எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 7 அக்டோபர், 2026

மாறியது நெஞ்சம் - சிறுகதை

 



மாறியது நெஞ்சம்



- என்.நஜ்முல் ஹுசைன்



அமீர் கவலையோடு நின்று கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. இப்படியொரு நிலைமை தனக்கு வருமென்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.

" உம்மா.... இப்பவே வேணாம் உம்மா. இப்பவே கல்யாணம் எல்லாம் வேணாம் உம்மா. நா கொஞ்ச நாள் இப்படியே இருக்கேன்"  அமீர் தாயாரிடம் கெஞ்சினான்.

"இல்ல அமீர் நா சொல்றத கேளுங்க.  இப்ப எனக்கு நீங்க தொண.  உங்களுக்கு நா தொண. நா கண்ண முடிடா நீங்க தனிச்சிருவீங்க.  இப்ப நா இருக்கிறதால ஒங்களுக்கு வெளங்காது. அதனாலதான் சொல்றன்.  நா பாத்த பொண்ண கல்யாணம் பண்ணுங்க. அவ நல்ல அழகான பொண்ணு.  ஒங்களுக்கு ஏத்த ஜோடி"

உம்மா சொல்வதிலும் நியாயம் இருந்தது. இருந்தாலும் இப்போதிருக்கும் ஆட்டோவை வைத்துக் கொண்டு ஒரு இல்லற வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியுமா ?

"அதெல்லாம் நீங்க கவலபடாதீங்க. நா பாத்த பொண்ணு பரீதாவும் ஏழ குடும்பத்தில உள்ள பொண்ணுதான். உங்கள அனுசரிச்சு போவா "

உம்மாவின் நச்சரிப்பு காரணமாக அமீர் பரீதாவை திருமணம் முடிக்க சம்மதித்தான். மார்க்கத்தில் பிடிப்புள்ளவன் அமீர். சீதனம் வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் முடித்தான்.

உம்மாவின் சொல்லைத் தட்டாதவன் என்பதால் பெண்ணைப் பார்க்காமலே திருமணம் முடித்தான்.

உம்மா சொன்னது உண்மைதான். பரீதா மிகவும் அழகாக இருந்தாள். அமீர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.

ஒரு சில மாதங்கள் அவர்களது இல்லற வாழ்க்கை இன்பமாக கழிந்தது.  அவனும், அவனது தாயாரும் இருக்கும் வீட்டிலேயே தனது மனைவியுடன் வாழ ஆரம்பித்தான்.

நாள் செல்ல செல்ல பரீதாவிடம் ஒரு மாற்றத்தைக் காண ஆரம்பித்தான் அமீர்.  ஏழைக் குடும்பத்திலிருந்து பரீதா வந்திருந்தாலும்கூட அவளிடம் ஒரு ஆடம்பர உணர்விருந்தது. அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிட ஆசைப்பட்டாள்.  ஆரம்பத்தில் பரீதாவின் ஆசைக்கு இணங்கி அவ்வாறு அமீர் அழைத்துச் சென்றாலும் அவனால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

"எப்ப பார்த்தாலும் ஒங்களுக்கிட்ட பணம் இல்லதான்.  ஆசையா ஒரு ஹோட்டல்லுக்கு போய் தின்னுட்டு வருவோமென்டா அதுக்கு இப்படி யோசிக்கிறீங்க. பொண்டாட்டிட ஒரு சாதாரண ஆசையை நிறைவேற்ற ஏலாத நீங்களெல்லாம் என்னத்துக்கு கல்யாணம் முடிக்கிறீங்க ?"

பரீதாவின் வாய் நீண்டது. அவளிடமிருந்து வித்தியாசமான வார்த்தைகள் வெளிவர ஆரம்பித்தன.

"யா அல்லாஹ் என்னடா ஏன்ட மகனுக்கு வந்த சோதன.  நானே ஏன்ட மகன்ட வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டுட்டேனே "
அமீரின் தாயார் புலம்பத் தொடங்கினார்.

பரீதா பல வேளைகளில் அவளை கொடுமைப்படுத்தியதையும், மோசமான வார்த்தைகளால் திட்டியதையும் மகனிடம் வெளிக்காட்டாமல் பொறுமை காத்த தாயால் தனது மகனை தனது மருமகள் மோசமான வார்த்தைகளால் பேசியதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

ஆம் இப்போதுதான் அமீரும், அவனது தாயாரும் அவதானித்தார்கள். பரீதாவிடம் முக அழகிருந்தது.  அகம் அழுக்காகி இருந்தது.

