திங்கள், 26 அக்டோபர், 2026
சனி, 10 அக்டோபர், 2026
கவிஞர் காவத்தையூர் சுதர்ஸனி பொன்னையா
வலம்புரி கவிதா வட்டத்தின் 124 ஆவது கவியரங்கு 2026 ஜூலை மாதம் 27 ஆம் திகதி கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சுதர்ஸனி பொன்னையா அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
தன்குடும்பம் என்றேதான் எம்மை
எப்போது மேநினைக்கும் தையல்
தணியாத தாகத்தி னோடு
வைத்தாளே வகவத்தில் மையல்
தன்சுமையை பெரிதென்று எண்ணி
தூரத்தைப் பொருட்டாக எண்ணாள்
தலையாட்டி உடனே "நான்வருவேன்"
தகவலையும் மனங்குளிர தந்தாள்
தமிழுக்காய் தன்எழுத்தை வார்க்கும்
தகைமிகுந்தாள்; எம்உள்ளம் கவர்ந்தாள்
கவிதைக்குள் தன்எண்ணம் புதைத்து
கற்பனைக்கு புதுவடிவம் தருவாள்
அமிழ்ந்திருக்கும் மானிடர்கள் உணர்வை
தன்வரியால் எழுந்துவிடச் செய்வாள்
வகவத்தில் பொன்மகளாய் வீற்று
பெருமைகள் நாம்கொள்ளச் செய்வாள்
வலம்புரியும் நலம்புரியும் என்றே
வாஞ்சையுடன் நம்பிக்கை வைத்தாள்
வாவென்ற அழைப்புக்கு மகிழ்ந்து
வாசலுக்கு கோலமிட வந்தாள்
காவத்தை யூர் என்ற போதும்
கடுகளவும் மைல்கள் எண் ணாது
நாமத்தை நட்டிலாம் என்ற
நம்பிக்கையோடு இவள் வந்தாள்
கவிஞர்
பொன்னையா சுதர்ஸனி
இன்று தலைமை
உங்கள் பணி
பறித்திடுங்கள் கவிதை கனி
உங்களோடு இருக்கிறது
கவிஞர் அணி
இது கவியரங்கு
நூற்று இருபத்தி நாலு
கவிதை
நாற்று நட்டு கொண்டாடும்
நாளு
வாருங்கள்
கவிஞர் காவத்தையூர்
சுதர்ஸனி பொன்னையா
29/7/2026
புதன், 7 அக்டோபர், 2026
மாறியது நெஞ்சம் - சிறுகதை
மாறியது நெஞ்சம்
- என்.நஜ்முல் ஹுசைன்
அமீர் கவலையோடு நின்று கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. இப்படியொரு நிலைமை தனக்கு வருமென்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
" உம்மா.... இப்பவே வேணாம் உம்மா. இப்பவே கல்யாணம் எல்லாம் வேணாம் உம்மா. நா கொஞ்ச நாள் இப்படியே இருக்கேன்" அமீர் தாயாரிடம் கெஞ்சினான்.
"இல்ல அமீர் நா சொல்றத கேளுங்க. இப்ப எனக்கு நீங்க தொண. உங்களுக்கு நா தொண. நா கண்ண முடிடா நீங்க தனிச்சிருவீங்க. இப்ப நா இருக்கிறதால ஒங்களுக்கு வெளங்காது. அதனாலதான் சொல்றன். நா பாத்த பொண்ண கல்யாணம் பண்ணுங்க. அவ நல்ல அழகான பொண்ணு. ஒங்களுக்கு ஏத்த ஜோடி"
உம்மா சொல்வதிலும் நியாயம் இருந்தது. இருந்தாலும் இப்போதிருக்கும் ஆட்டோவை வைத்துக் கொண்டு ஒரு இல்லற வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியுமா ?
"அதெல்லாம் நீங்க கவலபடாதீங்க. நா பாத்த பொண்ணு பரீதாவும் ஏழ குடும்பத்தில உள்ள பொண்ணுதான். உங்கள அனுசரிச்சு போவா "
உம்மாவின் நச்சரிப்பு காரணமாக அமீர் பரீதாவை திருமணம் முடிக்க சம்மதித்தான். மார்க்கத்தில் பிடிப்புள்ளவன் அமீர். சீதனம் வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் முடித்தான்.
