எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 65 ஆவது கவியரங்கு 08/02/2020 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது
கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கம்பன் கழக "மகரந்தச் சிறகு" வென்ற பன்னூலாசிரியர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

என். நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வலம்புரி கவிதா வட்டம்  (வகவம்)


ஆளுமை என்று சொல்லி
அடையாளம் காட்டச் சொன்னால்
ஆளையே தேடி அலைய
அவசியம் இல்லை இவரை
ஆர்வமாய்
காட்டலாமே முரண்பட யாருமில்லை

எத்தனை காலம் இந்த
இலக்கிய உலகில் ஆட்சி
எத்துணை துறைகள் தொட்டு
காட்டினார் இவரின்  மாட்சி
முத்தென நூல்கள் தந்து
முடியினைச் சூடி இவரும்
முத்திரைப் பதித்தே பரிசு
பலமுறை பெற்றுக் கொண்டார்

பத்திரிகை வானொலியாய் மட்டுடன் இருந்தபோது
பத்திரப்படுத்திப் பெயரை
மனதினில் பதிய வைத்தார்
ஓட்டமாய் ஓடி ஓர்நாள்
வகவத்தின் வாசல் வந்து
ஓட்டமா வடியின் அஷ்ரப்
என்றவர் நண்பரானார்

எத்தனை பரிமாணங்கள்
எடுத்திவர் எழுந்து நின்றார்
எழுத்தினில் மட்டுமல்ல
ஒலி ஒளி பரப்பில் கூட
தனக்கென இடமும் பிடித்தார்

வகவத்தின் கவி யரங்கில்
வளமான கவிதை இறகால்
வருடிய இவரும் இன்று
மகரந்தச் சிறகுப் பூட்டி
மாண்புடன் தலைமை ஏற்றார்

அறுபத்தி ஐந்தில் நிற்கும்
அற்புத வகவ மேடை
அழகுற தலைமை யேற்க
அஷ்ரப்சி ஹாப்தீன் கவிஞர்

கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்
வகவப் படையொன்று
உங்கள் பின்னால்
அவர்களை வாழ்த்திடுங்கள் உங்கள் "பென்"னால்

சனி, 21 டிசம்பர், 2019

கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

11 – 12 – 2019 அன்று நடைபெற்ற 63 ஆவது வகவ கவியரங்கின்போது கவியரங்கத் தலைமையையேற்று நடத்துமாறு கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

தமிழோடு விளையாடி தமிழாலே தலைசீவி
தன்பெயரை வைத்திருக்கும்  இவரை
அமிழ்தான சொல்லெடுத்து அழகுதமிழ் பாட்டெழுதி
ஆண்டாண்டு புகழ் பெற்ற இவரை
கமழுகின்ற வரியெடுத்து  வாருங்கள் நீங்களென
கரம் விரித்து வரவேற்றோம் இன்று
நமதுள்ளம் தான்மகிழ்ந்து தந்தோமே நம்அரங்கு
தலைமையினை ஏற்றிடுவீர் என்று

அறுபத்தி மூன்றெங்கள் கவியரங்கு நடைபயின்று
அற்புதமாய் தலைநிமிர்ந்து நிற்க
சிறப்புடனே வாருங்கள் தலைமையினை ஏற்றிடுங்கள்
சீராகவே நாமும் அழைத்தோம்
மறுப்பேதும் காட்டாமல் சரியென்று உட னிசைந்து
மனம்மகிழ்ந்து இக்கவிஞர் வந்தார்
பொறுப்போடு வகவத்தின் கவியரங்கைத் தலையேற்று
பொன்மனதைத் தான் காட்டி நின்றார்

அக்கரையூர் இவருக்கு ஊராகி நின்றதுவே
அக்கறையோ தமிழ்மீது என்றும்
எக்கரையும் தொடுகின்ற மொழியாட்சி இவருக்கு
எம்மனதை இன்று வெல வந்தார்
அக்கரையூர் அப்துல்குத்தூஸ் அருட்கவியே உங்களுக்கு
அகமகிழ்ந்தே கவியரங்கைத் தந்தோம்
சர்க்கரையாய் மொழியெடுத்து எங்கள் செவிநிரப்புங்கள்
சந்தோஷம் எமை வந்து தழுவ

வலம்புரியின் கவிஞர்கள் அணிஉங்கள் தலைமையிலே
வளம்சேர்ப்பார் கவியரங்கில் இன்று
சிலம்போசை போல்நீங்கள் தமிழினிலே சொல்லெடுத்து
சிறப்பாக்குங்கள் உங்கள் தலைமை
நலம்பெறட்டும் கவியரங்கு நல்லபெயர்தான் பெறட்டும்
நானிலத்தில் வகவத்தின் சிறப்பு
நிலைபெறட்டும்; அருட்கவியே தலைமையினைத்தான் ஏற்று
நீண்டபுகழ் தான் பெறுக என்றும்

அருட்கவி அக்கரையூர் அப்துல் குத் தூஸு
பலமேடை கண்ட உங்களுக்கு
இத்தலைமை ஒரு தூசு
என்று காட்டுங்கள் !

