எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 17 ஜூலை, 2017

கவிஞர் ஏ. பீர் முகம்மது

வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்கு 8-7-2017 அன்று நடந்தபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ஏ. பீர் முகம்மது அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்


பேராற்றல் கொண்ட ஒரு
குடும்பத்தின் உறுப்பினராய்
பேர் பெற்ற ஒரு கவிஞர்
பேச்சாளர் எழுத்தாளர்
கூர் கொண்ட பேனாவின்
தேன் நாவின் சொந்தமிவர்
சீர்வரிசை யாக இவர்
வகவத் தோடொன்றிணைந்தார்
பீர்முகம்மத் பெற்றதினை
எங்களுக்குப் பெருமை என்பேன்


கிழக்கிலங்கை மண்ணுக்கே
உண்டான செழுமை பெற்று
முழக்கமிட்டு இலக்கியத்தில்
முத்திரையும் பதிப்பவராம்
சளைக்காத தன் பேச்சில்
சுவையூட்டி மனங்கவரும்
வித்தகராம்
கலைக்காக மட்டுமல்ல கல்விக்கும் இவர் சேவை
கல்வி
அதிகாரியாய் இருந்து
காட்டிய இவர் திறமை
மாணவர்
மனங்களெல்லாம் மணக்குதம்மா


கவிதை வெள்ளம் பாய்கிறது
வகவத்தில் என்றறிந்து
நனைவதற்கு இவர் வந்தார்
உங்கள் கவிதையிலே நனைவதற்கு
நாமுள்ளோம் என்றுரைத்து
கவிதை
தலைமையினை இன்று
தந்தோம்
கவிஞரே பீர்முகம்மது
ஊற்றுங்கள் எங்கள் காதுகளில்
உங்கள் அக மது
எங்கள் அகமது வைப்போம்
உங்கள் பேர் முகமது

   - என். நஜ்முல் ஹுசைன்


வியாழன், 6 ஜூலை, 2017

கழுதைகளிடம் ஏன் கற்பூரம்?



மனது வலிக்கிறது
பாடப் புத்தகங்களைக் கிழித்து
கை துடைக்க
தரும்போது

அறிவூட்டிய
ஒரு தாயல்லவா
கழுத்து நெறித்து
கொல்லப்படுகிறாள்

இன்னும்
பல பிள்ளைகளைப்
பெற்றெடுக்கத் தகுதியானவள்

அறிவிலிகளின் கைகளில்
அகப்பட்டு
சின்னாப்
பின்னமாக்கப்படுகிறாள்

பாவத்தில் எங்களுக்கும்
பங்கு வைத்து

படித்த முட்டாள் பிள்ளைகளும்
இளந் தாயை
முதியோர் இல்லத்தில்
ஒப்படைத்து

இந்தத்  தாயை
கொலை செய்த காரணத்தால்
எத்தனை அறிஞர்கள்
கரு கலைக்கப்பட்டார்கள்

சரியாக கணக்குப் பார்த்து
பணத்தைப் பெற்ற
ஹோட்டல் முதலாளி
சொல்லிக் கொடுத்த
தாயை
காலுக்குக் கீழல்லவா
போட்டுள்ளார்

தயவுசெய்து
படித்த பாடப் புத்தகங்களை
சிறு தொகைக்காய்
சீனி சுற்ற கொடுக்காதீர்கள்

எத்தனையோ
ஏழை தேனிகளின்
தேன்
அங்கே புதைந்திருக்கும்போது

நாளைய பெரும் முதலீட்டுக்காய்
அறிஞர்களாக துடித்துக் கொண்டிருக்கும்
அந்த அப்பாவிகளிடம்
ஒப்படையுங்கள்!

