரியாக
கடக்க
சொல் வாகனச் சாரதிகள்
அது
எங்கள் கைகளில்தானே
இல்லை இல்லை
வாய்களில்தானே
இருக்கிறது

நானும் நீங்களும்
எங்கள் சொற்களை
எங்கே இருந்து
பொறுக்கிறோம்
என்பதில்தானே
எங்களுக்கான
அடையாளம் இருக்கிறது

அதுதானே
நாங்கள்
பொறுக்கிகளா இல்லையா
என்று
பிரகடனப்படுத்துகிறது

நான் என்ற சொல்லுக்குள்
ஆயுள் கைதியாய்
போன மானுடம்

சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடியாமல்

மூச்சுத் திணறுகிறது

நாம் என்ற சொல்லுக்குள்
தன்னை வைப்பிலிடும்
மானுடம்
ஒன்றுக்கு நூறாய்
பெருக்கிக் கொள்கிறது

வெறுமனே
சொல் என்று
சொல்லி விடாதீர்கள்

அதனை
மின்சாரமாய்
செலவு செய்யுங்கள்

நீங்கள்
கோர்த்தெடுக்கும்
சொற்களே
உங்கள் வாழ்க்கையை
வார்த்தெடுக்கின்றன


அறிவுரை எனும் பெயரில்
செவிப்பறைகளை
கிழித்தெடுக்கும் சொற்கள்
இதயத்திலிருந்து
வழுக்கி விழுந்து விடுகின்றன

நேரம் தன்னைப்
புதைத்துக் கொள்கிறது
விழிகள்
உறக்கத்திடம்
அடிமையாகிப் போகின்றன

சமூக வலைதளங்களை
வடிகாணாய் உபயோகித்து
சாக்கடைச்
சொற்களை ஓட விடும்
எடுபிடிகள்

துர்நாற்றத்தை
தூய மணமாய் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்

ஆம்
சொல்லுக்குள்
வாசமும், நாசமும்
இருக்கின்றன

பெற்றோருக்கெதிரான
"சீ" என்ற ஒரு சொல்
பல்லாயிரம் பூட்டுக்களால்
மூடப்பட்டிருக்கும்
நரகக் கதவினை
உடைத்தெறியும்
கடப்பாரை  - மறந்து விடாதீர்கள்

சொல்லே உன்னால்
எத்தனைப்
புதுமணத் தம்பதிகள்

விவாகரத்து
சிலந்தி வலைக்குள்

சொற்களை முன்பின்
சரியாக
அடுக்குவதில்
கோலம் ஆட்சி செய்கிறது
அலங்கோலம்
அடித்து விரட்டப்படுகிறது

சினம் கலந்த
சொற்களிலே
சோரம் போய் விடாதீர்கள்

உலகத்தின் சுழற்சிக்கு
சொல் தானே காரணம்

சொல்லால்
எழுந்து நிற்கும்
மனிதன்

அழிந்து போவதும்
சொல்லால்தானே

நேயப்படுத்தும் சொற்கள்
நிறைய இருக்கும் போது
காயப்படுத்தும் சொற்களால்
ஏன்
வாயை நிரப்பிக் கொள்கிறீர்கள்

அன்பு என்ற
சொல்லை மட்டுமே
விதையுங்கள்
இன்பம் என்ற சொல்
உங்கள்
தோளில் கைபோட்டுக் கொள்ளும்

பல வேளைகளில்
சொல்லில்லா மௌனம்
சொல்லுள்ள பேச்சை
வென்று நிற்கிறது

நில் என்றது
என் சொல்

முதலில் நீ
சொன்னபடி நில்
என்றது என் சொல்

அதுவரை
போதும் நில்
என்றது
அது

அதனால் இன்னும்
சொல்லாமல் செல்கிறேன்

என்றாலும்
என் சொல்படி
நான் நிற்க
உங்கள் பிரார்த்தனைச்

சொற்களில்
என்னையும்
பன்னீராய்த் தெளித்துக் கொள்ளுங்கள்

அதற்கு முன்

என் சொல்
மனதை ரணமாக்கும்
கல்லா
ஆத்மாவை மயக்கும்
கள்ளா

சொல் வேந்தர்களே
சொல்லுங்கள் !

நன்றி !

என். நஜ்முல் ஹுசைன்
25/02/2023



வியாழன், 20 ஏப்ரல், 2023

ரமழான் கவிதை - 2023

 





இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/04/2023 ஞாயிறு இடம்பெற்ற கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீனின்"கவிதா நதி" நிகழ்ச்சில் ஒலிபரப்பான ரமழான் கவிதை 


சுகந்தம் நிறைந்த

ரமழான் மாதத்தை

வயிற்றோடு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


என் ஈமானிய சமுதாயமே ! 


உன் இதயத்தைத் தானே

இஸ்லாம் கேட்கின்றது 


உன் அமல்களை

இந்த மாதத்திற்கு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


அதனை

சொல்லித் தரத்தானே

இந்த ரமழான்

உனக்கு முன்னால்

வந்துள்ளது 


உன் இபாதத்துக்கும்

ஈமானுக்கும்

பாலம் போட்டுக் கொள் 


ஒன்றை யொன்றுத்

தொடாத

ஒன்றிலுமே பயனில்லை 


உன் வயிற்றை

நிரப்புவதும் 


அதை காலியாக

வைத்திருப்பதும்தான்

ரமழான் என்று

என் சமுதாயமே

ஏமாந்து போகாதே 


என்றுமே பசித்திருக்கும்

வயிறுகளை

உனக்கு அடையாளம் தெரியவில்லையா ? 


உனது ஈமானை நீ

பரிசோதித்திப்

பார்க்க வேண்டியிருக்கும் 


நீ 

செல்வந்தனாய்

இருக்கும் போதே 


சில்லறைகளுக்காய்

இத்தனை ஜனங்களா ? 


உன் கஜானாவுக்குள்

அழுக்குகளும்

இருக்கின்றனவா என்று

பரிசோதித்துப் பார்த்துக் கொள் 


அவைதானே

அழுக்குகள் சுமந்த 

மனித கோலத்தில்

தெருத்தெருவாய்

அலைகின்றன 


முஸ்லிம் உம்மத்தே

சுயநலம் உனக்குரியதல்ல 


பூனை உறங்கும் அடுப்புகள்

நாளைய உனது

நரக நெருப்பிற்குத்தானே

கட்டியம்

கூறிக் கொண்டிருக்கின்றன 


தோளோடு தோள்

நிற்பது

உனக்கு மட்டுமல்ல 


உனது

செல்வங்களுக்கும் கூட

கடமைதான்

என்று

உணர்ந்து கொள் 


ஒவ்வொரு ஆண்டும்

ரமழான் வரும்

போகும் 


எப்போதும் நீ

முஸ்லிமாகவே இரு ! 


     - என். நஜ்முல் ஹுசைன்

கவிஞர் வதிரி சி. ரவீந்திரன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 86 ஆவது கவியரங்கம் 05/04/2023 கொழும்பு 13 ரோயல் அகடெமியில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


தனக்கென்று தனிப்பாணி தன்னைக் கொண்டு
தமிழுக்கு அணிசேர்க்கும் வகவ கவிஞர்
மனங்கொண்டு அன்றுமுதல் இன்று வரையில்
மகிமையுடன் கவிபடைத்து உள்ளம் வெல்வார்
மனங்கோணா வகையினிலே எல்லோ ரோடும்
மனங் கவர வேநடக்கும் நல்ல மனிதர்
எனக்கென்றால் சம்மதமே என்று கூறி
எம் அரங்கின் தலைமையினைத்
தாங்க வந்தார்

போலீஸாய் தன் கடமை சிறப்பாய் செய்து
பொது மக்கள் சிக்கல்கள் தீர்த்து வைத்தார்
போலி யாய் தான் நடித்து எவரின் மனதும்
புண்படவே செய்யாத பண்பின் ஆளர்
வேலியாய் தான் வாழ்க்கை இல்லறத்தில்
வேட்கையுடன் வருவோரைப் பதிவு செய்து
ஜாலியாய்  அவர் வாழ்க்கை செல்லவென்று
வாழ்த்திவிடும் திருமண பதி வாளர்இவரே