அமீர் தனது மனைவியை சமாளிக்க ஆட்டோ ஓட்டுவதோடு இன்னும் சில பல வேலைகளையும் செய்ய ஆரம்பித்தான்.  பரீதாவுக்கு அடிக்கடி புதிய ஆடைகள் வாங்க வேண்டும். தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் போனிலும்,  டீவியிலும் காலத்தைக் கடத்த வேண்டும்.

அவளது ஆடம்பரத்துக்கு ஈடு கொடுக்க  முடியாமல் அமீர் முள்ளும் தோலும் ஆனான். பரீதாவோ மொழு மொழுவென்று கொழுத்துக் கொண்டே போனாள்.

இந்த இடையில்தான் இந்தச் சம்பவம்,

"முடியாது பரீதா, முடியாது,  ஒரு நாளும் அத செய்ய முடியாது"

அழுத்தமாக சொன்னான் அமீர். அதைவிட அழுத்தமாக கத்தினாள் பரீதா,

"இல்ல கட்டாயமா இத நீங்க செய்யதான்.  இது நீங்க சம்பாரிச்சது.  இல்ல அல்லாஹ்வா ஒங்களுக்குத் தந்தது. இத நீங்க கட்டாயம் எடுக்கலாம். இத எல்லாம் வித்து எனக்கு புதிய நகையும் பணமும் தாங்க. நா சந்தோஷமா இருப்பேன்"

"பரீதா ஒருக்காலமும் அது நடக்காது. அத தொடுறது ஹராம். மத்தவங்கட பதுவாவ சம்பாதிக்கிற வேல. அத நா ஒருநாளும் செய்ய மாட்டன்"

"பெரிய ஒங்கட ஹராமும், ஹலாலும்.  ஊர்ல எவ்வளவோ பேர் எத்தன ஜில்மால் பண்ணி வாழ்றாங்க. இது ஒங்கள தேடி வந்தது. நீங்க இவ்வளவு மடயனா இருப்பீங்கெண்டு நா நெனக்கவே இல்ல. எங்கட வாப்பாட கரச்சலுக்குத்தான் ஒங்கள முடிச்சன்"

வாய் தர்க்கம் நீண்டு சென்றது.

இவ்வளவுக்கும் காரணம் அமீரின் ஆட்டோவில் யாரோ மறதியாக விட்டு விட்டுப் போன தங்க நகைகள்.  குறைந்தது பத்துப் பவுண்களாக இருக்கும். அமீர் ஆட்டோவை வீட்டில் பார்க் பண்ணும் போதுதான் பார்த்தான். அங்கே கீழே ஒரு பேக் இருந்தது. திறந்துப் பார்த்தால் இந்தத் தங்க நகைகள். அதனைக் கேட்டுத்தான் பரீதா அடம்பிடிக்கிறாள்.  அல்லாஹுவுக்குப் பயந்த அமீர் அதில் கை வைப்பானா?

எத்தனையோ பேர் அன்று அவனது ஆட்டோவில் சென்றனர். யார் இதனை விட்டுச் சென்றிருப்பார் ? உரியவரிடம் இதனை ஒப்படைக்க வேண்டும். பிழையான ஒருவரின் கைகளில் இது போய்விடக்கூடாது.

பரீதாவின் கைகளுக்கு அகப்படாத வகையில் நகைகளை ஒளித்து வைத்தான். மூன்று நாட்கள்  உரியவரைக் கண்டு பிடிக்க அரும்பாடுபட்டான் .

ஓர் ஏழைக் குடும்பத்திலுள்ள ஒருவர் அவரது மகளது திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள். எப்படியோ தவறி ஆட்டோவில் விழுந்து விட்டது. எங்கே விழுந்தது என்பதுகூட தெரியாமல் கலங்கிப் போய் நடைபிணமாய் இருந்தபோதுதான் அவர்களை அடையாளம் கண்டு நகைகளை ஒப்படைத்தான்.

"மகன் ஒங்களபோன்ட நல்லவங்களுக்கு அல்லாஹ் எந்தக் கொறையயும் வைக்க மாட்டான். நீங்க நல்லா இருப்பீங்க"  கண்ணீரோடு அந்தக் குடும்பமே துஆ கேட்டது. ஆத்ம திருப்தியோடு திரும்பி வந்த அமீரின் மனதில் ஒரு மூலையில் வேதனை வேர்விட்டு ஓடிக் கொண்டிருந்தது.

நகைகளை ஒப்படைத்த கதையை கேட்டதுமே பரீதா பொங்கி எழுந்தாள்

"நீங்க எல்லாம் என்ன மனுஷன். பொண்டாட்டிட ஆசைய நிறைவேத்தாமா பெரிய தியாகியா வந்து நிக்கிறாரு.  இந்த மனுஷனோட எல்லாம் எனக்கு வாழ ஏலாது. வாழ ஏலாது. நா இப்பவே ஏன்ட வாப்பாட ஊட்டுக்குப் போறன். இதுக்கெல்லாம் ஒரே வழி டிவோர்ஸ்தான் "

"அவசரப்படாதீங்க பரீதா அவசரப்படாதீங்க. கொஞ்சம் நிதானமாக இருங்க"  அமீரும், அவனது உம்மாவும் எவ்வளவோ கெஞ்சியும் அந்த செவிட்டுக் காதுகளில் விழவே இல்லை. தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.

