எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 31 மே, 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்


12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
   - என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )


+++++++++++++++++
7. எஸ்.  தனபாலன்
+++++++++++++++++

ஓடையது சலசலக்கும் பாடல்
ஓயாது ஒலித்துவிடும் காதில்
வாடையது மறையாமல் இன்னும்
ஸ்ரீதர் -
வாஞ்சையது நெஞ்சத்தில்
மின்னும்

மின்னும் பாடலதன் வரிதந்த கவிஞன்
கவிஞா உனக்கு வரி செலுத்தும்
வகவம் எந்நாளும்

கவிதைமேல் காதல் இவன் கொண்டான்
வகவத்தை தன்உறவு என்றான்
மென்மேலும் சீருறவே வகவம்
துணை நிற்பேன் என்றும் இவன்
சொன்னான்
அதற்கு
எஸ் போட்ட தனபாலன் எழுக
கவிதை தரவேண்டும்
கன்னல் தேன் ஒழுக !

+++++++++++++++++++
8. க. லோகநாதன்
+++++++++++++++++++

சுவைபடவே கவிதை சொல்லும் ஒருவன்
வகவம் கலகலக்க கலக்கும் நம் கவிஞன்
இவன் எழுந்து கவிபாட முன்னே
சபையே
சிரிப்பதற்கு தயாராகி நிற்கும்

காதுகளை கூர்மையென ஆக்கி - இவன்
கருத்துகளில் மெய்மறந்து போகும்
இவன் பேச்சு வழக்கினில்தான் சொல்வான்
என்றாலும்
பல வழக்குத் தொடுப்பான்
இவன் அனுபவத்தை கேட்கும்
எமையெல்லாம்
சிரிக்க வைத்து
கொல்லாமல் கொல்வான்

மட்டக்  களப்புதான் இவனின் ஊரு
கொழும்பினிலே பெற்றுக் கொண்டான் பேரு
க.லோகநாதன் எங்களுக்குப்
 பேறு
இதோ வருகின்றான் -
நான் சொன்னதெல்லாம் உண்மையா
என்று பாரு!

(தொடரும்)

திங்கள், 15 மே, 2017

கவிஞர் நியாஸ் ஏ. சமத்


புதன், 26 ஏப்ரல், 2017

கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது
கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )



+++++++++++++++++
5. கலைவாதி கலீல்
+++++++++++++++++
பல்லாற்றல் கொண்ட ஒரு கலைஞர் - இவர்
சொல்லாற்ற லுடனியங்கும் கவிஞர்
சற்றேனும் சோர்வென்பதின்றி
சுறுசுறுப்பாய் இயங்குகின்ற
இளைஞர்

கற்றோர்கள் சபை பலவும் கண்டு
பெற்றவர்தான் பெருமைகள்; என்றும்
சளைக்காதே தன் கருத்தை கொண்டு
சரியென்று நினைத்த வைகளெல்லாம்
வளையாது வைப்பவராம் இந்த
பத்திரிகை உலகத்தில் மன்னன்

கலைவாதி கலீல் என்ற பெயராம்
பல தசாப்தங்கள் தமிழுலக பதிவாம்
எம்மோடும் கைகோத்து நின்று
வகவ மேடைகளை ஜொலிக்கவைக்கும் உறவாம்

வரவேண்டும் கலைவாதி இங்கு
எங்கள் தலைவாரி கவிதையினால் பொங்கு


++++++++++++++++++++
6. கம்மல்துறை இக்பால்
+++++++++++++++++++++


அணிகலனாய் வகவத்தில் இணைந்தார்
அணி சேர்க்கும் கவிதைகள் தந்தார்
மணியான கருத்து களாலே
மனங்களையே கவர்ந்து இவர்
வென்றார்

வித்தியாசம் இவர் கவிதை போக்கு
விதவிதமாய் ரசனையுள்ள நோக்கு
எத்திசையும் செல்ல வல்ல தாக்கி
ஏவுகணை போல் பாயும் தாக்கி

வகவத்திலே மின்னும் கம்மல்
வாஞ்சையோடு எமை சேர்ந்த செம்மல்
இலக்கியத்தை இன்பமென நினைக்கும்
இதயத்தைக் கொண்ட ஒரு கவிஞன்

கம்மல்துறை இக்பாலே வருக
கவிதையினால் எமை மயக்கிச் செல்க !