உம்மாவின் சொல்லைத் தட்டாதவன் என்பதால் பெண்ணைப் பார்க்காமலே திருமணம் முடித்தான்.
உம்மா சொன்னது உண்மைதான். பரீதா மிகவும் அழகாக இருந்தாள். அமீர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரு சில மாதங்கள் அவர்களது இல்லற வாழ்க்கை இன்பமாக கழிந்தது. அவனும், அவனது தாயாரும் இருக்கும் வீட்டிலேயே தனது மனைவியுடன் வாழ ஆரம்பித்தான்.
நாள் செல்ல செல்ல பரீதாவிடம் ஒரு மாற்றத்தைக் காண ஆரம்பித்தான் அமீர். ஏழைக் குடும்பத்திலிருந்து பரீதா வந்திருந்தாலும்கூட அவளிடம் ஒரு ஆடம்பர உணர்விருந்தது. அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிட ஆசைப்பட்டாள். ஆரம்பத்தில் பரீதாவின் ஆசைக்கு இணங்கி அவ்வாறு அமீர் அழைத்துச் சென்றாலும் அவனால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.
"எப்ப பார்த்தாலும் ஒங்களுக்கிட்ட பணம் இல்லதான். ஆசையா ஒரு ஹோட்டல்லுக்கு போய் தின்னுட்டு வருவோமென்டா அதுக்கு இப்படி யோசிக்கிறீங்க. பொண்டாட்டிட ஒரு சாதாரண ஆசையை நிறைவேற்ற ஏலாத நீங்களெல்லாம் என்னத்துக்கு கல்யாணம் முடிக்கிறீங்க ?"
பரீதாவின் வாய் நீண்டது. அவளிடமிருந்து வித்தியாசமான வார்த்தைகள் வெளிவர ஆரம்பித்தன.
"யா அல்லாஹ் என்னடா ஏன்ட மகனுக்கு வந்த சோதன. நானே ஏன்ட மகன்ட வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டுட்டேனே "
அமீரின் தாயார் புலம்பத் தொடங்கினார்.
பரீதா பல வேளைகளில் அவளை கொடுமைப்படுத்தியதையும், மோசமான வார்த்தைகளால் திட்டியதையும் மகனிடம் வெளிக்காட்டாமல் பொறுமை காத்த தாயால் தனது மகனை தனது மருமகள் மோசமான வார்த்தைகளால் பேசியதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
ஆம் இப்போதுதான் அமீரும், அவனது தாயாரும் அவதானித்தார்கள். பரீதாவிடம் முக அழகிருந்தது. அகம் அழுக்காகி இருந்தது.
அமீர் தனது மனைவியை சமாளிக்க ஆட்டோ ஓட்டுவதோடு இன்னும் சில பல வேலைகளையும் செய்ய ஆரம்பித்தான். பரீதாவுக்கு அடிக்கடி புதிய ஆடைகள் வாங்க வேண்டும். தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் போனிலும், டீவியிலும் காலத்தைக் கடத்த வேண்டும்.
அவளது ஆடம்பரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அமீர் முள்ளும் தோலும் ஆனான். பரீதாவோ மொழு மொழுவென்று கொழுத்துக் கொண்டே போனாள்.
இந்த இடையில்தான் இந்தச் சம்பவம்,
"முடியாது பரீதா, முடியாது, ஒரு நாளும் அத செய்ய முடியாது"
அழுத்தமாக சொன்னான் அமீர். அதைவிட அழுத்தமாக கத்தினாள் பரீதா,
"இல்ல கட்டாயமா இத நீங்க செய்யதான். இது நீங்க சம்பாரிச்சது. இல்ல அல்லாஹ்வா ஒங்களுக்குத் தந்தது. இத நீங்க கட்டாயம் எடுக்கலாம். இத எல்லாம் வித்து எனக்கு புதிய நகையும் பணமும் தாங்க. நா சந்தோஷமா இருப்பேன்"
"பரீதா ஒருக்காலமும் அது நடக்காது. அத தொடுறது ஹராம். மத்தவங்கட பதுவாவ சம்பாதிக்கிற வேல. அத நா ஒருநாளும் செய்ய மாட்டன்"
"பெரிய ஒங்கட ஹராமும், ஹலாலும். ஊர்ல எவ்வளவோ பேர் எத்தன ஜில்மால் பண்ணி வாழ்றாங்க. இது ஒங்கள தேடி வந்தது. நீங்க இவ்வளவு மடயனா இருப்பீங்கெண்டு நா நெனக்கவே இல்ல. எங்கட வாப்பாட கரச்சலுக்குத்தான் ஒங்கள முடிச்சன்"
வாய் தர்க்கம் நீண்டு சென்றது.
இவ்வளவுக்கும் காரணம் அமீரின் ஆட்டோவில் யாரோ மறதியாக விட்டு விட்டுப் போன தங்க நகைகள். குறைந்தது பத்துப் பவுண்களாக இருக்கும். அமீர் ஆட்டோவை வீட்டில் பார்க் பண்ணும் போதுதான் பார்த்தான். அங்கே கீழே ஒரு பேக் இருந்தது. திறந்துப் பார்த்தால் இந்தத் தங்க நகைகள். அதனைக் கேட்டுத்தான் பரீதா அடம்பிடிக்கிறாள். அல்லாஹுவுக்குப் பயந்த அமீர் அதில் கை வைப்பானா?
எத்தனையோ பேர் அன்று அவனது ஆட்டோவில் சென்றனர். யார் இதனை விட்டுச் சென்றிருப்பார் ? உரியவரிடம் இதனை ஒப்படைக்க வேண்டும். பிழையான ஒருவரின் கைகளில் இது போய்விடக்கூடாது.
பரீதாவின் கைகளுக்கு அகப்படாத வகையில் நகைகளை ஒளித்து வைத்தான். மூன்று நாட்கள் உரியவரைக் கண்டு பிடிக்க அரும்பாடுபட்டான் .
ஓர் ஏழைக் குடும்பத்திலுள்ள ஒருவர் அவரது மகளது திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள். எப்படியோ தவறி ஆட்டோவில் விழுந்து விட்டது. எங்கே விழுந்தது என்பதுகூட தெரியாமல் கலங்கிப் போய் நடைபிணமாய் இருந்தபோதுதான் அவர்களை அடையாளம் கண்டு நகைகளை ஒப்படைத்தான்.
"மகன் ஒங்களபோன்ட நல்லவங்களுக்கு அல்லாஹ் எந்தக் கொறையயும் வைக்க மாட்டான். நீங்க நல்லா இருப்பீங்க" கண்ணீரோடு அந்தக் குடும்பமே துஆ கேட்டது. ஆத்ம திருப்தியோடு திரும்பி வந்த அமீரின் மனதில் ஒரு மூலையில் வேதனை வேர்விட்டு ஓடிக் கொண்டிருந்தது.
நகைகளை ஒப்படைத்த கதையை கேட்டதுமே பரீதா பொங்கி எழுந்தாள்
"நீங்க எல்லாம் என்ன மனுஷன். பொண்டாட்டிட ஆசைய நிறைவேத்தாமா பெரிய தியாகியா வந்து நிக்கிறாரு. இந்த மனுஷனோட எல்லாம் எனக்கு வாழ ஏலாது. வாழ ஏலாது. நா இப்பவே ஏன்ட வாப்பாட ஊட்டுக்குப் போறன். இதுக்கெல்லாம் ஒரே வழி டிவோர்ஸ்தான் "
"அவசரப்படாதீங்க பரீதா அவசரப்படாதீங்க. கொஞ்சம் நிதானமாக இருங்க" அமீரும், அவனது உம்மாவும் எவ்வளவோ கெஞ்சியும் அந்த செவிட்டுக் காதுகளில் விழவே இல்லை. தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
அமீரும், உம்மாவும் பலமுறை அவளது வீட்டுக்குப் போய் கூப்பிட்டும் அவர்களை அவமானப்படுத்தியே அனுப்பி வைத்தாள். பாவம் அவளது தந்தையோ வாயைத் திறக்க முடியாத ஊமையாக இருந்தார்.
கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில் விவகாரத்துக்கான நோட்டீஸ் வந்தது. காதியார் கூட பரீதாவை சமாதானப்படுத்த முயன்றார். பரீதா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
இன்று மூன்றாவது தவணை. எப்படியும் காதியார் விவாகரத்தை அறிவித்துவிடுவார். அதற்காக இன்று காலையிலேயே அமீரும், உம்மாவும் காதி கோர்ட் வந்து விட்டார்கள். மறுமுனையில் பரீதாவும், வாப்பாவும் காத்திருந்தார்கள்.
அன்று காதி கோர்ட்டில் எக்கச்சக்கமான விவாகரத்து வழக்குகள் எங்களது சமுதாயத்தின் இன்றைய நிலையை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
காலையிலே வந்த அமீரின் வழக்கை காதியார் எடுத்தப்போது ஏறக்குறைய அது மாலை ஐந்து மணியைத் தாண்டியிருந்தது.
தீர்ப்பு வழங்க தயாரான நிலையில் பரீதாவைப் பார்த்து காதியார் கேட்டார்,
"பரீதா இதுதான் இறுதி சான்ஸ். நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க ?"
"சேர், சேர், நா நா இவரோடு சேர்ந்து வாழுறன். எனக்கு டிவோர்ஸ் வேணாம். டிவோர்ஸ் வேணாம்." பதறிக் கொண்டு சொன்னாள் பரீதா.
பரீதா என்ன சொல்கிறாள் என்று அங்கிருந்த யாருக்குமே விளங்கவில்லை.
பரீதா திரும்பத் திரும்பச் சொன்னாள்.
"எனக்கு டிவோர்ஸ் வேணாம். டிவோர்ஸ் வேணாம்."
காதியாரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
"ஏன் என்ன காரணம் ? இப்ப டிவோர்ஸ் வாணாம் என்றுறீங்க?"
"நா இன்டக்கி காலையில இருந்து இங்க நடக்குற வழக்க எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதில எத்தன மாப்பிளமார் குடுகாரங்க. எத்தன பேர் ஏமாத்துக்காரங்க. எத்தனப் பேர் பொண்டாட்டிமார கொடும செய்றவங்க. ஆனா ஆனா ஏன்ட மாப்புள்ள எவ்வளவு நல்லவரு. எனக்கு ஒருநாள் கூட ஏசியில்ல. கைய நீட்டி அடிச்சில்ல. எப்படியாவது நா கேக்குறத எல்லாம் தாறவராவும், அன்பா நடப்பவராவும்தான் இருந்திருக்கிறார். அவர் ஒரு நேர்மையான மனிதர். ஊராஊட்டு பொருளுக்கு ஆசையில்லாதவர். நாதான் மிகவும் மோசமா நடந்திருக்கிறேன். மறுபடியும் ஏன்ட வாப்பாட ஊட்டுக்குப் போன பொறவுதான் தெரிஞ்சிச்சு நா ஏன்ட மாப்பிளட ஊட்டுல ராணி மாதிரி வாழ்ந்திருக்கேன் என்று. நா இதுக்குப் பொறவு ஏன்ட மாப்பிளயோட சேர்ந்து அவர் மனம் நோகாம அடங்கி நடப்பன்.என்ன அவரோட சேர்த்து வைங்க. எனக்கு டிவோர்ஸ் வேணாம்" அவள் குலுங்கி அழுதாள்.
காதியார் இப்போது வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விவாகரத்து வழக்கை ரத்து செய்தார்.
"மகன் ஒங்களபோன்ட நல்லவங்களுக்கு அல்லாஹ் எந்தக் கொறையயும் வைக்க மாட்டான். நீங்க நல்லா இருப்பீங்க" என்று நகையைத் திரும்பப் பெற்ற குடும்பம் செய்த துஆ அமீரின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
- என். நஜ்முல் ஹுசைன்
13/08/2026
செவ்வாய், 14 ஜூலை, 2026
கவிஞர் மலாய்கவி டிவாங்சோ
வலம்புரி கவிதா வட்டத்தின் 122 ஆவது கவியரங்கு 02/05/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் மலாய்கவி டிவாங்சோ அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
மதிவளர் மன்றம் என்று மாணவர் நாங்கள் அன்று மாண்புடன் ஒன்று சேர்ந்து ஆற்றலை வளர்த்த வேளை தோளுடன் தோளும் சேர்த்து எம்முடன் ஒன்றிணைந்து தோழராய் வந்தவர்தான் இன்றெங்கள் தலைமை ஏற்றார்
தாய்மொழி தன்னை விடவும் தமிழ்மொழி மீது பற்று அதிகமாய் கொண்டதாலே எங்கள் வகவத்து மேடை தனிலும் தன்பெயர் பொறித்துக் கொண்டார்
கவிதைகள் எழுதிக் குவித்து கற்பனை தன்னைப் பெருக்கி காரியம் ஆற்றும் இவரோ முக நூலிலும் எழுந்து நின்றார்
ஒவ்வொரு நாளும் இவர்க்கு சான்றிதழ் வழங்கி மகிழ குழுமங்கள் காத்து நிற்கும்
சான்றிதழ் வாங்கிக் குவிக்கும் கவிஞர்கள் பட்டியலில் இவரும்தான சேர்ந்து கொண்டார்
தமிழிலே கவிதை படைக்கும் ஆற்றலே உள்ள இவரும் தன் தாய்மொழி தனையும் நினைத்து தன்பெயர் சூடிக் கொண்டார்
மலாய் மொழி வீட்டு மொழியாய் ஆட்சியே செய்த போதும் இதயத்தில் தமிழை ஏந்தி தன்மொழி ஆக்கிக் கொண்டார்.
மலாய்கவி டிவாங்சோ என்னும் மனங்கவர் கவிஞர் இன்று எங்களின் வகவ மேடை அலங்காரம் செய்ய வந்தார் - அதிகாரம் செய்ய வந்தார்
அரங்கினின் தலைமை ஏற்று அழகுற தமிழை வடித்து எங்களின் மனங்கள் எல்லாம் மகிழ்ந்திட செய்து நிற்பார்
கவிஞர் மலாய்கவி டிவாங்சோ
வான் மழை பொழியும் சோவென்று இன்று கவிதை மழை பொழியும் டிவாங்சோ என்று
வாருங்கள்
கவிஞர் மலாய்கவி டிவாங்சோ
திங்கள், 6 ஜூலை, 2026
கவிஞர் ராஜா நித்திலன்
வலம்புரி கவிதா வட்டத்தின் 123 ஆவது கவியரங்கு 2026 ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் ராஜா நித்திலன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)
மனதுக்குள்குடி யிருந்துஎம்மை
மகிழ்விக்க வைக்கின்ற ஒருவன்
மாண்பினையே தன்னகத்தே வைத்து
மதிப்போடு வாழ்கின்ற கவிஞன்
நினைவுக்குள் எப்போதும்
வகவம்
நிழலாக இவனோடு தொடர
நீங்காத நட்போடு எங்கள்
வளர்ச்சிக்குத்
தூணாகி நிற்பான்
தளர்கின்ற வேளைகள் தன்னில்
தட்டியெமை விழித்திடவே
செய்வான்
தயங்காதீர் நானிருப்பேன்
என்று
தருகின்ற தைரியங்கள்
நூறு
வளர்பிறைதான் வகவத்திற்
கென்று
வாஞ்சையுடன் எம்நெஞ்சை வருடி
வார்க்கின்ற வார்த்தை மழையாலே
துன்பங்கள் மறைந்துவிடும் ஓடி
தமிழன்னை கூட இவன் கவிதை
தனிநடையில் தனைமறந்து இருந்தாள்
தடதடவெ ன்று விழும் மொழியால்
தலைநிமிர்ந்து மனது அவள் மகிழ்ந்தாள்
அமிழ்தமழை பொழிகின்ற இவனை
அகம்தன்னின் அவள்வைத்து புகழ்ந்தாள்
அவள்அழகை இவன் பாடி மகிழ
ஏந்திடவே இல்லை கையில் ஒருதாள்
ஆசுகவி ராஜா நித்திலனை
சிம்மா சனம் போட்டு
மனதில் வைத்தோம்
இன்று
கவியரங்க தலைமையினை
அவன் தலையில் வைத்தோம்
மீண்டும் தலைமையினை
இவன் தலையில் வைத்தோம்
கவிஞர்
ராஜா நித்திலன்
இன்று நடப்பது
கவியரங்கு
நூற்று
இருபத்தி மூன்று
இன்னும் எங்கள் கவிஞர் இதயத்தில்
ஆழமாய் நீ ஊன்று!
வருக
கவிஞர் ராஜா நித்திலன்
வியாழன், 18 ஜூன், 2026
இப்போது புரிந்தது - சிறுகதை
இப்போது புரிந்தது
- என். நஜ்முல் ஹுசைன்
அப்துல்லாஹ் கலங்கிப் போனான். இப்படி ஒரு பதில் தனது பொஸ்ஸிடமிருந்து வரும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.
அவனது பொஸ் தாஹிர் ஹாஜியார் மிகவும் நல்ல மனிதர். இரக்க குணமுடையவர். எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். யாருடைய மனம் நோகும்படியும் பேசமாட்டார்.
அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஏழையாக இருந்து செல்வந்தர் ஆனவர். ஆனால் அவரது பிள்ளைகளிடம் அந்தப் பண்புகளை எதிர்பார்க்க முடியாது. அதிலும் அவரது மூத்த மகன் மிகவும் கர்வம் பிடித்தவன். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடன் முகம் கொடுத்தே பேசமாட்டான். அவர்களை மனிதர்களாகவே மதிக்கமாட்டான்.
அவர்களது நிறுவனம் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம். அங்கே நீண்ட காலம் அப்துல்லாஹ் பொறுப்பான பணியில் இருந்தான்.
தாஹிர் ஹாஜியார் அப்துல்லாஹ்வுடன் மிக அன்பாக இருப்பார். அவன் தனது பணிகளிலே நேர்மையாக இருப்பதை பலமுறை அவதானித்திருக்கிறார். சிலவேளை சில விடயங்களில் தாஹிர் ஹாஜியாருக்கே அப்துல்லாஹ் ஹலால், ஹராம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அதனால் மற்றவர்கள் மேல் காட்டும் அன்பைவிட அப்துல்லாஹ் மீது கொஞ்சம் கூடுதலான அன்பும், நன்மதிப்பும் தாஹிர் ஹாஜியாருக்கு இருந்தது.
அப்துல்லாஹ் எப்போதுமே எனக்கு அது வேண்டும், இது வேண்டும் எனக் கேட்க மாட்டான். தவிர்க்க முடியாத தேவையிருந்தால் மட்டுமே தாஹிர் ஹாஜியாரிடம் கேட்பான். மற்றபடி தனக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான். அதனை நன்றாக தெரிந்த தாஹிர் ஹாஜியார் அவன் இடையில் என்ன உதவி கேட்டாலும் அதனைக் கொடுக்கத் தயங்க மாட்டார்.
இன்றுதான் முதன்முறையாக அப்துல்லாஹ் கேட்டு தாஹிர் ஹாஜியார் "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த அப்துல்லாஹ்வுக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.
அவர் "இல்லை" என்று சொன்னபோது அருகில் மூத்த மகனும் இருந்தான். அவன்தான் அவரது நல்ல மனதைக் கெடுத்திருக்க வேண்டும். "இப்போது யாவாரம் ரொம்ப டல். பொறவு பார்ப்போம்" என்று சொன்ன பதிலை அப்துல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆம் ஹாஜியாரின் மூத்த மகன்தான் அதற்கு காரணம். அப்துல்லாஹ் கொடுத்த கடிதத்தை மகனிடம் கொடுத்துதான் ஹாஜியார் வாசிக்கச் சொன்னார்.
அதை வாசித்த உடனே அவன் அந்தக் கடிதத்தை மேசையில் வீசினான்.
"டெடி, இப்படி கேக்குற கேக்குற நேரமெல்லாம் இவங்களுக்கு பணம் குடுக்க வாணாம். நாங்கதான் நல்ல செலரி குடுக்குறோமே. அதுல இத எல்லாம் அவங்க பார்த்து கொள்ளணும். எங்களுக்கே எவ்வளவு கொமிட்மன்ட்ஸ் இருக்கு"
தன் டெடி அப்துல்லாஹ்வுக்கு உதவி செய்வதற்கு பெரியதொரு தடையைப் போட்டு நின்றான் அந்த மகன். ஹாஜியார் என்னதான் நல்ல குணமுள்ளவராக இருந்தாலும் தனது அன்பு மகனின் பேச்சை மீற அவரால் முடியவில்லை.
அதுதான் அவர் அப்துல்லாஹ்வுக்கு சொன்ன "இல்லை"க்கு காரணம்.
உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அப்துல்லாஹ் நன்கு புரிந்து கொண்டான்.
வீட்டுக்குச் சென்று மகளிடம் என்ன சொல்வது ? மனைவியிடம் என்ன சொல்வது ? என்ற கவலை அவனை உறைந்து போக வைத்தது.
இவ்வளவுக்கும் அவன் பெரிதாய் எதையும் முதலாளியிடம் கேட்கவில்லை. உயர்தரம் படித்துக் கொண்டிருந்த தனது மகளது டியூஸன் பீஸ், புத்தக செலவுகளுக்காக உடனடியாக அவனுக்கு 26,000/- ரூபா அளவில் தேவைப்பட்டது. அதனைத்தான் அவன் சரியாகவே கணக்கிட்டு தனது மகளின் படிப்புச் செலவுக்காக
25,600/- ரூபாய் தேவை என எழுதிக் கொடுத்திருந்தான்.
கலங்கிப் போயிருந்த அப்துல்லாஹ் "யா அல்லாஹ், நீயே போதுமானவன்" என்று மொழிந்தவனாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட ஆரம்பித்தான்.
வழமையாக வரும் தபால்காரன் அலுவலகத்திற்கு வந்த தபால்களை அப்துல்லாஹ்விடம் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் போன கையோடே அன்றைய பதிவுத் தபால்காரனும் வந்து சேர்ந்தான். அப்துல்லாஹ்விடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான்.
அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டுச் சென்று முதலாளியின் கெபினைத் தட்டி கடிதங்களை கொடுத்துவிட்டு வந்து தனது பணிகளில் மீண்டும் ஈடுபடலானான் அப்துல்லாஹ்.
ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும், தாஹிர் ஹாஜியார், "அப்துல்லாஹ், அப்துல்லாஹ்" என்று கூப்பிடுவது கேட்டது.
அப்துல்லாஹ் உள்ளே சென்றான். தாஹிர் ஹாஜியார் ஒரு என்விலப்பை நீட்டினார். கையில் வாங்கிய அப்துல்லாஹ் ஒட்டாமல் இருந்த என்விலப்பை அங்கேயே திறந்துப் பார்த்தான். அதில் 30,000/- ரூபா பணம் இருந்தது. எதுவுமே விளங்காமல் விழித்த அப்துல்லாஹ்விடம், "இது நீங்க காலையில கேட்ட பணம். முதலுல இல்லன்னு சொன்னேன்னு ஒன்னும் நெனைக்க வாணாம். இத கொண்டு போய் ஒங்கட மகள்ட படிப்ப பாருங்க" ஹாஜியார் சொன்னார். அருகே அவரது மகனும் அப்துல்லாஹ்வை சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென ஏன் இந்த மனமாற்றம். ஒன்றும் புரியவில்லை.
"ஜஸாக்கல்லாஹ் கைர்" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான் அப்துல்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ் ஒருவழியாக மகளது பிரச்சினை தீர்ந்தது. என்றாலும் ஹாஜியாருக்கும் அவரது மகனுக்கும் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்தின் காரணத்தை யோசிப்பதை மட்டும் அவனது மனம் நிறுத்தவில்லை.
தனது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த அப்துல்லாஹ்வைக் கூப்பிட்டு அன்று வந்திருந்த கடிதங்களை பைல் பண்ணக் கொடுத்தார் தாஹிர் ஹாஜியார்.
அதற்கான பைல்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பைல் பண்ணத் தொடங்கினான் அப்துல்லாஹ்.
அப்போதுதான் அவனது கண்களைக் குத்திக் கொண்டு நின்றது ஒரு கடிதம். அது அரசாங்க கடிதம். டெண்டர் ஒன்றில் கலந்து வெற்றி பெற்று பொருள்களை இறக்குமதி செய்து கொடுத்ததற்கான கொமிஷனைக் குறிக்கும் கடிதம்.
சில மாதங்களுக்கொரு முறை இப்படியான கடிதங்கள் வருவது வழக்கம். கொமிஷனுக்கான காசோலையும் அதனோடு வரும்.
இப்போதுதான் அப்துல்லாஹ்வுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது.
அப்துல்லாஹ் கொடுத்து விட்டுச் சென்ற கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கலானார் தாஹிர் ஹாஜியார். பதிவுத் தபாலில் வந்த கடிதத்தைத்தான் முதலில் உடைத்தார்.
உள்ளே இருந்த செக்கையும், கடிதத்தையும் பார்த்த ஹாஜியாருக்கு பெரிய அதிர்ச்சி.
இம்முறை கொம்பெனிக்கு வந்த கொமிஷன் பணம் 853,000/-. எப்போதுமே அந்தக் கொமிஷன் பணம் முழுமையாகவே வந்து விடும். ஆனால் இந்தத் தடவை அந்தத் தொகையிலிருந்து மூன்று சதவீதம் எனக் கூறி ரூபா 25,599/- கழித்து வந்திருந்தது. புதிய நடைமுறைக்கேற்ப இனிவரும் காலங்களில் கொமிஷன் பணத்திலிருந்து மூன்று சதவீதத்தை வரியாக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எப்போதுமே முழுமையாக வரும் கொமிஷன் பணம் இம்முறை மூன்று சதவீத கழிவுடன் வந்திருக்கிறது. அதுவும் அந்தக் கழிவுத் தொகை ஏறக்குறைய அப்துல்லாஹ் கேட்ட அந்தத் தொகை. அல்லாஹ் கணக்குப் போடுவதில் மாபெரும் வல்லவன்.
மகனைப் பார்த்து ஹாஜியார் சொன்னார், " இங்கப் பாருங்க. நாங்க அப்துல்லாஹ்வுக்கு கொடுக்க ஏலாது என்று சொன்ன பணத்தை அல்லாஹ் கழிச்சிட்டு அனுப்பிட்டான். அப்துல்லாஹ் போன்ற நேர்மையானவங்க எங்களுக்கிட்ட கேட்காம வேறு யாரிடம் கேட்பாங்க ? மகன் அல்லாஹ் மிக வல்லம உள்ளவன். எல்லாத்தையும் அறிஞ்சவன். நாங்க இப்படி உதவி செய்றதெல்லாம் எங்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொண்டு வராது. அல்லாஹ்ட பரக்கத்தான் கொண்டு வரும்"
கடிதத்தையும், காசோலையையும் கையிலே எடுத்துப் பார்த்துக் கொண்டே தனது டெடி சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் ," இயஸ் டெடி, நீங்க சொல்லுறது சரி. ஒருநாளும் இல்லாம இப்படி நடந்திருக்கு. இது அல்லாஹ்ட வேலதான். அல்லாஹ் எங்கட கண்ண தொறந்திருக்கான். நீங்க நெனச்சத அப்துல்லாவுக்கு கொடுங்க டெடி" என்றான். அவனது பேச்சிலும் ஒரு தெளிவு இருந்தது.
•••••••••••••••••••••••••••••••••
திங்கள், 25 மே, 2026
கவிச்சமர்
24/05/2026 ஞாயிறு காலை கொழும்பு புதுச்செட்டித் தெரு, ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் கவிஞர் எழுத்தாளர் ந. தாமரைச்செல்வியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
பல கலைநிகழ்ச்சிகளோடு ஒரு கவிச்சமரும் இடம்பெற்றது.
"பரபரப்பான வாழ்க்கையில்
பல்லாங்குழி ஆடும் துயரத்திற்கு காரணம்
கணவனே, மனைவியே" என்பது தலைப்பு.
மனைவியே என்ற தலைப்பில் நானும் கவிச்சமர் செய்தேன்.
அதிர்ஷ்டவசமாக எனது கவிதையை நண்பர் மொழிவாணன் தனது கைபேசியில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
Neethirajah Molivaanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன் நடுவராக இருக்க கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், ந. தாமரைச்செல்வி, இறைஞானக்கவி ரமீஸ், தயாளினி ஆகியோர் சமர் புரிந்தனர்.
- என். நஜ்முல் ஹுசைன்