சனி, 23 நவம்பர், 2019

சுலைமா ஏ. சமி



நாவலாசிரியை திருமதி சுலைமா   சமி இக்பால் அவர்களின் "உண்டியல்"
நூல் வெளியீட்டு விழாவில் வாசித்த கவிதை




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

சுலைமா சமி இக்பால்
எழுத்தால் வளைத்துப் போட்டு
இருக்க வைத்துக் கொள்கிறார்
தன்பால்

அடடா
எத்தனை வருடங்கள்
இவர் கரங்கள்
எழுத்தை சுவீகரித்துக் கொண்டு

இன்னும்
மின்னும்
எழுத்துகளுக்கு
சொந்தம் கொண்டாடிக் கொண்டு

களைப்பும் சலிப்பும்
இவர் பாதைகளில்
இல்லை
இல்லவே இல்லை

அதனால்தானே
வாசகர் நெஞ்சங்களை
கொண்டு போகிறார் கொள்ளை

குவிந்திருக்கும் இவர்
எழுத்துகள்
குவித்திருக்கும் புகழ்

நம் நாட்டிலும்
வெளிநாடுகளிலும்
ஈட்டியுள்ள புகழ்
ஈட்டி உள்ள புகழ்
ஆம் அத்தனை கூர்மையானது

கூர்
மை தானே
இவரது உடைமை

அந்த
 எழுத்துகளால்தானே
குடைந்தெடுக்கிறார் மனங்களை

இவர் கதைகளை
வாசித்து முடிக்கலாம்
யோசித்து முடிக்க முடியுமா?

சிந்தனை கருத்துகளை
சுமந்த
சுலைமா சமியின் கதைகள்
படித்தவுடன் முடிபவை அல்ல எங்கள் உள்ளங்களில்
சிந்தனைகளை முடிபவை
முடிசூடிக் கொள்பவை

"உண்டியல் " சிறுகதை
தொகுதி தந்திருக்கிறார்
 உண்டு இயல் தன் கதைகளிலே
என்று நிரூபித்திருக்கிறார்

பொழுதுபோக்குக்காய் படிப்பவர்களே
சுலைமா சமி
என்ற இந்த ஆளுமையின்
கதைகளைப் படிக்க வேண்டாம்

இவரது கதைகள்
பொழுதை ஆக்குபவர்களுக்கான
கதைகள்

நல்ல பொழுதை
ஆக்குவதற்கான கதைகள்


இவர் கதைகளிலே
தேவதைகள் இல்லை
தினம் வதை படும்
மானிட   ஆத்மாக்கள்தான்
இருக்கின்றன

அங்கே
நீங்களும் நானும்
இருக்கிறோம்

அணுஅணுவாய்
ஆய்ந்து எழுதியுள்ளார் -
மானுட உணர்வுகளை

படித்து விட்டு
வீசி விடாதீர்கள்
படிய வையுங்கள்
மனங்களில் என்று
படியேறி எழுதியுள்ளார்

பல படிகள்
இறங்கியும்
எழுதியுள்ளார்

மறக்க வேண்டாம்
மாற்றுத் திறனாளிகளை
என்று அவர்கள்
கைகள் பிடித்து
எழுதியுள்ளார்

இல்லை இல்லை
இவர் எழுதவில்லை
அவர்களோடு வாழ்ந்திருக்கிறார்

கைக்குட்டையோடுதான்
இவர் கதைகளை
வாசிக்க வேண்டும்
வடியும் கண்ணீரைத்
துடைப்பதற்கு - அது
கவலையின் கண்ணீர் மட்டுமல்ல
சிலவேளை
ஆனந்தக் கண்ணீரும்தான்

சுலைமா சமி என்ற
இந்த எழுத்தாளர்
மேகத்திலே
சிறகடித்துப் பறந்து
எழுதவில்லை

மண்ணினிலே
தன் பாதகங்கள் பதித்து
எழுதியுள்ளார்
மண்ணின் மைந்தர்களைத்தானே
வரைந்துள்ளார்

என்று ஆரம்பித்த
இந்த எழுத்துப் பயணம்
இன்றும்
நடை தளராமல்

ஒரு டெலஸ்கோப் கொண்டு வந்து
விழிகள் விழித்துப் பார்த்தேன்

இந்தப் பெண்பாலுக்குப் பின்
இருப்பது யார் ?
ஓர் ஆண்பால் அல்லவா

அடடா அது எங்கள்
இக்பால் அல்லவா ?