அமீரும், உம்மாவும் பலமுறை அவளது வீட்டுக்குப் போய் கூப்பிட்டும் அவர்களை அவமானப்படுத்தியே அனுப்பி வைத்தாள். பாவம் அவளது தந்தையோ வாயைத் திறக்க முடியாத ஊமையாக இருந்தார்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில் விவகாரத்துக்கான நோட்டீஸ் வந்தது. காதியார் கூட பரீதாவை சமாதானப்படுத்த முயன்றார். பரீதா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இன்று மூன்றாவது தவணை. எப்படியும் காதியார் விவாகரத்தை அறிவித்துவிடுவார்.  அதற்காக இன்று காலையிலேயே அமீரும், உம்மாவும் காதி கோர்ட் வந்து விட்டார்கள். மறுமுனையில் பரீதாவும், வாப்பாவும் காத்திருந்தார்கள்.

அன்று காதி கோர்ட்டில் எக்கச்சக்கமான விவாகரத்து வழக்குகள் எங்களது சமுதாயத்தின் இன்றைய நிலையை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

காலையிலே வந்த அமீரின் வழக்கை காதியார் எடுத்தப்போது ஏறக்குறைய அது மாலை ஐந்து மணியைத் தாண்டியிருந்தது.

தீர்ப்பு வழங்க தயாரான நிலையில் பரீதாவைப் பார்த்து காதியார் கேட்டார்,

"பரீதா இதுதான் இறுதி சான்ஸ். நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க ?"

"சேர், சேர்,  நா நா இவரோடு சேர்ந்து வாழுறன்.  எனக்கு டிவோர்ஸ் வேணாம். டிவோர்ஸ் வேணாம்." பதறிக் கொண்டு சொன்னாள் பரீதா.

பரீதா என்ன சொல்கிறாள் என்று அங்கிருந்த யாருக்குமே விளங்கவில்லை.

பரீதா திரும்பத் திரும்பச் சொன்னாள்.

"எனக்கு டிவோர்ஸ் வேணாம். டிவோர்ஸ் வேணாம்."

காதியாரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

"ஏன் என்ன காரணம் ? இப்ப டிவோர்ஸ் வாணாம் என்றுறீங்க?"

"நா இன்டக்கி காலையில இருந்து இங்க நடக்குற வழக்க எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதில எத்தன மாப்பிளமார் குடுகாரங்க.  எத்தன பேர் ஏமாத்துக்காரங்க. எத்தனப் பேர் பொண்டாட்டிமார கொடும செய்றவங்க.  ஆனா ஆனா ஏன்ட மாப்புள்ள எவ்வளவு நல்லவரு. எனக்கு ஒருநாள் கூட ஏசியில்ல. கைய நீட்டி அடிச்சில்ல. எப்படியாவது நா கேக்குறத எல்லாம் தாறவராவும், அன்பா நடப்பவராவும்தான் இருந்திருக்கிறார். அவர் ஒரு நேர்மையான மனிதர். ஊராஊட்டு பொருளுக்கு ஆசையில்லாதவர். நாதான் மிகவும் மோசமா நடந்திருக்கிறேன்.  மறுபடியும் ஏன்ட வாப்பாட ஊட்டுக்குப் போன பொறவுதான் தெரிஞ்சிச்சு நா ஏன்ட மாப்பிளட ஊட்டுல ராணி மாதிரி வாழ்ந்திருக்கேன் என்று.  நா இதுக்குப் பொறவு ஏன்ட மாப்பிளயோட சேர்ந்து அவர் மனம் நோகாம அடங்கி நடப்பன்.என்ன அவரோட சேர்த்து வைங்க. எனக்கு டிவோர்ஸ் வேணாம்"  அவள் குலுங்கி அழுதாள்.

காதியார் இப்போது வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விவாகரத்து வழக்கை ரத்து செய்தார்.


"மகன் ஒங்களபோன்ட நல்லவங்களுக்கு அல்லாஹ் எந்தக் கொறையயும் வைக்க மாட்டான். நீங்க நல்லா இருப்பீங்க"  என்று நகையைத் திரும்பப் பெற்ற குடும்பம் செய்த துஆ அமீரின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.


- என். நஜ்முல் ஹுசைன்

13/08/2026

கருத்துகள் இல்லை: