எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 30 அக்டோபர், 2024

நாவுகளின் பயணம்

 வலம்புரி கவிதா வட்டம் வெளியிட்ட "வகவக் கவிதைகள்" நூலில் இடம்பெற்ற எனது கவிதை


 - என். நஜ்முல் ஹுசைன்


நாவுகளின் பயணம்


வீதிகள் எங்கும் 

எங்கள் நாவுகளின் 

வெறிப் பயணம்


பழகப் பழகப் 

புளித்த

பாலாய் போனதா 

அம்மாவின் சமையல்


அம்மாக்களையும் சேர்த்துக் கொண்டு

தெருவெங்கும்

அமர்ந்து கொண்டு


வீட்டு அடுப்புகள்

அடிக்கடி ஓய்வில்

பாதையோர அடுப்புகள்

அணையா விளக்காக 


வீட்டுக்குள் ஒதுங்கியிருந்த 

மேசை

பாதையெங்கும்


மறைந்து தின்ற காலம்

மலையேறி விட்டது

காட்டிக் கொண்டு தின்பதில்தானே 

கொம்பு முளைக்கிறது 


நாட்டில் அகோரப் பசி

தாண்டவமாடுகிறது

நிரூபிக்கும் 

பாதையோர மேசைகள் 


வறுமையின் வயிறுகளுக்கு 

நாசி வழியாக 

வைக்கப்படும் விருந்து


மத்திய தரம்

உயர் தரமாகவும்

உயர் தரம் 

மத்திய தரமாகவும்

உரு மாறும் இடம்


எண்சாண் உடம்புக்கு

வயிறே பிரதானம் 

என்பதன் சாட்சி


நளன்கள்தான் 

இப்போது

பணம் வைப்பிலிடப்படும்

இயந்திரங்கள்


அடடா

எப்படிச் சுவைத்து

உண்கிறது நாவு

ஆனால் உடம்புதான்

பாவம் !


- என். நஜ்முல் ஹுசைன்

புதன், 7 ஆகஸ்ட், 2024

கழுதைக்குத் தெரியுமா...... ? - கவிதை

 2024, ஆகஸ்ட் மாத "ஞானம்" சஞ்சிகையில்



கழுதைக்குத் தெரியுமா...... ?

ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி
கற்பூரமும் கழுதையும்
இடம் மாறிக் கொள்கின்றன

எனக்கு
கவிதை கற்பூரம்
என் நண்பன்
கழுதை

அவனுக்கு
கிரிக்கெட் கற்பூரம்
நான்.......

கழுதை !


- என். நஜ்முல் ஹுசைன்


படித்த மாணவன் - சிறுகதை

 04/08/2024 "தமிழன் வாரவெளியீட்டில்" இடம்பெற்ற எனது சிறுகதை -


படித்த மாணவன் !


        -                                                  என். நஜ்முல் ஹுசைன்


சரவணன் ஆசிரியருக்கு தலை சுற்றியது.  குமரன் இப்படி கை விரிப்பான் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எத்தனை நம்பிக்கையோடு அவர் வந்தார். சென்றவுடன் கட்டி அணைப்பான்; சாப்பிடச் சொல்வான்;  சுகம் விசாரிப்பான் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு வந்தவருக்கு, அவன் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவரோடு பேசிய வார்த்தைகள் ஒன்றிரண்டுதான்.  அவன் பேசியதெல்லாம் கைபேசியோடுதான். இப்படி ஏமாற்றமாக போய்விட்டதே.


குமரன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பாடசாலைக்கு வருவதற்கு ஒழுங்கான ஆடைகள் கூட அவனிடம் இருக்கவில்லை. என்றாலும் படிப்பில் கெட்டிக்காரன். சரவணன் ஆசிரியர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். அவனுக்கு இலவசமாக பிரத்தியேகமாக பாடம் நடத்தினார். அவனுக்கு நல்ல ஆடைகள் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட நல்ல உணவும் வாங்கிக் கொடுத்தார். பல வருடங்கள் அவனுக்குத் துணை நின்றார். அவரது கனவு வீண் போகவில்லை. கல்வியிலே குமரன் மிகவும் சிறப்படைந்தான். இப்போது கொழுத்த சம்பளத்தில் பெரியதொரு நிறுவனத்தில் மிகவும் உயர் பதவி வகிக்கிறான்.  அவன் உபயோகிக்கும் வாகனம் மட்டும் பல கோடி பெறுமதியானது. அவன் வாழும்  ஆடம்பரமான வாழ்க்கைக்கு அதுவே கட்டியம் கூறியது. 


குமரன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரவணன் ஆசிரியர் ஒருமுறை கூட அவனைச் சந்திக்கச் செல்லவில்லை. ஆனால் இன்றுதான் முதன்முறையாக அவனது வீடு தேடிச் சென்றார். அதுவும் தனது மனைவிக்காக.  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை செய்ய  பன்னிரண்டு இலட்சம் தேவைப்பட்டது.  தான் செய்த உதவிகளை ஞாபகம் வைத்து இன்று குமரன் கட்டாயம் உதவி செய்வான் என்று நம்பிக்கையோடு போனவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அவன் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் செய்த எந்த உதவியும் அவனுக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை என்று புரிந்து கொண்டார். ஒரு சில வார்த்தைகள் கூட அன்பாகப் பேசாத குமரனை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார். நன்றி கெட்ட அவனைத் தேடி வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார்.


 சுட்டெரிக்கும் வெயிலிலே கவலையோடு நடந்து கொண்டிருந்த சரவணன் ஆசிரியர் யாரோ முன்னால் வந்து பேசுவது கண்டு விழித்தார்,


 "யாருங்க நீங்க ?" அறிமுகமற்ற அவரைப் பார்த்து சரவணன் ஆசிரியர் கேட்டார்.

 

"என்ன சேர், என்ன தெரியலயா. நா ஒங்கக்கிட்ட படிச்ச நடராஜன். 


"அடடா அப்படியா. எனக்கு ஞாபகமில்லையே அப்பா " என்ற சரவணன் ஆசிரியரிடம்,


"நா எங்க சேர் படிச்சன் ? எட்டாம் வகுப்போடயே நின்னுட்டன்.  நீங்க எத்தன முற அடிச்சு அடிச்சி சொல்லித் தந்தீங்க. எனக்கு எதுவும் ஏறல. ஆனா நீங்க அடிச்சி அடிச்சி சொல்லித் தந்த ஒழுக்கத்த, நல்ல பண்புகள இன்னைக்கும் கைவுடல்ல.  ஒங்களயும் என்னைக்கும் மறக்கல்ல" என்றான்.


தான் மறக்காதிருந்த தன் மாணவன் தன்னை மறந்தது எவ்வளவு வேதனை தந்ததோ அதுபோன்றே,

தான் மறந்த தன் மாணவன் தன்னை மறக்காதிருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


"சேர், ஏதோ கவலையா இருக்கீங்க.  என்னென்னாலும் இந்த மாணவன்கிட்ட சொல்லுங்க" என்றான் நடராஜன். 


ஏற்கனவே ஒரு மாணவனிடம் பாடம் கற்ற சரவணன் வாத்தியார்,

"ஒன்றுமில்லை" என்று சமாளிக்கப் பார்த்தார்.


என்றாலும் நடராஜன் விடவில்லை.  


"இல்ல சேர், நீங்க ஏதோ பெரிய கவலயோட இருக்கிறது ஒங்கட முகத்த பாத்தாலே தெரியுது. வாங்க சேர். ஒங்கள வீட்டுல கூட்டிக்கிட்டு போய் விடுறென் சேர் " என்று அன்போடு அழைத்தான். 


அந்த கனிவான சொற்களைத் தட்டிவிட சரவணன் ஆசிரியருக்கு காரணம் இருக்கவில்லை.


ஒரு சிறிய கார் வந்து நின்றது . ஓர் இள வயது பையன் அதனை ஓட்டிக் கொண்டு வந்தான். 


"ஏறுங்க சேர்...." என்று  காரின் முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.


காரை செலுத்திய பையனிடம்               " அப்பா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு காரணம் இந்த சேர்தான் " என்று கூறினான் நடராஜன்.


அந்தப் பையன் மிகவும் மரியாதையுடன் தலையசைத்து புன்னகைத்தான்.


" ஒங்க பையனா..... பேரென்ன ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு நடராஜனிடமிருந்து  பதில் எதுவும் வரவில்லை.


 " சேர் ஒங்க கவல எதுன்னாலும் பரவாயில்ல சேர். தைரியமா சொல்லுங்க சேர்"

என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.


பெரியதொரு ஆளாக வளர்ந்திருந்த நடராஜன் தன்னை இத்தனை "சேர்" போட்டு அழைத்தது சரவணன் ஆசிரியருக்கு என்னவோ போலிருந்தது.


தனது மனக் கவலையை சரவணன் ஆசிரியர் தயங்கித் தயங்கி நடராஜனிடம் எடுத்துச் சொன்னார்.


அதனைக்  கேட்ட உடனேயே, " சேர், பன்னிரண்டு லட்சமா ? அது எனக்கு ஒரு பணமே இல்ல. நா தாறேன் சேர். அதுக்கும் மேலயும் தாறேன்.  நா இப்ப பெரிய கோடீஸ்வரன்" என்று சொன்னதோடு நிற்காமல்   " சேர் என்ட மகன்ட பேரென்ன என்று கேட்டீங்களே.  ஒங்க ஞாபகமா ஒங்கட பேரத்தான் அவனுக்கு வச்சிருக்கேன் " என்று நா தழுதழுக்க நடராஜன் சொன்ன போது 

   விழிகளிலிருந்து வழிந்த நீரை 

   துடைப்பதற்கும் சரவணன் 

  ஆசிரியரின் கைகளில் திராணி  

  இருக்கவில்லை.

திங்கள், 24 ஜூன், 2024

கவிஞர் திலகம் பிரேம்ராஜ் !

 

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கு 21/06/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடத்த கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ்என்னும் அமுதைத்தான் நாவில்

தடவியிவன் கவிதைக்குள் மிளிர்ந்தான் 

அமிழ்ந்திடவே எம்மையெல்லாம் வைத்து

அவனுடனே நடைபயில செய்தான் 

இமியளவும் சோர் வென்பதின்றி

இதயத்தை இலக்குடனே வைத்தான்

நிமிர்ந்துள்ளான் வர்த்தகத்தின் வழியில்

நிலைபெறவே இலக்கியத்தைப் பற்றி 


சுவையாகவே இவனும் கவிதை

சுடச்சுடவே கருப்பொருளை வைத்து

அவையோர்முன் சமர்ப்பிக்கும் பாங்கில்

ஆவென்றே வாய்ப்பிளந்தே நிற்பர்

எவைஎதனைச் சொல்லிடவே வேண்டும்

எனும்கலையை இவன் அறிந்ததாலே

துவையல்போல் இவன்கவிதை ரசித்து

துள்ளித்தான் குதித்திடவே வைப்பான்


இவனுக்கு என்று ஒரு கூட்டம்

இதயத்தால் இணைந்துளது உண்மை

அவசியமாய் வகவத்திற் கிவனும் 

ஆனதிலே ஏது இங்கு புதுமை

தவறாது வகவத்தின் பணிகள்

தலைமேலே இவனும்தான் வைப்பான் 

சுவராக சித்திரங்கள் வரைய

சுழன்று இவன் தன்னையுமே தருவான்



நூற்றியொன்று இன்றெங்கள் அரங்கு

நூலாகினான் பட்டம் ஏற

ஆற்றலுடன் தலைமையினை ஏற்று

ஆளவந்தானே கவிஞன் பிரேம்ராஜ்

சாற்றுகின்ற தமிழ் அமுதம் கடைந்து

சாறெனவே எம்செவியில் பிழிவான் 

போற்றியே நாம் வரவேற்றோம் கவிஞா 

பிரேம்ராஜே கவியரங்கை கலக்கு


வருக

கவிஞர் திலகம் பிரேம்ராஜ் !