ஈழத்து மெல்லிசையை ஆய்ந்து இவரும்
இன்புறவே நல்லாக்கம் தந்து உள்ளார்
வேழத்தின் பிளிறலுக்கு ஒப்பாய் நல்ல
வேரூன்றும் கவிதைகளும் படைத்தே உள்ளார்
ஆழ்மனது எங்ஙனுமே கவிதை கொண்ட
ஆர்ப்பாட்ட மில்லாத இந்தக் கவிஞர்
சூழ்ந்திருக்கும் நம் கவிஞர் படையை
நடத்த
சுடர்வரிகள் கொண்டேதான் முன்னே வந்தார்

சிதறி ஓடும் சிந்தனைகள்
சீராய் கோக்கும்
பதறி ஓடும் மானிடர்க்காய்
பாட்டுப் பாடும்
வதிரி தந்த கவிதை மகன்
வதிரி சி. ரவீந்திரன்

வரவேற்று உங்களிடம்
அரங்கைத் தந்தோம்
சுவையூற்றும் கவிஞர்களைத்
துணைக்கே  தந்தோம்

கவிஞர் கலாபூஷணம்
வதிரி சி. ரவீந்திரன் அவர்கள்


-   என். நஜ்முல் ஹுசைன்

வியாழன், 2 மார்ச், 2023

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - சிறுகதை

 


தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ! 


                 - என். நஜ்முல் ஹுசைன் 


கத்தாரிலிருந்து அப்பாதான் வீடியோ கோலில் பேசுகிறார். 


கனடா டொரொன்டோவிலிருக்கும் மனோகரன் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு கைபேசியை கையில் எடுத்தான். 


" இயஸ் டேட். ஹவ் ஆ யூ ? ஹவ் இஸ் கத்தார் ? (Yes Dad,  how are you  ? How is Qatar ?)" என்று மனோகரன் மகிழ்ச்சியோடு கேள்விகளை அடுக்கினான். 


அப்பாவின் உருவம் மட்டுமே கைபேசியில் தெரிந்தது. அவரது பேச்சு வரவில்லை. 


"டேட்.... " என்று மீண்டும் அழைத்த போது மறுமுனையிலிருந்து அப்பா பேசினார், 


"மனோ, தமிழில் பேசப்பா, தமிழில் பேசு" என்றார். அவரது குரல் தழுதழுத்தது. 


"டேட் வட் ஆ யூ டெல்லிங்? (Dad what are you telling ?)" என்று மனோகரன் ஆங்கிலத்தில்தான் பேசினான். 


"மனோ நான் சொல்றது விளங்கலையா ? இதுக்கப்புறம் என்னோடு தமிழ்ல பேசுறதென்னா பேசு. இல்லாட்டி பேசாத " 


அப்பாவின் குரலில் கடுமை தெரிந்தது. 


தமிழில் பேசவா ? நானா ? யோசித்தான் மனோகரன். 


அப்பாவுக்கு என்ன நடந்தது ? அப்பா சோமசுந்தரம் இலங்கையில் பெரிய இலக்கியப் பேச்சாளர்தான். அறிஞர் சோமசுந்தரம் என்றால் இலக்கிய உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. இலங்கையில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அப்பாவின் புகழ் பரவித்தான் இருந்தது. அவரது இலக்கியப் பேச்சைக் கேட்க மிகவும் பெரும் தொகையானோர் கூடுவர். அப்பாவுடைய இலக்கிய உரைகள் யூடியூப்பிலெல்லாம் மிகவும் பிரசித்தம். அப்பாவுக்கு தமிழ் எப்படித் தெரியுமோ அதே அளவு ஆங்கிலமும் தெரியும். வெள்ளைக்காரன் போல் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவரைப் பாராட்டாதோர் யாருமில்லை. 


அப்பா மனோகரனுடன் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் பேசுவார். 