++++++++++++++++++++++
7. எம். பிரேம்ராஜ்
++++++++++++++++++++++

தமிழறிவு ஆழமாய் பெற்றான்
தமிழிலே விளையாட வல்லான்
தமிழோடு பிற அறிவும் கொண்டு
'தினக்குரல்' ஞாயிறு ஜொலித்தான்

கவிதைக்கு தன்மனது கொடுத்தான்
வகவத்தில் நல்ல பேர் எடுத்தான்
மேடைகள் பலவற்றில் ஏறி
தனக்கென்று கைத்தட்டல் குவித்தான்

கவிதையிலே பலபேரை மயக்கி
ரசிகர் நாம் என்று சொல வைத்தான்
சபையோரை விழி திறக்க வைத்து
அவர்கள் மனங்களிலே இவனும்தான்
நிலைத்தான்

தன்னை மனதுக்குள் பிரேம் போட
வைத்த - எம்.
பிரேம்ராஜ்ஜே
எங்கே காட்டி விடு
கவிதையில் உன் வீச்சே!

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்.......

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்


1. சுபாஷினி பிரணவன்

அதியமானுக்கு மட்டுமா
ஔவைப் புலவர்
அதிகமான எங்கள்
கவிஞர்களிடமுமிருக்கிறார்
ஓர் அவைப் புலவர்

இங்கே பூனையாய் வந்தார்
கவிதையிலே
புலியாய் பாய்ந்தார்
தலைமையிலே
தலை மயிலாய் ஜொலித்தார்
இலை இவர்க்கு ஆற்றல்
என நினைத்த எம்மை
வீழ்த்தி இவர் நிலைத்தார்

கவிதாயினி சுபாஷினி பிரணவன்
நீ கவிதை சுடர் வீசும் பகலவன்
உன்னிடமிருக்கிறது
கவிதை கல் வீசும் கவண்
நீ வீசு; பார்ப்போம்
உனக்கு முன்னிற்பவர் எவன்?


2. எம்.எஸ்.தாஜ்மஹான் 


செந்தமிழை தன்நாவில்
புரட்டிப் போட்டான்
அதன்
இனிமையிலே தன்னைத்தான்
கட்டிப்போட்டான்
வகவத்தோடு தனக்குமொரு
கட்டுப் போட்டான்
வளம் மிக்க கவி எழுதி
ஒரு போடு போட்டான்

வாழ்த்தி-
கவி பாட வேண்டுமென்றால்
ரெடி என்பானே
அழகான வரிகளினால்
ஒரு பிடி பிடிப்பானே
தமிழுலகில் தனக்குமொரு
இடம் பிடிப்பானே
இன்று -
எம் காதினிக்க
நல்லதொரு கவி படிப்பானே


3. வெலிமடை ஜஹாங்கீர்

மடை திறப்பான் - கவிதை
மடல் தொடுப்பான் - வெலி
மடை பிறப்பான்
வெகுளியாய் சிரிப்பான்

ஒரு சொல் போதும்
இவன் கவிதைக்கு - அதில்
புகுந்து விளையாடும்
இவன் திறமைக்கு

சில வரிகளுக்குக்குள்ளே - கவிதையை
இவன் முடித்துக் கொள்வான்
அந்த வரிகளுக்குள்ளும் பல
முடிச்சுகள் அவிழ்த்து விடுவான்

புதியவன் அல்ல - வகவத்தில்
பழையவன் - என்றாலும்
இவன் கவிதைகள் என்றும் புதியன
அழி தடை - எழுந்து வா
வெலி மடை ஜஹாங் கீர்
காட்டு உன் கவிதையின் கூர்

(தொடரும் )

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கவிஞர் பிரேம்ராஜ்


திங்கள், 13 மார்ச், 2017

அவனில்லாமல் நானில்லை..........! சிறுகதை










10/3/2017 விடிவெள்ளியில் இடம்பெற்ற எனது சிறுகதை 


அவனில்லாமல் நானில்லை..........!

-    என். நஜ்முல் ஹுசைன்
மல்காந்தி சுனிலின் அறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். இதற்கு முன்பு அவன் ஒரு நாளும் இவ்வளவு அழகாக அவனது அறையை வைத்தவனில்லை. இப்போது எல்லாவற்றையுமே சீராக வைத்திருந்தான்.
சுனில் தம்பி கெம்பஸுக்கு போனதன்பின் மாறியுள்ளதை உணர்ந்தாள். இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் மல்காந்தி தான் அவனது படுக்கையை சரி செய்து பெட் சீட்டை யெல்லாம் மடித்து வைக்க வேண்டும். அவனது சட்டை டிரவுஸரைக் கூட அங்கங்கே வீசி வைத்திருப்பான். மல்காந்தி தான் அவற்றை யெல்லாம் சீராக்கி வைப்பாள்.
அவர்கள் இருப்பது பெலியத்தவில். தம்பி சுனிலுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு  கிடைத்தது. அங்கே சென்று ஒரு வருடமாகிறது. விடுமுறைக்கு நேற்றுத் தான் வீட்டுக்கு வந்தான்
மல்காந்தி இப்போது தனது பெற்றோருடன் தான் இருக்கிறாள்அவள் திருமணம் முடித்தவள். ஆனால் இப்போது கணவனுடன் இல்லை. அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
திருமணம் முடித்த முதல் நாளே மணவறைக்கு போதையுடன் வந்தவன். நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக குடித்துவிட்டு வந்திருந்தான். அன்று ஒரு மகிழ்ச்சியான நாள்தானே என அவள் அதை பெரிதாக கணக்கெடுக்க வில்லை.
தொடர்ந்து வந்த நாட்களிலே அவனை சாதாரணமாக சிகரெட் புகைத்து தள்ளுபவனாக கண்டு கொண்டாள்வழக்கமாகவே ஒவ்வொரு நாள் மாலையிலும் வேலையிலிருந்து  வீட்டுக்கு வரும்போது போதையுடன்தான் வருவான்எங்கேயாவது திருமண வீட்டுக்கோ, மரண வீட்டுக்கோ போனால் அந்தப் போதை பன்மடங்காகி இருக்கும்.
மல்காந்திக்கு ஒரே மனக்கவலை 'ஏன்தான் நம்மவர்கள் குடிகார மணமகனை திருமணத்திற்கு தகுதியற்றவனாக நினைப்பதேயில்லை. குடிப்பதை ஒரு சாதாரண பழக்கமாகவே கருதுகின்றனர்இவ்வாறான குடிகாரர்களால் எத்தனைப் பெண்கள் வாழாது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். '
நல்ல குணவதியான மல்காந்தியால் அவனோடு ஒரு வருடம்கூட இணைந்து வாழ முடியாமல் போயிற்றுஇப்போது வாழாவெட்டியாக தனது பெற்றோருடன் வந்து இணைந்து கொண்டாள்.
சுனில் தம்பியும் அப்படித்தான்நிறைய சிகரட் பிடிப்பான். நண்பர்களுடன் அடிக்கடி 'பார்ட்டி ' என்று சொல்லி குடித்து விட்டு வருவான். ஆனாலும் அவன் மிகவும் நல்லவன். எவ்வித குழப்படியும் பண்ணமாட்டான். குடி பழக்கத்தை விட்டு விடு என்றால் கேட்கவா போகிறான்.  'குடிப்பது என்பது எங்களவர்களுக்குத்தான் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றே. மகிழ்ச்சியிலும் குடிக்கிறார்கள்துன்பத்திலும் குடிக்கிறார்கள் ' குடியினால் வாழ்விழந்த மல்காந்தியினால்கூட தன் தம்பியைப் பார்த்து குடிக்காதே என்று சொல்ல முடியவில்லை - குடிப்பதை குறைத்துக் கொள் என்று சொல்வதைத் தவிர.
சுனில் வந்து கதவைத் தட்டினால் திறக்க வேண்டும்பார்ட்டிகளுக்குப் போனால் எப்படியும் இரவு பன்னிரண்டு ஒரு மணிக்குத்தான் திரும்பி வருவான்ஒரு வருடத்தின் பின் வந்திருக்கிறான். நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.
அவன் வரும் போது அம்மாவும் அப்பாவும் உறங்கியிருப்பார்கள்.
மல்காந்திதான் வீட்டுக் கதவை திறக்க வேண்டும்
இரவு சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவாறே சோபாவிலேயே உறங்கி விட்டாள்.
அழைப்பு மணி சத்தம் அவளது தூக்கத்தைக் கலைத்தது.
குடித்து விட்டு வந்திருக்கும் தம்பியை வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும். தள்ளாடிக் கொண்டு வரும் அவனை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்இவையெல்லாம் வழமையாக நடைபெற்று வருபவைதான். இவற்றை எண்ணியவாறே கதவைத் திறந்தாள் மல்காந்தி. சுனில் தம்பி சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
"சொரி அக்கா, கொஞ்சம் லேட்டாகிருச்சு" அவனது பேச்சிலே நிதானமும் தெளிவும் தெரிந்தது
மல்காந்தி ஆச்சரியத்தோடு சுனில் தம்பியைப் பார்த்தாள்.
அவன் போதையில் தள்ளாடவில்லை. குடியின் நெடியோ சிகரெட்டின் நாற்றமோ அவனிடம் வீசவில்லை.
நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போய்  வந்த சுனில் தம்பியை ஒருநாள் கூட மல்காந்தி இப்படிப் பார்த்ததில்லை.
தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமா என்று தன்னை ஒருமுறை கிள்ளியும் பார்த்துக் கொண்டாள்.
தம்பியின் பின்னாலேயே தம்பியின் அறைக்குச் சென்றாள்.
" தம்பிஇன்று நீ பார்ட்டிக்கு போகவில்லையா ?"
"பார்ட்டியிலிருந்துதான் வருகிறேன் "
" அப்ப நீ குடிக்கல்லையா ?"
"சிகரட் கூட  குடிக்கல்ல..." கூறி புன்னகைத்தான்.
"எனக்கு நம்பவே முடியல்ல.... என் தம்பியா இப்படி......"
"அக்கா, இப்ப அந்த ரெண்டு பழக்கத்தையும் அடியோட விட்டுட்டன்"
"என்ன அடியோட விட்டுட்டியா" ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றாள்அவளது தூக்கக் கலக்கம் காணாமல் போனது. அவளது மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
"என்ன ஒன்ட கெம்பஸ் வாழ்க்கை ஒன்ன அடியோட மாத்திருச்சா, இல்ல இல்ல இப்ப வெளங்கிச்சு நீ யாரையோ காதலிக்கிற ?"
இப்பொழுதும் சுனில் தம்பி புன்னகைத்தான்.
"என்னய எந்தக் காதலியும் மாத்தல்ல. எனய மாத்தியது ஏன்ட ரூம் மேட்"
"என்ன ரூம் மேட்டா ....?" அவளது ஆச்சரியம் தொடர்ந்தது.
"நான் கெம்பஸுக்கு போன நேரம் எனக்கு ஹொஸ்டல்ல ரூம் கெடைக்கல்ல. வெளியிலதான் ரூம் எடுத்தேன்ரெண்டு பேர் தங்குற ரூம். என்னோடதான் அவனும் தங்கினான். அவன் மெடிக்கல் செஞ்சான்.
ஒரு கெழமையிலேயே நாங்க ரெண்டு பேரும் நல்ல கூட்டாளி ஆயிட்டோம். பழகுறதுக்கு மிகவும் இனிமையானவன்.
ஒனக்குதான் தெரியுமே நான் ரொம்ப சிகரட் குடிப்பேனே. அங்கேயும் சிகரட் பிடிச்சன். கெம்பஸ் லீவு நாளுல கொஞ்சம் குடிப்பன் .
ஆனா அவன்கிட்ட எந்த கெட்டப் பழக்கத்தையும் நான் காணல்ல. அதுக்கும் மேல அவன் ஒழுக்கம் நெறைஞ்சவனா இருந்தான். எங்கட அறைய அவன்தான் ரொம்ப சுத்தமான வச்சிருப்பான். என்ட உடுப்பகூட அழகான மடிச்சி வைப்பான் . அவனோட சேர்ந்து அறைய அழகான வச்சிக்க நானும் கத்துக்கிட்டன். மொதல்ல அவன்ட முன்னுக்கு சிகரெட் குடிக்கிறத விட்டன்.