புதன், 19 ஜூன், 2024

அந்தக் கோடுகள்

 


"விழுமியம்" சஞ்சிகையின் ஏப்ரல் - ஜூன் 2024 இதழில் இடம்பெற்றது 


கோடுகள் கீறி
வைத்திருக்கிறார்கள் -

தாண்ட முடியாமல்

ஆனாலும்
அவர்கள் வெளியே
ஆடம்பரமாய்

இங்கே
பலமில்லாத
சம்பளம்

வியர்வையின் ஊதியம் -
பிடுங்கிக் கொள்ள
எத்தனைக்
கொள்ளையர்கள்

எட்டாக் கனிகளுக்கு
மத்தியில்
மறக்கடிக்கப்பட்ட
மரக்கறிகள்


உணவு கூட
கனவாய் போன போது
கல்விப் பசிக்கு
சோளப் பொறிதானே

இரைப்பைதானே
பலருக்கு
இறப்பைச் சொந்தமாக்குகிறது

ஒவ்வொரு குடும்பமும்
போர்க்களமாய்

தாயும், தந்தையும்
பிள்ளைகளும்
எதிரிகளாய்

செல்வம் படைத்தோரே
உங்கள்
கோட்டைக்குத்தானே
இருக்கிறது

அந்தக் கோட்டை
அழிக்கும் வலிமை -

அந்த வறுமைக்
கோட்டை !

- என். நஜ்முல் ஹுசைன்




வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நோன்புப் பெருநாள் கவிதை 11/4/2024

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



இனிமையாம் பெருநாள் இன்று
எங்களைச் சூழ்ந்த வேளை
அருமையாய் கெப்பிட்டல் டிவி
அன்புடன் அழைத்து எம்மை
பாடுக பெருநாள் கவிதை
பாருளோர் சிந்தை அள்ள
என்றதே; அதனால் இங்கு
எம் மனம் சொல்ல வந்தோம்

செவிகளை, விழிகளைத்தான்
எமக்கென
இங்கே தந்த
அன்பர்க்கே ஸலாம் உரைத்து

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பெனும் மாதம் வந்து
நன்மைகள் அள்ளித் தந்து
நோகின்ற மானிடர்கள்
இடரினை
எடுத்துச் சொல்லி
ஆன்மாவில் கலந்திருந்து
நேற்றுதான் போனதம்மா

உற்றதோர் தோழனாக
ஒரு மாதம் இணைந்திருந்து
பக்குவப்படுத்திச் சென்ற
ரமழானை நினைத்தால் கண்ணீர்
நண்பனே சென்றாய் என்று
அழுதிட வேண்டும் இன்று
அத்தனை உறவாய் இருந்தாய் -
எம்மை
சொத்தென பாது காத்தாய்
எம் பாவத்திற்கு நீ
வைத்தாயே
தீ


எண்ணம் போல் வாழ்ந்திருந்தோம்
பாவத்தில் மூழ்கிப் போனோம்
எங்களின் கண்கள் இரண்டை
கூடா காட்சிக்கே
கொடுத்திருந்தோம் - அது
பாவமே இல்லை என்றே
எமக்கு நாம் சொல்லி
நாளும்
பாவியாய் அலைந்திருந்தோம்
பாதகம் புரிந்திருந்தோம்

பிறரது பிழைகள் தன்னை
பெரியதாய் கண்டு நாமும்
அவர் மனம் நோகுமென்ற
எண்ணமே சிறிதுதுமின்றி
புறமது பேசி நாளும்
திரிவதில் இன்பம் கண்டோம்