மனோகரன் கனடாவுக்கு வந்து இப்போது பதினேழு வருடங்கள். ஊரிலிருந்த போது தமிழில் மிகவும் நன்றாகப் பேசிய மனோகரன் கனடா வந்த இந்த பதினேழு வருடங்களில் தமிழை விட்டும் மிகவும் தூரமாகிவிட்டான். அவனைச் சூழவுள்ளோர் அனைவருமே ஆங்கிலத்திலும் வேற்று மொழிகளிலும் பேசக் கூடியவர்களே. அதனால் தமிழில் பேச வேண்டிய தேவை அவனுக்கு இருக்கவில்லை. இப்போது அவன் சிந்திப்பது கூட ஆங்கிலத்தில்தான். அவனது மனைவியும் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்த போதும் அவளும் கூட ஆங்கிலத்தில் அத்துப்படி. அதனால் அவர்களது ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் கூட வீட்டில் ஆங்கிலத்திலேயே கதைத்தனர்.  மேலதிகமாக பிரெஞ்ச், ஜப்பானிய மொழி போன்றவற்றையும் சரளமாக பேசினர். 


கத்தாருக்குக் கூட அப்பா இலக்கிய சொற்பொழிவுக்காகத்தான் சென்றிருந்தார். அங்கிருந்த தமிழ்ச் சங்கம் அவரை அழைத்திருந்தது. 


அடுத்த வருடம் கனடாவுக்கும் வர இருக்கிறார். இங்கும் கூட அப்பாவின் சொற்பொழிவுகள் பல இடங்களில் நடக்கும். 


எப்போதுமே மனோவுடனும், மருமகளுடனும், பேரப் பிள்ளைகளுடனும் மிடுக்கான ஆங்கிலத்தில் பேசும் அப்பா, 


" மனோ தமிழில் கதைக்கிறதென்றால் கதை. இல்லாட்டி கதைக்காதே " என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. 


"அப்பா..." இத்தனை நேரம் 'டேட்' என்று அழைத்த மனோகரன் இப்போதுதான் "அப்பா" என்று அழைத்தான். என்றாலும்கூட அதற்கு மேல் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 


"அப்பா டோன்ட் கெட் எங்க்ரி.  நெக்ஸ்ட் டைம் ஐ ல் டோக் டு யூ இன் டமில் (அப்பா கோபப்படாதீர்கள் அடுத்த முறை தமிழில் பேசுகிறேன்)" என்று தயங்கித் தயங்கி ஆங்கிலத்தில் சொன்னான். 


அவனுக்குத் தெரியும் அவனது அப்பா மிகவும் அன்பானவர்.  இதுவரை ஒரே மகனான அவனை எப்போதுமே கடிந்து பேசியதில்லை. இதுவரை காலம் இல்லாமல் இன்று இப்படிப் பேசுகிறார் என்றால் அவரது மனதைப் பாதிக்கும் ஏதாவது நடந்திருக்க வேண்டும். 


"அடுத்த முற பேசும் போது என்னோட தமிழ்ல பேசு. அப்படி பேசினாதான் நான் பேசுவேன் " என்று சொல்லிவிட்டு அப்பா தொடர்பைத் துண்டித்தார். 


அப்பா போனை வைத்ததும்  மனோகரன் தமிழில் சில வார்த்தைகளை பேச முயற்சி செய்தான். அது மிகவுமே சிரமமாக இருந்தது. 


'அடடா இலங்கையில் எவ்வளவு அழகாக பேசிய தமிழ். என்ன நடந்தது இப்போது ?' தனக்குத் தானே

கேட்டுக் கொண்டான் மனோகரன். 


அப்பாவிடம் வந்த இந்த திடீர் மாற்றத்தின் காரணமென்ன ? இந்தக் கேள்வியும் மனோகரனை குடைந்துக் கொண்டே இருந்தது ?



நான்கு நாட்களுக்குப் பிறகு மனோகரனின் அப்பா மீண்டும் பேசினார். 


இப்போது அவர் இலங்கையிலிருந்தார். 