- என். நஜ்முல் ஹுசைன்
05/07/2017

புதன், 31 மே, 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்


12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
   - என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )


+++++++++++++++++
7. எஸ்.  தனபாலன்
+++++++++++++++++

ஓடையது சலசலக்கும் பாடல்
ஓயாது ஒலித்துவிடும் காதில்
வாடையது மறையாமல் இன்னும்
ஸ்ரீதர் -
வாஞ்சையது நெஞ்சத்தில்
மின்னும்

மின்னும் பாடலதன் வரிதந்த கவிஞன்
கவிஞா உனக்கு வரி செலுத்தும்
வகவம் எந்நாளும்

கவிதைமேல் காதல் இவன் கொண்டான்
வகவத்தை தன்உறவு என்றான்
மென்மேலும் சீருறவே வகவம்
துணை நிற்பேன் என்றும் இவன்
சொன்னான்
அதற்கு
எஸ் போட்ட தனபாலன் எழுக
கவிதை தரவேண்டும்
கன்னல் தேன் ஒழுக !

+++++++++++++++++++
8. க. லோகநாதன்
+++++++++++++++++++

சுவைபடவே கவிதை சொல்லும் ஒருவன்
வகவம் கலகலக்க கலக்கும் நம் கவிஞன்
இவன் எழுந்து கவிபாட முன்னே
சபையே
சிரிப்பதற்கு தயாராகி நிற்கும்

காதுகளை கூர்மையென ஆக்கி - இவன்
கருத்துகளில் மெய்மறந்து போகும்
இவன் பேச்சு வழக்கினில்தான் சொல்வான்
என்றாலும்
பல வழக்குத் தொடுப்பான்
இவன் அனுபவத்தை கேட்கும்
எமையெல்லாம்
சிரிக்க வைத்து
கொல்லாமல் கொல்வான்

மட்டக்  களப்புதான் இவனின் ஊரு
கொழும்பினிலே பெற்றுக் கொண்டான் பேரு
க.லோகநாதன் எங்களுக்குப்
 பேறு
இதோ வருகின்றான் -
நான் சொன்னதெல்லாம் உண்மையா
என்று பாரு!

(தொடரும்)

திங்கள், 15 மே, 2017

கவிஞர் நியாஸ் ஏ. சமத்


புதன், 26 ஏப்ரல், 2017

கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது
கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )



+++++++++++++++++
5. கலைவாதி கலீல்
+++++++++++++++++
பல்லாற்றல் கொண்ட ஒரு கலைஞர் - இவர்
சொல்லாற்ற லுடனியங்கும் கவிஞர்
சற்றேனும் சோர்வென்பதின்றி
சுறுசுறுப்பாய் இயங்குகின்ற
இளைஞர்

கற்றோர்கள் சபை பலவும் கண்டு
பெற்றவர்தான் பெருமைகள்; என்றும்
சளைக்காதே தன் கருத்தை கொண்டு
சரியென்று நினைத்த வைகளெல்லாம்
வளையாது வைப்பவராம் இந்த
பத்திரிகை உலகத்தில் மன்னன்

கலைவாதி கலீல் என்ற பெயராம்
பல தசாப்தங்கள் தமிழுலக பதிவாம்
எம்மோடும் கைகோத்து நின்று
வகவ மேடைகளை ஜொலிக்கவைக்கும் உறவாம்

வரவேண்டும் கலைவாதி இங்கு
எங்கள் தலைவாரி கவிதையினால் பொங்கு


++++++++++++++++++++
6. கம்மல்துறை இக்பால்
+++++++++++++++++++++


அணிகலனாய் வகவத்தில் இணைந்தார்
அணி சேர்க்கும் கவிதைகள் தந்தார்
மணியான கருத்து களாலே
மனங்களையே கவர்ந்து இவர்
வென்றார்

வித்தியாசம் இவர் கவிதை போக்கு
விதவிதமாய் ரசனையுள்ள நோக்கு
எத்திசையும் செல்ல வல்ல தாக்கி
ஏவுகணை போல் பாயும் தாக்கி

வகவத்திலே மின்னும் கம்மல்
வாஞ்சையோடு எமை சேர்ந்த செம்மல்
இலக்கியத்தை இன்பமென நினைக்கும்
இதயத்தைக் கொண்ட ஒரு கவிஞன்

கம்மல்துறை இக்பாலே வருக
கவிதையினால் எமை மயக்கிச் செல்க !