எம்மிடம் எந்தப் பிழையும்
இல்லை நாம் சிறந்த மனிதர்
என்ற
எண்ணத்தில் இறுமாந்திருந்து
ஏமாந்து போனோம் நாமும்

நாவினால் மட்டுமல்ல
எங்கள்
எழுத்தினால் கூட
பிறரின்
குப்பைகள் கிளறி மகிழ்ந்தோம்

வலைதள புகழில் மயங்கி
வீண்
வலையிலே மாட்டி நின்றோம்

சகோதரன் இறைச்சியைத்தான்
சுவையென புசித்து மகிழ்ந்தோம்

நான் மட்டும் தானே இங்கே
நல்லவன் என்ற நினைப்பில்
எத்தனை பாவம் செய்தோம்
எம்மை
நரகுக்கே அனுப்பப் பார்த்தோம்

வந்ததே ரமழான் மாதம்- எம்
வயிற்றினை கையில் எடுத்து
வயிற்றிலே பசியை வைத்து
எம்
மமதையை அடங்க வைத்து -
ஒற்றுமை
கயிற்றையே கையில் தந்து
எம்மை
மாற்றியே போனதம்மா

வயிற்றதன் வழியால் எங்கள்
ஆன்மாவை
சிறையில் வைத்தோம்
அலைகின்ற விழிகளைத்தான்
அடக்கியே கட்டுள் வைத்தோம்

எம்மை கெடுக்கின்ற தூதன்
விழிகள் என்பதை
உணர்ந்து கொண்டோம்

வீறாப்புப் பேசித் திரிந்த
நாங்களே மாறிப் போனோம்
வீறுடன் வந்த ரமழான்
ஆணைக்குள் அடங்கிப் போனோம்

என்னென்ன பாடம் சொல்லி
எங்களைத் திருத்தி ரமழான்
அட இது
நாங்களா என்று
எண்ண
வைத்ததை
என்ன வென்பேன்

படைத்தவன் தன்னைத் தொழவும்
பக்குவம் இன்றி இருந்தோம்
கிடைக்கின்ற நேரம் மட்டும்
தொழுதிடல் போதும் என்று
எம்மையே ஏமாற்றித்தான்
அதுவரை வாழ்ந்திருந்தோம்

வந்ததும் ரமழான் கையில்
தந்ததும் குர்ஆன்தானே
ஓது நீ ஓது என்று
ஓர் அமைப்பிலே
எம்மை வைத்து
ஓதி நீ அல்குர்ஆனை
வெறுமனே மூடிடாதே
என்னதான் இந்தக் குர்ஆன்
சொல்கின்ற பாடம் என்று
ஆராய்ந்து பார் நீ என்று
எமக்கது பாடம் நடத்தி

தொழுகைக்கு என்று நேரம்
இருக்கிற ததனை எங்கள்
நெஞ்சத்தில் ஏற்றி வைத்து
பாங்கொலி கேட்ட நேரம்
பள்ளிக்கே விரைய வைத்து
பக்குவப் படுத்திச் சென்ற
பாசமே மிகுந்த நண்பன்
ரமழானே சென்று விட்டான்

ஏழைகள் வீட்டிலுள்ள
பூனைகள் படுத்த அடுப்பை
எரியவும் செய்த அந்த
அற்புதம்தானே ரமழான்
நேற்று
விடைபெற்றுச்
சென்றதம்மா

ஏழைகள் வீட்டு வாசல்
உணவுப்
பொருட்களால் நிரம்பவைத்து
ஆனந்தக் கண்ணீர் தன்னை
விழிகளில் வரவழைத்து
பிரார்த்தனை சாவி
மூலம்
சொர்க்கத்தின் கதவை  எல்லாம்
திறக்கவே செய்த ரமழான்
நேற்றுடன் சென்று விட்டாய்

அள்ளியே அள்ளித்தானே
கொடுக்கவே சொன்ன
ரமழான்
புள்ளியே போட்டு நம்மை
சொர்க்கத்தில் சேர்க்க வைத்தாய்