"அப்பா....... சொல்லுங்க......." மிகவும் தட்டுத் தடுமாறி மனோகரன் தமிழில் பேசினான். 


"மனோ நான் தமிழ்ல பேசுறது விளங்குதுதானே ?" 


"ஆம் அப்பா... ஆமா அப்பா... " மனோகரனின் வாயிலிருந்து சொற்கள் தடுக்கிக் கொண்டுதான் வந்தன. என்றாலும் அவனுக்குத் தமிழ் விளங்கியது. சிரமத்தோடு பேசவும் முடிந்தது. 


"அப்பா ஏன் தீடீருன்னு இப்படி பேசுறன் என்னு பாக்குறியா அதுக்கு காரணம் இருக்கு .....:" அப்பா பேசிக் கொண்டு போனார். மனோகரன் காதைத் தீட்டிக் கொண்டு ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் தமிழ். ஏதாவது சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போய் விடக் கூடாதே. 


"நான் கத்தாருக்கு போய் தமிழ் சங்கத்துல மூனு நாள் தொடர்ந்து பேசினேன்.  எனது பேச்ச கேட்க நிறைய கூட்டம் வந்திருந்தது. நிறைய இந்திய தமிழர்களும் இலங்கை தமிழர்களும் வந்திருந்தாங்க. இந்த மூனு நாள் பேச்சிலயும் ஒரு பையன அவதானிச்சன்.  மிகவும் ரசிச்சு எனது பேச்ச கேட்டுக்கொண்டிருந்தான்.  எனது பேச்சுக்கிடையே பலமுறை நான் அவனப் பார்த்தேன். அவனப் பார்த்தா ஒரு கத்தார் அரேபிய பையனப் போல இருந்தான். அவன் எப்படி எனது பேச்ச இப்படி ரசிக்கிறான் என்ற சிந்தன எனது பேச்சு முழுவதும் எனக்குள்ள ஓடிக் கொண்டே இருந்தது. 


நிகழ்ச்சி முடிஞ்சதும் பலர் என் அருகே வந்து கைகூப்பி என்னைப் பாராட்டிப் பேசினர். எல்லோரையும் மதித்து நான் பேசிக் கொண்டிருந்தாலும் எனது கண்கள் அந்த வாலிபனைத் தேடிக் கொண்டிருந்தது.  நான் நினைத்தது போலவே என் அருகே வந்த அந்த வாலிபன் அவனது நெஞ்சிலே கை வைத்து என்னுடன் பேசினான் 


"ஐயா நா உங்க பெரிய ரசிகன். யூடியூபில் உங்கள் பேச்சையெல்லாம் விடாமல் கேட்பேன்" அழகிய தமிழில் அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு எனது கண்கள் அகல விரிந்தன. 


நான் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டேன், 


"தம்பி நீங்க யாரு? உங்க பெயர் என்ன ? " 


"என்ற பெயர் சாபித் அஹமத்.  நான் இங்க கத்தார்தான்" 


"அடடா கத்தாரா ?" ஆச்சரியத்தோடு கேட்டேன். 


"ஆமாங்க. நான் பிறந்து வளர்ந்தது, பாடசாலைக்கு போனது எல்லாமே கத்தார்லதான்" 


எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல்ல. 


"கத்தாரா ? இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே எப்படி ? " ஆவலோடு கேட்டேன். 


"அது எங்க உம்மா, வாப்பா இலங்கைதான்.  வாப்பா இங்க பெரிய அமெரிக்க நிறுவனத்துல மனேஜர்.  உம்மா பிரபல பாடசாலைல இங்கிலிஷ் டீச்சர்" 


ஆவலோடு எனது பேச்சைக் கேட்க வந்தவனின் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருந்தேன். 


"நான் இப்படி தமிழ் பேசுவதற்கு எங்க உம்மாதான் காரணம். எங்க உம்மா திருமணம் முடிச்ச உடனே இங்க வந்துட்டாங்க. எங்க உம்மாவும் வாப்பாவும் இங்கிலிஷ்லதான் பேசிக் கொள்ளுவாங்க. ஆனா நான் அவங்களுக்கு மூத்த பையனா பொறந்த போது எங்கட வாப்பாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டாங்க. 


எங்க வீட்டில இதுக்குப் பிறகு நாங்க தமிழ்லதான் பேசனும்.  ஏன் இப்படி ஒரு திடீர் முடிவுன்னு வாப்பா கேட்ட போது உம்மா சொன்னாங்க

நாங்கெல்லாம் தமிழ்ல படிச்சுத்தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். அதுக்குப் பிறகு வேறு மொழி படிச்சாலும் அத எல்லாம் எங்களுக்கு புரிய வச்சது தமிழ்தான். எங்கட மார்க்கத்த கூட நாங்க தெரிஞ்சு கொண்டது தமிழாலதான். அதுதானே எங்கட தாய் மொழி. அது எங்கட முன்னேற்றத்தின் ஏணி. அத நாங்க வீட்டுல பேசாம போனா எங்கட பிள்ளைகளுக்கு தமிழ் என்ற மொழியே தெரியாம போகும். இந்த நாட்டுல அவங்க என்னென்னமோ படிப்பாங்க.  ஆனா அவங்களுக்கு நாங்கதான் தமிழ கற்றுக் கொடுக்கோனும். 


நாங்க இலங்கைக்கு போனா அங்கவுள்ள எங்கட உம்மா வாப்பாவுக்கு, உறவினர்களுக்கு பெருசா இங்கிலீஷ் விளங்காது. எங்கட பிள்ளைகள் அங்க போய் இங்கிலீஷ்லயே பேசிக் கொண்டிருந்தா அவங்க எப்படி இவங்களோட மனம் விட்டுப் பேசுவாங்க. உண்மையான பாசத்த காட்டுவாங்க. எங்கட உம்மா வாப்பாக்கும் எங்கட பிள்ளைகளுக்கும் இடையில எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. எங்கட தாய் மொழிய எப்போதும் எங்கட பிள்ளைகள் மறக்கவும் கூடாது. என்று சொல்லி எங்கட உம்மா வாப்பா வீட்டில தமிழ்லதான் பேசுவாங்க. அதுமட்டுமல்ல தமிழும் படிச்சுத் தந்தாங்க. நான் மட்டுமில்ல என்ட தம்பி, தங்கச்சி எல்லாமே நல்லா தமிழ் பேசுவாங்க. அதோட இங்க நாங்க இங்கிலிஷ் அரபு மொழிகளையும் படிச்சிருக்கிறோம். மலையாளமும், இந்தியும் பேசுவோம் " என்று அந்த வாலிபன் தனது வரலாறை சொல்லிக் கொண்டிருந்த போது எனது தலை சுற்றியது. 


இங்க நான் மட்டும் தமிழ் பேச்சாளரா இருந்து கொண்டு என்ட பிள்ளைகள தமிழ்ல பேசக் கூட முடியாம ஆக்கிட்டனே என்று நான் அடைஞ்ச கவலைகக்கு அளவேயில்ல. 


எங்கோ உள்ள ஒரு தாய், தாய் மொழிய பத்தி எனக்கு பாடம் நடத்தியிருக்கா.  எனது மனச் சாட்சி என்ன குத்தி குதறிக் கொண்டிருக்குது. 


அடே மகனே மனோ நீ இனிமே தமிழ்லயே பேசு. என்ட பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ படிச்சுக் கொடு. 


நானும் அம்மாவும் அடுத்த முற கனடாவுக்கு வரும்போது என்ட பேரப் பிள்ளைகளோட தமிழ்லதான் கொஞ்சி விளையாடணும் " 


கரகரத்த குரலில் அப்பா பேசினார் 


அந்த சத்தியத்தை முழுதும் உணர்ந்து கொண்ட மனோகரன்,

"நிச்சயமா அப்பா நிச்சயமா " என்று கண்ணீர் மல்க கூறிய போது அதில் நம்பிக்கையின் வெளிச்சம் தெரிந்தது.

(ஞானம் - மார்ச், 2023)