அவன்ட வீடு திஹாரில இருக்குது. ஒரு முற ஒரு திருமண வீட்டுக்கும் இன்னொரு முற ஒரு சாவு வீட்டுக்கும் அவனோட போனேன்.
நான் அந்த ரெண்டு எடத்திலேயும் ஒரு விஷயத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன்.
நாங்க எப்பவுமே திருமண வீட்டுக்கோ சாவு வீட்டுக்கோ போனா எங்கடவங்களுக்கு விசேஷமே குடிக்கிறதுதான். ஆனா அங்க அவங்க நல்லா சாப்பிட்டாங்க. ஆனா யாருமே குடிக்கல்ல. பொறவுதான் எனக்கு தெரிஞ்சிச்சு அவங்க யாருமே குடிக்கிறதில்லன்னுஅவங்கல்ல கொஞ்சம் பேர் குடிக்கிறவங்க இருக்காங்கலாம். அப்படியானவங்கள அவங்க மதிக்கிறதே இல்லையாம்எங்கட திருமண வீட்டுக்கும் சாவு வீட்டுக்கும் மிச்சம் பேர் வாறதே நல்ல குடிக்கிறதுக்குதானே.
இதையெல்லாம் பார்க்கிற நேரம் எனக்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்திச்சு. ஒன்ட வாழ்க்கையும் குடியாலதானே நாசமாச்சு என்று நானும் அடிக்கடி மனசுக்குள்ள வெந்து கொண்டுதான் இருந்தேன்அதனால எனக்கிட்ட இருந்த குடி பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் விட கொடுத்தேன்எனக்கு இப்ப நல்லா வெளங்குது நான் மொதல்ல விட இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கன்."
சுனில் தனது கதையை சொல்லிக் கொண்டிருந்தபோதே மல்காந்தி சொன்னாள்,
" நீ மட்டுமா மகிழ்ச்சியா இருக்கிற, ஒன் கதையை கேட்டு நானும்தான் மகிழ்ச்சியா இருக்கன். உன்ன நெனச்சி நான் ரொம்ப பெரும படுறன். ஏன்ட மாப்பிள்ளையும் ஒனய மாதிரி திருந்தியிருந்தா ஏன்ட வாழ்க்கை இப்படி நரகமாகியிருக்குமா?    சரி ஒன்ட கூட்டாளிட பேர சொல்லவே இல்லையே. அவர்ட பேரென்ன?"


"மொஹமட் முஸம்மில்"

******************************************************************************