++++++++++++++++++++++
7. எம். பிரேம்ராஜ்
++++++++++++++++++++++

தமிழறிவு ஆழமாய் பெற்றான்
தமிழிலே விளையாட வல்லான்
தமிழோடு பிற அறிவும் கொண்டு
'தினக்குரல்' ஞாயிறு ஜொலித்தான்

கவிதைக்கு தன்மனது கொடுத்தான்
வகவத்தில் நல்ல பேர் எடுத்தான்
மேடைகள் பலவற்றில் ஏறி
தனக்கென்று கைத்தட்டல் குவித்தான்

கவிதையிலே பலபேரை மயக்கி
ரசிகர் நாம் என்று சொல வைத்தான்
சபையோரை விழி திறக்க வைத்து
அவர்கள் மனங்களிலே இவனும்தான்
நிலைத்தான்

தன்னை மனதுக்குள் பிரேம் போட
வைத்த - எம்.
பிரேம்ராஜ்ஜே
எங்கே காட்டி விடு
கவிதையில் உன் வீச்சே!

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்.......

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்


1. சுபாஷினி பிரணவன்

அதியமானுக்கு மட்டுமா
ஔவைப் புலவர்
அதிகமான எங்கள்
கவிஞர்களிடமுமிருக்கிறார்
ஓர் அவைப் புலவர்

இங்கே பூனையாய் வந்தார்
கவிதையிலே
புலியாய் பாய்ந்தார்
தலைமையிலே
தலை மயிலாய் ஜொலித்தார்
இலை இவர்க்கு ஆற்றல்
என நினைத்த எம்மை
வீழ்த்தி இவர் நிலைத்தார்

கவிதாயினி சுபாஷினி பிரணவன்
நீ கவிதை சுடர் வீசும் பகலவன்
உன்னிடமிருக்கிறது
கவிதை கல் வீசும் கவண்
நீ வீசு; பார்ப்போம்
உனக்கு முன்னிற்பவர் எவன்?


2. எம்.எஸ்.தாஜ்மஹான் 


செந்தமிழை தன்நாவில்
புரட்டிப் போட்டான்
அதன்
இனிமையிலே தன்னைத்தான்
கட்டிப்போட்டான்
வகவத்தோடு தனக்குமொரு
கட்டுப் போட்டான்
வளம் மிக்க கவி எழுதி
ஒரு போடு போட்டான்

வாழ்த்தி-
கவி பாட வேண்டுமென்றால்
ரெடி என்பானே
அழகான வரிகளினால்
ஒரு பிடி பிடிப்பானே
தமிழுலகில் தனக்குமொரு
இடம் பிடிப்பானே
இன்று -
எம் காதினிக்க
நல்லதொரு கவி படிப்பானே


3. வெலிமடை ஜஹாங்கீர்

மடை திறப்பான் - கவிதை
மடல் தொடுப்பான் - வெலி
மடை பிறப்பான்
வெகுளியாய் சிரிப்பான்

ஒரு சொல் போதும்
இவன் கவிதைக்கு - அதில்
புகுந்து விளையாடும்
இவன் திறமைக்கு

சில வரிகளுக்குக்குள்ளே - கவிதையை
இவன் முடித்துக் கொள்வான்
அந்த வரிகளுக்குள்ளும் பல
முடிச்சுகள் அவிழ்த்து விடுவான்

புதியவன் அல்ல - வகவத்தில்
பழையவன் - என்றாலும்
இவன் கவிதைகள் என்றும் புதியன
அழி தடை - எழுந்து வா
வெலி மடை ஜஹாங் கீர்
காட்டு உன் கவிதையின் கூர்

(தொடரும் )