நேற்று நீ -

விடை பெற்றுச் சென்றதாலே
வேதனை உற்றோம் உண்மை
நண்பனே கலங்கிடாதே என்றுதான்
நீயும் சொல்லி
எம் கண்ணீரைத் துடைத்து விட்டாய்

கைகுட்டையாக நீயும்
ஷவ்வாலைப் பரிசளித்தாய்
பெருநாள்
கொண்டாடு எனப் பணித்தாய்


பெருநாள்
கொண்டாட
ஒன்று சேர்ந்தோம் 
உன் பெருமையை
எண்ணிக் களித்தோம்

மீண்டும் நீ அடுத்த வருடம்
எங்களை காண வருவாய்
இன்ஷா அல்லாஹ்

நீ புகட்டிய பாடம் எல்லாம்
மனதிலே இருத்தி நாங்கள்
அதுவரை காத்திருப்போம்
அழுக்கிலே அமிழ்ந்திடாமல்
என்றுதான் உறுதி சொன்னோம்

பெருநாளின் மகுடம் சூடி
பெருமிதம் கொண்ட யார்க்கும்
உரிமையாய் வாழ்த்து கூறி
உவகை நாம் கொள்ளுகின்றோம்

ஈத் முபாரக் !


- என். நஜ்முல் ஹுசைன்

(நோன்புப் பெருநாள் தினமான 11/4/2024 அன்று கெப்பிட்டல் டிவியில் ஒளிபரப்பான கவிதை)






புதன், 24 ஏப்ரல், 2024

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கம் 23/4/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் 

   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


சுறுசுறுப்பாய் பல பணிகள் தன்னில் நுழைந்து

சுமையென்றே எண்ணாது கடமை ஆற்றும் 

முறுவலிக்கும் இதயத்தார்; என்றும் முன்னே 

செல்வதற்கே துணிகின்ற மனமு முள்ளார் 

வறுத்தெடுக்கும் வெயிலிலே வாடும் மாந்தர் துயர்தீர்க்கும் 

மழையெனவே கவிதை பாடி

நறுமணத்தில் நம்மையெல்லாம்

மகிழவைக்கும் கவிஞரிவர் 

வாழ்த்துரைத்து வரவேற்போமே 


சட்டத்தை தன் வாழ்க்கைப் பயணமாக்கி

சத்தியத்திலும் நிலைக்க வேண்டுமென்று

கட்டத்துக்குள் தன்னை நிலைநிறுத்தி

கண்ணியமாய் பலர் மனதில் எழுந்து நிற்கும்

பட்டங்கள் பலவற்றை கல்வியோடும் 

பற்றித்தான் பிடித்திருக்கும் 

கவிதையோடும்

எட்டித்தான் பிடித்தவர்க்கே 

எங்கள் தலைமை தந்தேதான் நாம் மகிழ்ந்தோம்; அரங்கில் வைத்தோம்


எத்துறையில் தான் சார்ந்து இருந்த போதும்

இலக்கியத்தின் தாகத்தை நெஞ்சில் ஏந்தி

பத்திரிகை கவிதையென நின்றே இலங்கி

படித்ததுவும் பகர்வதுவும் பத்தி எழுத்தில்

முத்திரையே பதித்தவரை அழைத்து வந்தோம்

முன்னின்று கவியரங்கைத்

தலைமை யேற்க 

வித்துவத்தை காட்டுங்கள் எங்கள் அரங்கில்

வீறுடனே எம் கவிஞர் படையினோடு 


கவிஞர்

சட்டத்தரணி

ரஷீத் எம். இம்தியாஸ் 

தொண்ணூற்றி எட்டுக் கவியரங்கைத் தூக்கி வந்தோம்

தொண்ணூற்றி ஒன்பதனை 

உங்கள் தலைமேல் வைத்தோம்

நூறினிலே நாங்களுமே 

சுடராய் மின்ன

நூற்று ஒரு கவி படித்து

வாசல் திறப்பீர் 


வருக

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்