மௌலவி இக்பால்
சுலைமா சமி என்ற எழுத்தாளருடன்
இன்றும் கை கோர்த்துள்ளார்
அன்பால்

சுலைமா சமியின்
வெற்றியின் ரகசியம்
இப்போது புரிந்தது

என் இதயம்
இவர்களுக்காய்
இப்போது துஆ புரிந்தது

நீண்ட ஆயுளோடு
சுகதேகிகளாய் வாழவேண்டும் என்று

சுலைமா சமி இக்பால்
இன்னும் இன்னும்
எழுதி குவிக்க வேண்டும்
இன்று இவர்
நூல்கள் எல்லாம் விற்கவேண்டும்
என நான்
பிரார்த்திக்கிறேன்

நீங்கள் எல்லாம்
ஆமின் கூறுங்கள்

நன்றி

வியாழன், 21 நவம்பர், 2019

வெள்ளி, 1 நவம்பர், 2019

திங்கள், 23 செப்டம்பர், 2019

பாரதியார் கவிதை


21/9/2019 அன்று கொழும்பு விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் பாரதி கலா மன்றத் தலைவர் த. மணி ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரதி விழாவும் கவியரங்கம் நிகழ்வில் கவிஞர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய கவிதை.
       - என். நஜ்முல் ஹுசைன்



பாரதி
உன் கவிதைகளுக்கு
உயிர் உள்ளது
அதனால்தான்
தமிழர்  உணர்வுகளிலெல்லாம்
இன்றும் உயிரோட்டமாய்
தங்கி உள்ளன

நீ
உள்ளதை சொன்னவன்
உள்ளத்தில்
உள்ளதை சொன்னவன்

நீ
'உள்ள'
மையால் எழுதியவன்

உள்ளமையாய்
எழுதியவன்

நீ இறந்தபோது
உனக்காய் வந்தவர்களை
விரல்விட்டு
எண்ணிவிடலாம்

ஆனால்
உன் உயிரோட்டமான
கவிதைகளுக்காய்
உன்னை
சிம்மாசனம் போட்டு
அமர வைத்திருப்போரை
எண்ணுவதற்கு
அத்தனை
விரல்களுக்கு
நாம் எங்கே போவது ?

இங்கே
ஒவ்வொரு கவிஞன்
பிறக்கும் போதும்
அங்கே
நீ இருக்கிறாய்

அன்று நீ
இறக்கவில்லை
இருக்கிறாய்
என்று நம்பியதனால்தானே
உன்னை அடக்கம் செய்ய
அதிகமானோர்
வரவில்லை

பாரதியே
நீ ஞானி
அதனால்தான்
எங்கள் பிள்ளைகளைப் பார்த்து
"ஓடி விளையாடு பாப்பா "
என்கிறாய்

ஆனால் அவர்கள்
ஓடாமல் விளையாடுகிறார்கள்-
கைபேசியில்

அவர்கள்
கைபேசி வைத்துள்ளார்கள்
அதனால் அவர்கள்
கைகள்தான் பேசுகின்றன
அவர்களோ
யாருடனும் பேசுவதில்லை

"ஓய்ந்திருக்கலாகாது"
என்கிறாய்
அவர்கள் ஓயாமலிருக்கிறார்கள்
விளையாட்டு மைதானங்களில்
அல்ல
கம்ப்யூட்டர் மைதானங்களில்

இன்று
சின்னஞ்சிறு கிளியே
கண்ணம்மாக்கள்
காமுகர்களின்
கவிதைகளாய் போயினர்

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறனுமின்றி
வஞ்சகம் செய்வோரை
அறிமுகப்படுத்தி
அறிவுக்கண் திறந்தவன் நீ

பல வேளைகளில்
அக் கண்ணை
மூடி வைத்து கொள்கிறோம்

கொடும்
கூற்றுக்கு இரையென பின் மாயும்
வேடிக்கை மனிதனல்ல
நீ என்று
உன்னை அறிமுகப்படுத்தினாய்-
வெடிக்கையில்
இறந்து போகும்
இந்த மனிதர்களைப் பார்த்து

பாரதி
நீ துணிந்து பாடியவன்
தமிழனின் மானங் காக்க
துணி யீந்து பாடியவன்

அதனால்தானே
கவிஞர்கள் என்று
சொல்லிக் கொள்வதிலே
நாங்கள் இன்று
தலைநிமிர்ந்து
இருக்கிறோம்

பாரதி
நீ ஒரு
நெடுங்கவிதை

உன்னைப் பற்றி
விடிய விடிய
பாடலாம்
ஏனெனில்
நம் பாடெலாம்
உன் பாடலாம்

என் சமுதாய தோழர்களே
உங்களுக்கொரு வேண்டுகோள்

எங்கள் பாரதியாரைப் பற்றி
ஒவ்வொரு குழந்தைக்கும்
சொல்லிக் கொடுங்கள் -
விலாவாரியாக

நாளை அவர்கள்
"பாரதி
யார்? " என்று
கேட்கும்படி மட்டும்
வைத்துவிடாதீர்கள் !

நன்றி



வியாழன், 4 ஜூலை, 2019

கைவீசி கொடுத்தோர்க்குப் பெருநாள் -  நோன்புப்  பெருநாள் பாடல் 

மெட்டமைத்து    பாடியவர் : 
ஈழத்து இசை முரசு கலைக்கமல் (ஜமால்தீன் மஹ்தூம்)

பாடல் வரிகள் : என். நஜ்முல் ஹுசைன்

அறிவிப்பாளர் : அமீர் கான்