எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 1 நவம்பர், 2026

கவிஞர் ஈழகணேஷ்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 126 ஆவது கவியரங்கு 26-09-2026 கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது

கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ஈழகணேஷ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்

வலம்புரி கவிதா வட்டம்

வகவம்



எங்களின் உறவாய் ஆகி

ஏற்றமேபெற்று அன்றே

எண்பத்தி ஓராம் ஆண்டே

இணைந்திவன் பயணம் செய்தான்

தங்கமாய் வகவ மேடை 

தகதகவென்று மின்ன

தனித்துவ திறமையோடு 

தன்நடை காட்டி நின்றான்

பங்கமே இன்றி இவனும்

பாடிய கவிதை திறத்தால் 

பக்கமே படையும் சேர்த்து

பெருமிதம் சூடிக் கொண்டான் 


நூல்களின் உள்ளே நுழைந்து

நுண்ணறிவோடு பெற்ற

நுணுக்கங்க ளாலேபலவாய்

நெறிகளைக் கற்றுக் கொண்டான்

நூல்களின் குவிய லுக்குள்

நாடிய வாழ்க்கை தன்னை

நலமுடன் வாழ்ந்ததாலே 

நல்லபேர் பெற்றே எழுத்தில்

ஆள்பவர் பலரை நெஞ்சில்

ஆசையாய் அருகில் வைத்தான்

தோள்களில் வகவம் தாங்கி

தோழனாய் நிமிர்ந்து நின்று

தொய்விலா வளர்ச்சி காண

தெம்புடன் சேவை செய்தான்


ஆழமாய் இவனை நெஞ்சில் 

அழகுற வைத்து நாங்கள்

அடிக்கடி நன்றி சொல்லி

எம்மைநாம் உயர்த்திக் கொள்வோம்

வேழமாய் எமக்கு வாய்த்த 

வியத்தகு கவிஞர் ஈழ

கணேஷுக்கு தலைமை தந்து

அரங்கினை அலங் கரித்தோம்

நாளுமே வகவம் தனக்காய்

நயந்திவன் செய்த தியாக

நாள்களை நாங்கள் எண்ணி

நெகிழ்ந்துநாம் உள்ளம் மகிழ்ந்தோம்


கவிஞர் ஈழகணேஷ்

இன்றெங்கள் கவியரங்கு

நூற்று இருபத்தி ஆறு

வகவத்தின் ஒரு தூணாய் 

நீ அமைந்தது

நாம் செய்த பெரும் பேறு


வருக


கவிஞர் ஈழகணேஷ்



26/09/2026







கருத்துகள் இல்லை: