எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 8 மே, 2023

சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி


வலம்புரி கவிதா வட்டத்தின் 87 ஆவது கவியரங்கம் 06/05/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்த சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன் 

            தலைவர்,

            வலம்புரி கவிதா வட்டம்.              (வகவம்)



எழுத்தோடு தன் வாழ்வைப் பிணைத்து இங்கே

எதிர்நீச்சல் பலபோட்டு நிமிர்ந்தவராம்
இழுத்தேதான் பொதுப்பணியை
தனது பணியாய்
இன்பமென வேநினைத்து
உழைப்பவராம்
பழுத்தேதான் இனிக்கின்ற கனியைப் போல
பலபேரின் உள்ளங்களில் வாழ்பவராம்
உழைத்தேதான் வகவத்தை உயர்ந்த நிலையில்
உவகையுடன் வைத்து இங்கே பெருமை கொண்டார்

முதல்அடியை வகவத்தில் நானும் வைக்க
முகமலர்ந்து மனமுவந்து அழைத்தவராம்
நிதமும்தான்  மற்றவரின் ஆற்றல்கண்டே
நிறைமனதால் வாழ்த்திடவே
துணிபவராம்
இதயத்தில் எப்போதும் மற்றவர்க்கு
உதவிடவே வேண்டுமென
நினைப்பவராம்
பதவிக்குள் எம்மையெல்லாம் வைத்து இங்கே
பத்திரமாய்/பக்குவமாய் காத்து நிற்கும்
பெருந்தகையாம்


எண்பத்தி யேழான கவியரங்கம்
எழுச்சியுடன் சிறந்திங்கு நடப்பதற்கு
கண்பொத்தா பொறுப்புடனே பின்னால் நிற்கும்
காத்திபுல் ஹக்கென்னும் இவர்க்கே
நாங்கள்
கண்குளிர தலைமையினை தந்து
மகிழ்ந்தோம்
கண்ணியராம் நாகூர் கனி கவிஞரையே
கவியரங்கத் தலைவரென
அழகு பார்த்தோம்


சத்திய எழுத்தாளர் என்பதிலே
எப்போதும் நெஞ்சுயர்த்தி
நிற்பவரை
வித்தகமே இலக்கியத்தில் புரிந்தேதான்
தசாப்தங்கள் பல கடந்து
இருப்பவரை
இத்தினத்தில் கவியரங்கத் தலைவரென
ஆக்கியே நாம்
இறும்பூதி
பெருமை கொண்டோம்


சத்திய எழுத்தாளர்
வகவ சிரேஷ்ட ஸ்தாபகர்
எஸ். நாகூர் கனி அவர்களே
இது
இன்றைய கவியரங்கைத்
தலைமையையேற்று
நடத்துவதற்கான  அழைப்பு
இந்தக் கவிதையுள்ளங்களுக்கெல்லாம்
தெரியுமே
வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சியில்
நீங்கள் செய்துவரும் உழைப்பு
அடடா அதனால் இன்று நீங்கள்தானே
எங்கள் வகவ கவிஞர்களின் தலைப்பூ !

கவிஞர் கலாபூஷணம்
சத்திய எழுத்தாளர்
எஸ். ஐ. நாகூர் கனி
பேனா கூர் கனி அவர்கள் !


ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சொல் - கவிதை திக்வல்லையில் வாசிக்கப்பட்டது

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்



வாருங்கள் என்றெம்மை அழைத்ததுவே
திக்வெல்லை
தமிழ்த்தென்றல் தலைமையிலே
வந்தோம் நாம் இவ் வெல்லை

தென்றல் கவிதைகளை
சூறாவளி சொற்களிலே
சுமந்து வந்தோம்

கருக்களை மணந்து வந்த
சொற்களினால்
மணந்து நிற்போம்
உங்கள் மனங்களிலே
என்ற நம்பிக்கையில் !




கவியரங்கத் தலைவர்
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
உடன் பாட உடன் பட்ட
கவிஞர்கள்
அதிதிகள்
கேட்ட வுடன்
கைதட்ட காத்திருக்கும்
சபையோர்கள்
அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வந்து நின்றேன்
திக்வெல்லை

வரும் போது என்னோடு
கொண்டு வந்தேன் ஒரு
சொல்லை



சொல் என்னைப் பார்த்து
சொல் என்றது

உங்களைப் பார்த்து
சொல் என்றது

அதனைச்
சொல்ல வந்தேன்

அன்புள்ளங்களை
அள்ள வந்தேன்

குன் என்ற சொல்
உருவாக்கிய உலகம்

கூன் விழாமல் செல்
என்றுதானே
சொல்லித்தந்தது



இக்ரஹ் என்ற
ஒரு சொல்லே

இருளின் ஒளியின்
அர்த்தங்களைப்
பிரித்துக் காட்டியது
உலகத்தைப்
புரட்டிப் போட்டது

ஹிரா
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது

மனித இனத்தில்
மாற்றத்தை ஏற்படுத்திய
சொற்கள்
மறக்கடிக்கப்பட்டு விட்டனவா?

கஃபாவை
தனியே விட்டு விட்டு
சொர்க்கத்தை
இந்தப் பூமியிலேயே
கட்டப் பார்க்கும்
புதிய நம்ரூதுகள், காரூன்கள்

புதிய சொற்களுக்குள்
சின்னாபின்னமாகிறார்கள்

யாரிடமோ அவர்களை
விற்றுவிற்றார்கள்

அவர்களை
வல்லானிடம் நாங்கள்
விட்டு விடுவோம்

எங்களின்
பல சொற்கள்
இருளுக்கு மட்டுமே

எங்களைச்
சொந்தக்காரர்களாக்கி வைத்துக் கொள்கிறது

கனிகளை ஒதுக்கிவிட்டு
காய்களைக் கடித்தே
காலத்தை ஓட்டுகிறோம்

சுவையான கனிகள்
இருக்கின்றன
எங்கள் நாவுகள்
அழுகிய காய்களுடன்
நட்பு பாராட்டுகின்றன

சொல்லை
"ஷெல்" லாக்கி
குண்டு மழை
பொழிகிறோம்


எங்கள்
வாழ்க்கை
சொல் என்ற
வாகனத்தில்தானே
பயணம் செய்கிறது

கரடு முரடான
பாதைகளைக் கடக்க -
சரியாக
கடக்க
சொல் வாகனச் சாரதிகள்
அது
எங்கள் கைகளில்தானே
இல்லை இல்லை
வாய்களில்தானே
இருக்கிறது

நானும் நீங்களும்
எங்கள் சொற்களை
எங்கே இருந்து
பொறுக்கிறோம்
என்பதில்தானே
எங்களுக்கான
அடையாளம் இருக்கிறது

அதுதானே
நாங்கள்
பொறுக்கிகளா இல்லையா
என்று
பிரகடனப்படுத்துகிறது

நான் என்ற சொல்லுக்குள்
ஆயுள் கைதியாய்
போன மானுடம்

சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடியாமல்

மூச்சுத் திணறுகிறது

நாம் என்ற சொல்லுக்குள்
தன்னை வைப்பிலிடும்
மானுடம்
ஒன்றுக்கு நூறாய்
பெருக்கிக் கொள்கிறது

வெறுமனே
சொல் என்று
சொல்லி விடாதீர்கள்

அதனை
மின்சாரமாய்
செலவு செய்யுங்கள்

நீங்கள்
கோர்த்தெடுக்கும்
சொற்களே
உங்கள் வாழ்க்கையை
வார்த்தெடுக்கின்றன


அறிவுரை எனும் பெயரில்
செவிப்பறைகளை
கிழித்தெடுக்கும் சொற்கள்
இதயத்திலிருந்து
வழுக்கி விழுந்து விடுகின்றன

நேரம் தன்னைப்
புதைத்துக் கொள்கிறது
விழிகள்
உறக்கத்திடம்
அடிமையாகிப் போகின்றன

சமூக வலைதளங்களை
வடிகாணாய் உபயோகித்து
சாக்கடைச்
சொற்களை ஓட விடும்
எடுபிடிகள்

துர்நாற்றத்தை
தூய மணமாய் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்

ஆம்
சொல்லுக்குள்
வாசமும், நாசமும்
இருக்கின்றன

பெற்றோருக்கெதிரான
"சீ" என்ற ஒரு சொல்
பல்லாயிரம் பூட்டுக்களால்
மூடப்பட்டிருக்கும்
நரகக் கதவினை
உடைத்தெறியும்
கடப்பாரை  - மறந்து விடாதீர்கள்

சொல்லே உன்னால்
எத்தனைப்
புதுமணத் தம்பதிகள்

விவாகரத்து
சிலந்தி வலைக்குள்

சொற்களை முன்பின்
சரியாக
அடுக்குவதில்
கோலம் ஆட்சி செய்கிறது
அலங்கோலம்
அடித்து விரட்டப்படுகிறது

சினம் கலந்த
சொற்களிலே
சோரம் போய் விடாதீர்கள்

உலகத்தின் சுழற்சிக்கு
சொல் தானே காரணம்

சொல்லால்
எழுந்து நிற்கும்
மனிதன்

அழிந்து போவதும்
சொல்லால்தானே

நேயப்படுத்தும் சொற்கள்
நிறைய இருக்கும் போது
காயப்படுத்தும் சொற்களால்
ஏன்
வாயை நிரப்பிக் கொள்கிறீர்கள்

அன்பு என்ற
சொல்லை மட்டுமே
விதையுங்கள்
இன்பம் என்ற சொல்
உங்கள்
தோளில் கைபோட்டுக் கொள்ளும்

பல வேளைகளில்
சொல்லில்லா மௌனம்
சொல்லுள்ள பேச்சை
வென்று நிற்கிறது

நில் என்றது
என் சொல்

முதலில் நீ
சொன்னபடி நில்
என்றது என் சொல்

அதுவரை
போதும் நில்
என்றது
அது

அதனால் இன்னும்
சொல்லாமல் செல்கிறேன்

என்றாலும்
என் சொல்படி
நான் நிற்க
உங்கள் பிரார்த்தனைச்

சொற்களில்
என்னையும்
பன்னீராய்த் தெளித்துக் கொள்ளுங்கள்

அதற்கு முன்

என் சொல்
மனதை ரணமாக்கும்
கல்லா
ஆத்மாவை மயக்கும்
கள்ளா

சொல் வேந்தர்களே
சொல்லுங்கள் !

நன்றி !

என். நஜ்முல் ஹுசைன்
25/02/2023



வியாழன், 20 ஏப்ரல், 2023

ரமழான் கவிதை - 2023

 





இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/04/2023 ஞாயிறு இடம்பெற்ற கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீனின்"கவிதா நதி" நிகழ்ச்சில் ஒலிபரப்பான ரமழான் கவிதை 


சுகந்தம் நிறைந்த

ரமழான் மாதத்தை

வயிற்றோடு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


என் ஈமானிய சமுதாயமே ! 


உன் இதயத்தைத் தானே

இஸ்லாம் கேட்கின்றது 


உன் அமல்களை

இந்த மாதத்திற்கு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


அதனை

சொல்லித் தரத்தானே

இந்த ரமழான்

உனக்கு முன்னால்

வந்துள்ளது 


உன் இபாதத்துக்கும்

ஈமானுக்கும்

பாலம் போட்டுக் கொள் 


ஒன்றை யொன்றுத்

தொடாத

ஒன்றிலுமே பயனில்லை 


உன் வயிற்றை

நிரப்புவதும் 


அதை காலியாக

வைத்திருப்பதும்தான்

ரமழான் என்று

என் சமுதாயமே

ஏமாந்து போகாதே 


என்றுமே பசித்திருக்கும்

வயிறுகளை

உனக்கு அடையாளம் தெரியவில்லையா ? 


உனது ஈமானை நீ

பரிசோதித்திப்

பார்க்க வேண்டியிருக்கும் 


நீ 

செல்வந்தனாய்

இருக்கும் போதே 


சில்லறைகளுக்காய்

இத்தனை ஜனங்களா ? 


உன் கஜானாவுக்குள்

அழுக்குகளும்

இருக்கின்றனவா என்று

பரிசோதித்துப் பார்த்துக் கொள் 


அவைதானே

அழுக்குகள் சுமந்த 

மனித கோலத்தில்

தெருத்தெருவாய்

அலைகின்றன 


முஸ்லிம் உம்மத்தே

சுயநலம் உனக்குரியதல்ல 


பூனை உறங்கும் அடுப்புகள்

நாளைய உனது

நரக நெருப்பிற்குத்தானே

கட்டியம்

கூறிக் கொண்டிருக்கின்றன 


தோளோடு தோள்

நிற்பது

உனக்கு மட்டுமல்ல 


உனது

செல்வங்களுக்கும் கூட

கடமைதான்

என்று

உணர்ந்து கொள் 


ஒவ்வொரு ஆண்டும்

ரமழான் வரும்

போகும் 


எப்போதும் நீ

முஸ்லிமாகவே இரு ! 


     - என். நஜ்முல் ஹுசைன்

கவிஞர் வதிரி சி. ரவீந்திரன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 86 ஆவது கவியரங்கம் 05/04/2023 கொழும்பு 13 ரோயல் அகடெமியில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


தனக்கென்று தனிப்பாணி தன்னைக் கொண்டு
தமிழுக்கு அணிசேர்க்கும் வகவ கவிஞர்
மனங்கொண்டு அன்றுமுதல் இன்று வரையில்
மகிமையுடன் கவிபடைத்து உள்ளம் வெல்வார்
மனங்கோணா வகையினிலே எல்லோ ரோடும்
மனங் கவர வேநடக்கும் நல்ல மனிதர்
எனக்கென்றால் சம்மதமே என்று கூறி
எம் அரங்கின் தலைமையினைத்
தாங்க வந்தார்

போலீஸாய் தன் கடமை சிறப்பாய் செய்து
பொது மக்கள் சிக்கல்கள் தீர்த்து வைத்தார்
போலி யாய் தான் நடித்து எவரின் மனதும்
புண்படவே செய்யாத பண்பின் ஆளர்
வேலியாய் தான் வாழ்க்கை இல்லறத்தில்
வேட்கையுடன் வருவோரைப் பதிவு செய்து
ஜாலியாய்  அவர் வாழ்க்கை செல்லவென்று
வாழ்த்திவிடும் திருமண பதி வாளர்இவரே

ஈழத்து மெல்லிசையை ஆய்ந்து இவரும்
இன்புறவே நல்லாக்கம் தந்து உள்ளார்
வேழத்தின் பிளிறலுக்கு ஒப்பாய் நல்ல
வேரூன்றும் கவிதைகளும் படைத்தே உள்ளார்
ஆழ்மனது எங்ஙனுமே கவிதை கொண்ட
ஆர்ப்பாட்ட மில்லாத இந்தக் கவிஞர்
சூழ்ந்திருக்கும் நம் கவிஞர் படையை
நடத்த
சுடர்வரிகள் கொண்டேதான் முன்னே வந்தார்

சிதறி ஓடும் சிந்தனைகள்
சீராய் கோக்கும்
பதறி ஓடும் மானிடர்க்காய்
பாட்டுப் பாடும்
வதிரி தந்த கவிதை மகன்
வதிரி சி. ரவீந்திரன்

வரவேற்று உங்களிடம்
அரங்கைத் தந்தோம்
சுவையூற்றும் கவிஞர்களைத்
துணைக்கே  தந்தோம்

கவிஞர் கலாபூஷணம்
வதிரி சி. ரவீந்திரன் அவர்கள்


-   என். நஜ்முல் ஹுசைன்

வியாழன், 2 மார்ச், 2023

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - சிறுகதை

 


தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ! 


                 - என். நஜ்முல் ஹுசைன் 


கத்தாரிலிருந்து அப்பாதான் வீடியோ கோலில் பேசுகிறார். 


கனடா டொரொன்டோவிலிருக்கும் மனோகரன் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு கைபேசியை கையில் எடுத்தான். 


" இயஸ் டேட். ஹவ் ஆ யூ ? ஹவ் இஸ் கத்தார் ? (Yes Dad,  how are you  ? How is Qatar ?)" என்று மனோகரன் மகிழ்ச்சியோடு கேள்விகளை அடுக்கினான். 


அப்பாவின் உருவம் மட்டுமே கைபேசியில் தெரிந்தது. அவரது பேச்சு வரவில்லை. 


"டேட்.... " என்று மீண்டும் அழைத்த போது மறுமுனையிலிருந்து அப்பா பேசினார், 


"மனோ, தமிழில் பேசப்பா, தமிழில் பேசு" என்றார். அவரது குரல் தழுதழுத்தது. 


"டேட் வட் ஆ யூ டெல்லிங்? (Dad what are you telling ?)" என்று மனோகரன் ஆங்கிலத்தில்தான் பேசினான். 


"மனோ நான் சொல்றது விளங்கலையா ? இதுக்கப்புறம் என்னோடு தமிழ்ல பேசுறதென்னா பேசு. இல்லாட்டி பேசாத " 


அப்பாவின் குரலில் கடுமை தெரிந்தது. 


தமிழில் பேசவா ? நானா ? யோசித்தான் மனோகரன். 


அப்பாவுக்கு என்ன நடந்தது ? அப்பா சோமசுந்தரம் இலங்கையில் பெரிய இலக்கியப் பேச்சாளர்தான். அறிஞர் சோமசுந்தரம் என்றால் இலக்கிய உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. இலங்கையில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அப்பாவின் புகழ் பரவித்தான் இருந்தது. அவரது இலக்கியப் பேச்சைக் கேட்க மிகவும் பெரும் தொகையானோர் கூடுவர். அப்பாவுடைய இலக்கிய உரைகள் யூடியூப்பிலெல்லாம் மிகவும் பிரசித்தம். அப்பாவுக்கு தமிழ் எப்படித் தெரியுமோ அதே அளவு ஆங்கிலமும் தெரியும். வெள்ளைக்காரன் போல் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவரைப் பாராட்டாதோர் யாருமில்லை. 


அப்பா மனோகரனுடன் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் பேசுவார். 


மனோகரன் கனடாவுக்கு வந்து இப்போது பதினேழு வருடங்கள். ஊரிலிருந்த போது தமிழில் மிகவும் நன்றாகப் பேசிய மனோகரன் கனடா வந்த இந்த பதினேழு வருடங்களில் தமிழை விட்டும் மிகவும் தூரமாகிவிட்டான். அவனைச் சூழவுள்ளோர் அனைவருமே ஆங்கிலத்திலும் வேற்று மொழிகளிலும் பேசக் கூடியவர்களே. அதனால் தமிழில் பேச வேண்டிய தேவை அவனுக்கு இருக்கவில்லை. இப்போது அவன் சிந்திப்பது கூட ஆங்கிலத்தில்தான். அவனது மனைவியும் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்த போதும் அவளும் கூட ஆங்கிலத்தில் அத்துப்படி. அதனால் அவர்களது ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் கூட வீட்டில் ஆங்கிலத்திலேயே கதைத்தனர்.  மேலதிகமாக பிரெஞ்ச், ஜப்பானிய மொழி போன்றவற்றையும் சரளமாக பேசினர். 


கத்தாருக்குக் கூட அப்பா இலக்கிய சொற்பொழிவுக்காகத்தான் சென்றிருந்தார். அங்கிருந்த தமிழ்ச் சங்கம் அவரை அழைத்திருந்தது. 


அடுத்த வருடம் கனடாவுக்கும் வர இருக்கிறார். இங்கும் கூட அப்பாவின் சொற்பொழிவுகள் பல இடங்களில் நடக்கும். 


எப்போதுமே மனோவுடனும், மருமகளுடனும், பேரப் பிள்ளைகளுடனும் மிடுக்கான ஆங்கிலத்தில் பேசும் அப்பா, 


" மனோ தமிழில் கதைக்கிறதென்றால் கதை. இல்லாட்டி கதைக்காதே " என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. 


"அப்பா..." இத்தனை நேரம் 'டேட்' என்று அழைத்த மனோகரன் இப்போதுதான் "அப்பா" என்று அழைத்தான். என்றாலும்கூட அதற்கு மேல் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 


"அப்பா டோன்ட் கெட் எங்க்ரி.  நெக்ஸ்ட் டைம் ஐ ல் டோக் டு யூ இன் டமில் (அப்பா கோபப்படாதீர்கள் அடுத்த முறை தமிழில் பேசுகிறேன்)" என்று தயங்கித் தயங்கி ஆங்கிலத்தில் சொன்னான். 


அவனுக்குத் தெரியும் அவனது அப்பா மிகவும் அன்பானவர்.  இதுவரை ஒரே மகனான அவனை எப்போதுமே கடிந்து பேசியதில்லை. இதுவரை காலம் இல்லாமல் இன்று இப்படிப் பேசுகிறார் என்றால் அவரது மனதைப் பாதிக்கும் ஏதாவது நடந்திருக்க வேண்டும். 


"அடுத்த முற பேசும் போது என்னோட தமிழ்ல பேசு. அப்படி பேசினாதான் நான் பேசுவேன் " என்று சொல்லிவிட்டு அப்பா தொடர்பைத் துண்டித்தார். 


அப்பா போனை வைத்ததும்  மனோகரன் தமிழில் சில வார்த்தைகளை பேச முயற்சி செய்தான். அது மிகவுமே சிரமமாக இருந்தது. 


'அடடா இலங்கையில் எவ்வளவு அழகாக பேசிய தமிழ். என்ன நடந்தது இப்போது ?' தனக்குத் தானே

கேட்டுக் கொண்டான் மனோகரன். 


அப்பாவிடம் வந்த இந்த திடீர் மாற்றத்தின் காரணமென்ன ? இந்தக் கேள்வியும் மனோகரனை குடைந்துக் கொண்டே இருந்தது ?



நான்கு நாட்களுக்குப் பிறகு மனோகரனின் அப்பா மீண்டும் பேசினார். 


இப்போது அவர் இலங்கையிலிருந்தார். 


"அப்பா....... சொல்லுங்க......." மிகவும் தட்டுத் தடுமாறி மனோகரன் தமிழில் பேசினான். 


"மனோ நான் தமிழ்ல பேசுறது விளங்குதுதானே ?" 


"ஆம் அப்பா... ஆமா அப்பா... " மனோகரனின் வாயிலிருந்து சொற்கள் தடுக்கிக் கொண்டுதான் வந்தன. என்றாலும் அவனுக்குத் தமிழ் விளங்கியது. சிரமத்தோடு பேசவும் முடிந்தது. 


"அப்பா ஏன் தீடீருன்னு இப்படி பேசுறன் என்னு பாக்குறியா அதுக்கு காரணம் இருக்கு .....:" அப்பா பேசிக் கொண்டு போனார். மனோகரன் காதைத் தீட்டிக் கொண்டு ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் தமிழ். ஏதாவது சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போய் விடக் கூடாதே. 


"நான் கத்தாருக்கு போய் தமிழ் சங்கத்துல மூனு நாள் தொடர்ந்து பேசினேன்.  எனது பேச்ச கேட்க நிறைய கூட்டம் வந்திருந்தது. நிறைய இந்திய தமிழர்களும் இலங்கை தமிழர்களும் வந்திருந்தாங்க. இந்த மூனு நாள் பேச்சிலயும் ஒரு பையன அவதானிச்சன்.  மிகவும் ரசிச்சு எனது பேச்ச கேட்டுக்கொண்டிருந்தான்.  எனது பேச்சுக்கிடையே பலமுறை நான் அவனப் பார்த்தேன். அவனப் பார்த்தா ஒரு கத்தார் அரேபிய பையனப் போல இருந்தான். அவன் எப்படி எனது பேச்ச இப்படி ரசிக்கிறான் என்ற சிந்தன எனது பேச்சு முழுவதும் எனக்குள்ள ஓடிக் கொண்டே இருந்தது. 


நிகழ்ச்சி முடிஞ்சதும் பலர் என் அருகே வந்து கைகூப்பி என்னைப் பாராட்டிப் பேசினர். எல்லோரையும் மதித்து நான் பேசிக் கொண்டிருந்தாலும் எனது கண்கள் அந்த வாலிபனைத் தேடிக் கொண்டிருந்தது.  நான் நினைத்தது போலவே என் அருகே வந்த அந்த வாலிபன் அவனது நெஞ்சிலே கை வைத்து என்னுடன் பேசினான் 


"ஐயா நா உங்க பெரிய ரசிகன். யூடியூபில் உங்கள் பேச்சையெல்லாம் விடாமல் கேட்பேன்" அழகிய தமிழில் அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு எனது கண்கள் அகல விரிந்தன. 


நான் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டேன், 


"தம்பி நீங்க யாரு? உங்க பெயர் என்ன ? " 


"என்ற பெயர் சாபித் அஹமத்.  நான் இங்க கத்தார்தான்" 


"அடடா கத்தாரா ?" ஆச்சரியத்தோடு கேட்டேன். 


"ஆமாங்க. நான் பிறந்து வளர்ந்தது, பாடசாலைக்கு போனது எல்லாமே கத்தார்லதான்" 


எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல்ல. 


"கத்தாரா ? இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே எப்படி ? " ஆவலோடு கேட்டேன். 


"அது எங்க உம்மா, வாப்பா இலங்கைதான்.  வாப்பா இங்க பெரிய அமெரிக்க நிறுவனத்துல மனேஜர்.  உம்மா பிரபல பாடசாலைல இங்கிலிஷ் டீச்சர்" 


ஆவலோடு எனது பேச்சைக் கேட்க வந்தவனின் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருந்தேன். 


"நான் இப்படி தமிழ் பேசுவதற்கு எங்க உம்மாதான் காரணம். எங்க உம்மா திருமணம் முடிச்ச உடனே இங்க வந்துட்டாங்க. எங்க உம்மாவும் வாப்பாவும் இங்கிலிஷ்லதான் பேசிக் கொள்ளுவாங்க. ஆனா நான் அவங்களுக்கு மூத்த பையனா பொறந்த போது எங்கட வாப்பாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டாங்க. 


எங்க வீட்டில இதுக்குப் பிறகு நாங்க தமிழ்லதான் பேசனும்.  ஏன் இப்படி ஒரு திடீர் முடிவுன்னு வாப்பா கேட்ட போது உம்மா சொன்னாங்க

நாங்கெல்லாம் தமிழ்ல படிச்சுத்தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். அதுக்குப் பிறகு வேறு மொழி படிச்சாலும் அத எல்லாம் எங்களுக்கு புரிய வச்சது தமிழ்தான். எங்கட மார்க்கத்த கூட நாங்க தெரிஞ்சு கொண்டது தமிழாலதான். அதுதானே எங்கட தாய் மொழி. அது எங்கட முன்னேற்றத்தின் ஏணி. அத நாங்க வீட்டுல பேசாம போனா எங்கட பிள்ளைகளுக்கு தமிழ் என்ற மொழியே தெரியாம போகும். இந்த நாட்டுல அவங்க என்னென்னமோ படிப்பாங்க.  ஆனா அவங்களுக்கு நாங்கதான் தமிழ கற்றுக் கொடுக்கோனும். 


நாங்க இலங்கைக்கு போனா அங்கவுள்ள எங்கட உம்மா வாப்பாவுக்கு, உறவினர்களுக்கு பெருசா இங்கிலீஷ் விளங்காது. எங்கட பிள்ளைகள் அங்க போய் இங்கிலீஷ்லயே பேசிக் கொண்டிருந்தா அவங்க எப்படி இவங்களோட மனம் விட்டுப் பேசுவாங்க. உண்மையான பாசத்த காட்டுவாங்க. எங்கட உம்மா வாப்பாக்கும் எங்கட பிள்ளைகளுக்கும் இடையில எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. எங்கட தாய் மொழிய எப்போதும் எங்கட பிள்ளைகள் மறக்கவும் கூடாது. என்று சொல்லி எங்கட உம்மா வாப்பா வீட்டில தமிழ்லதான் பேசுவாங்க. அதுமட்டுமல்ல தமிழும் படிச்சுத் தந்தாங்க. நான் மட்டுமில்ல என்ட தம்பி, தங்கச்சி எல்லாமே நல்லா தமிழ் பேசுவாங்க. அதோட இங்க நாங்க இங்கிலிஷ் அரபு மொழிகளையும் படிச்சிருக்கிறோம். மலையாளமும், இந்தியும் பேசுவோம் " என்று அந்த வாலிபன் தனது வரலாறை சொல்லிக் கொண்டிருந்த போது எனது தலை சுற்றியது. 


இங்க நான் மட்டும் தமிழ் பேச்சாளரா இருந்து கொண்டு என்ட பிள்ளைகள தமிழ்ல பேசக் கூட முடியாம ஆக்கிட்டனே என்று நான் அடைஞ்ச கவலைகக்கு அளவேயில்ல. 


எங்கோ உள்ள ஒரு தாய், தாய் மொழிய பத்தி எனக்கு பாடம் நடத்தியிருக்கா.  எனது மனச் சாட்சி என்ன குத்தி குதறிக் கொண்டிருக்குது. 


அடே மகனே மனோ நீ இனிமே தமிழ்லயே பேசு. என்ட பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ படிச்சுக் கொடு. 


நானும் அம்மாவும் அடுத்த முற கனடாவுக்கு வரும்போது என்ட பேரப் பிள்ளைகளோட தமிழ்லதான் கொஞ்சி விளையாடணும் " 


கரகரத்த குரலில் அப்பா பேசினார் 


அந்த சத்தியத்தை முழுதும் உணர்ந்து கொண்ட மனோகரன்,

"நிச்சயமா அப்பா நிச்சயமா " என்று கண்ணீர் மல்க கூறிய போது அதில் நம்பிக்கையின் வெளிச்சம் தெரிந்தது.

(ஞானம் - மார்ச், 2023)



ஞாயிறு, 29 ஜனவரி, 2023

கொடுத்த வாக்கு - சிறுகதை

 


கொடுத்த வாக்கு

               -   என். நஜ்முல் ஹுசைன்



ஜமால் மிகவும் கவலையோடு நடந்து கொண்டிருந்தான். என்னடா இப்படி ஆகி விட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டான். வரும் போது வீட்டிலே எவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்லி விட்டு வந்தான். இப்போது எப்படி குடும்பத்துக்கு முகம் கொடுப்பான் ?

தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முன்னால் வரும் வாகனத்தில் பாய்ந்து இறந்து போவாமா ? என்று கூட மனம் சொன்னது.

ஜமால் மிகவும் வறியவன். வெல்லம்பிட்டியில் வசிக்கிறான். கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஜமால் வறியவன்தான் ஆனாலும் செல்வந்தன். ஆம்,  செல்வமாக பிள்ளைகளைத்தான் பெற்றிருந்தான்.  நான்கு பெண் பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகள். பெண்கள்தான் மூத்தவர்கள். ஆண் பிள்ளைகள் சிறியவர்கள். அப்படியென்றால் அவன் எப்படி உழைக்க வேண்டும் ? மாடாக உழைப்பது எப்படியென்பதை அவனிடம் பார்த்துக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை அளவோடுதான் பெற்றுக் கொண்டார்கள். அப்படியெல்லாம் படிக்க வைக்க அவனிடம் எந்த வசதியுமில்லை; அதற்கான அறிவுமில்லை. ஏதோ ஆண் பிள்ளைகள் கிழிந்த கொப்பியோடு போய் படித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை இல்லை பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். மூத்த மகள் கல்யாண வயதிலிருந்தாள். கொஞ்சம் வெள்ளையாக பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.  அதனால் அவளைக் கண்ட  பாத்திமுத்து தாத்தா தனது ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மகனுக்கு பெண் கேட்டுப் போய் விட்டார்.

தேடி வந்த வாய்ப்பை விட வேண்டாம் என ஜமாலின் மனைவி ஒற்றைக் காலில் நின்றதால் எந்தவித வசதியும் இல்லாவிட்டாலும் ஜமால் திருமணத்துக்கு சரி சொல்லிவிட்டான். 

பாத்திமுத்து தாத்தா போட்ட ஒரேயொரு நிபந்தனை பொண்ணுக்கு இரண்டு பவுண் சவடி(தாலி)  போட வேண்டும் என்பதுதான்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த  ஜமால் ஒருவாறாக தான் அவ்வப்போது தற்காலிமாக பாரமான சாமான்கள் தூக்கும் நஸீர் ஹாஜியாரிடம் போய் தலையைச் சொறிந்து கொண்டு விஷயத்தைச் சொன்னான்.  நஸீர் ஹாஜியர் இரண்டு கடைகள் கிரேண்ட்பாஸில் வைத்திருந்தார். போதாதற்கு ஒரு கடையின் மேல் மாடியை லொட்ஜ் ஆக்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்கள் கொழும்புக்கு சாரி சரியாக வந்து கொண்டிருந்த காலம். கொழும்பில் பல இடங்களில் லொட்ஜ் வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது.  பலர் வெளிநாடுகளுக்குப் போவதற்காக பாஸ்போர்ட் எடுப்பதற்கு போன்ற தேவைகளுக்காக அங்கு வந்து தங்கினர். மாதக் கணக்காக அங்கே தங்கியவர்களும் உண்டு. லொட்ஜ் செய்பவர்கள் தங்குபவர்களைப் பற்றி சரியான பதிவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பொலிஸார் வந்து பதிவுகளையும், ஆட்களையும் பரிசோதிப்பார்கள். பொலிஸார் மட்டுமல்ல, இராணுவத்தினர், கடற்படையினர் என்றும் விசாரிக்க வருவார்கள். யுத்த காலமாகையால் யாராவது தடைசெய்யப்பட்ட இயக்க உறுப்பினர்கள் தங்கியிருக்கிறார்களா என்று பரிசீலிப்பதற்காக வருவார்கள். எங்கிருந்தாவது இரகசிய தகவல்கள் வந்தாலும் அல்லது வந்ததாக சொல்லியும் விசாரிக்க வருவார்கள். அதனால் லொட்ஜ் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருபவர்களை அனுசரித்துப் போக வேண்டும். 

ஜமால் தனது மகளின் விஷயத்தை நஸீர் ஹாஜியாரிடம் சொன்ன போது அவர் மிகவுமே நல்ல மூடில் இருந்தார்.

"அடே ஜமால் மகளுக்கு எப்ப கலியாணம் வச்சிரிக்க? " என்று கேட்டார்.

உடம்பை எட்டாக வளைத்து ஜமால் சொன்னான் "ஹாஜியார் ஜூன் மாசம் 18 ஆம் தேதி "

"அடே அதுக்குத்தான் இன்னும் ரெண்டு மாசம் இரிக்கே" என்று சொல்லிக் கொண்டு மேசையிலிருந்த டயரியில் கலண்டரை திருப்பினார். "ம்.......ம்....."
என்று வாயிலே ஏதோ குதூகலமாக முணுமுணுத்தவராக ஜூன் மாதத்தைப் பார்த்தார். 

"சரி ஓன்ட மகள்ட கலியாணம் 18 ஆம் தேதிதானே நீ 17 ஆம் தேதி வா. ஓன்ட மகள்ட ரெண்டு பவுண் சவடி ஏன்ட கணக்கால.  நீ 17 ஆந் தேதி வந்து எடுத்துக்கோ"

ஜமாலின் காதுகளினால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.

"ஹாஜியார் என்ன சொல்றீங்க ?" பயத்தோடும், மகிழ்ச்சியோடும் ஜமால் கேட்டான்.

"அட அதுதான் சொல்லிட்டேனே.  திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு. நா சொன்னா சொன்னதுதான். போய்ட்டு 17 ஆந் தேதி வா " என்று சொன்னவர் மற்ற வேலைகளைப் பார்க்க எழும்பிப் போய்விட்டார்.

ஹாஜியார் ஏதாவது சின்ன உதவி செய்வார் என்று எதிர்பார்த்துத்தான் உதவி கேட்டான்.  இப்படி சவடியே தருகிறேன் என்று சொல்லுவார் என்று கொஞ்சமுமே எதிர்பார்க்கவில்லை. ஜமாலுக்கு கைகால் ஓடவில்லை. பெரிய வேலை முடிந்தது.  அடுத்தது சாப்பாட்டு வேலைதான்.

அதுவும் ஏழைக் குமர் என்று  சொல்லி வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பலர் ஒன்று சேர்ந்து அந்தப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டனர்.

இன்று ஜூன் 17 ஆம் திகதி. இன்று நஸீர் ஹாஜியாரைப் பார்க்க வந்தவனுக்குத்தான் இந்த  அதிர்ச்சி காத்திருந்தது.

காலையிலேயே நஸீர் ஹாஜியாரின் முதலாவது கடைக்கு வந்து விட்டான். அவர் அவசர வேலை காரணமாக லொட்ஜ் இருக்கும் கடைக்குப் போய் விட்டார் என்று அங்குள்ள ஊழியர்கள் சொன்னார்கள்.

அங்கிருந்து லொட்ஜ் இருந்த கடைக்குப் போனான் ஜமால். அங்கே பெரும் கூட்டம். பொலிஸார் இராணுவத்தினர் என்று பலரும் இருந்தனர். ஜமால் போகவும்,  மூன்று வாலிபர்களை பொலிஸார் விலங்கு மாட்டி வெளியே அழைத்து வருவதற்கும் சரியாக இருந்தது. அதுமட்டுமல்ல அங்கே இருந்த ஒரு பெரிய அதிகாரி லொட்ஜிலுள்ள அனைவரையும் வெளியில் செல்லுமாறும் அதை சீல் வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்தோடு நஸீர்  ஹாஜியாரையும் மிகவும் கடுமையாக அந்த அதிகாரி ஏசி கொண்டிருந்தது விளங்கியது.  அந்த களேபரம் அடங்கும் வரை ஜமால் ஒரு மூலையில் அமைதியாக இருந்தான். அவர்கள் அனைவரும் போனதன் பின்னர்,  மிகவும் கலவரத்தோடு அமர்ந்திருந்த நஸீர்  ஹாஜியாரிடம் ஜமால் சென்றான்.  "ஹாஜியார் அந்த சவடி...." என்று சொன்னதுதான் தாமதம் நஸீர் ஹாஜியார் தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் ஜமாலின் மீது கொட்டித் தீர்த்தார். தனது வாயில் வந்த அனைத்து தூசண வார்த்தைகளையும் கூறி ஜமாலை விரட்டி அடித்தார். சிலையாக நின்ற ஜமால் விழித்தான். இருந்தாலும் கூட  நஸீர் ஹாஜியார் அவனை ஏசுவதை விடவில்லை. அத்துடன் அவரது ஊழியன் ஒருவனை அழைத்து ஜமாலை அங்கிருந்து விரட்டச் சொன்னார். இப்போதுதான் ஜமாலுக்கு தலை சுற்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாளை மகளுக்குத் திருமணம். பாத்திமுத்து தாத்தாவிடம் இரண்டு பவுன் சவடி செய்து தருவதாக வாக்களித்து இருக்கிறான்.

'இப்போது என்ன செய்வது ?' அந்த யோசனையோடு தான் ஜமால் பித்துப் பிடித்தவன் போல் தெருவிலே சென்று கொண்டிருந்தான்.

அப்போதுதான் "ஜமால், ஜமால்" என்று அருகே வந்து யாரோ பேசியது கேட்டு திடுக்கிட்டு விழித்தான். அங்கே  ஜவுபர் நின்று கொண்டிருந்தான்.  "இந்த ஜமால், இப்படி பைத்தியக்காரன போல போகிறாய் ? என்ன விஷயம் ?" என்று கேட்டான்.

ஜமாலின் எண்ண அலைகள் பின்னோக்கிப் பாய்ந்தன. ஜவுபரும், ஜமாலும் பேசி பல வருடங்கள் ஆகின்றன.  அதாவது ஜமாலின் திருமணத்திற்கு முன்பே ஜவுபரோடு அவனுக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எங்கு ஜவுபரை ஜமால் கண்டாலும், ஜமாலை ஜவுபர் கண்டாலும் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்.  காரணம் அவர்களது இளமைப் பருவத்திலே நடைபெற்ற ஒரு சம்பவம் தான். இருவருமே ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்து அவர்களது வாலிப வயது வரை எல்லா நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாகவே விளையாடுவார்கள். நோன்பு காலங்களிலே இரவிலே பாதையிலே கோடு கீறி 'பார் சோப்' என்று விளையாடுவார்கள். அது கிளித்தட்டு ஆகும். அப்படி ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன வாய் தர்க்கம் அவர்களை இத்தனை வருட காலமாக பேச விடாமல் தடுத்து விட்டது. அவன்தான் இன்று வந்து ஜமாலுடன் பேசினான்.  ஜமாலுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அவனது கவலையை யாரிடமாவது ஒருவரிடம் இறக்கி வைக்கவும் வேண்டுமே. ஜவுபரிடம் நடந்த சம்பவங்களைச் சொன்னான்.

எப்படி வறியத் தோற்றத்தில் ஜமால் இருந்தானோ, அது போன்றுதான் ஜவுபரும் இருந்தான்.  அவனும் கூட கொஞ்சம் அழுக்குப் படிந்த ஒரு பழைய சட்டையை அணிந்து தான் எந்த  வசதியுமற்றவன் என பறைசாற்றிக் கொண்டிருந்தான். இருந்தாலும் அவன் ஜமாலுக்கு ஆறுதல் சொன்னான், "கவலைப்படாதே, கவலைப்படாதே அல்லாஹ் இருக்கின்றான்" என்றான். அப்படிச்  சொன்னவன் சும்மா இருக்கவில்லை ஏதோ யோசித்து விட்டு,  "சரி ஜமால் வா ஒரு ட்டிரை பண்ணி பார்ப்போம்" என்று சொன்னான்.  அது பற்றி எல்லாம் ஜமாலுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  ஜவுபர் அவனது கையைப் பிடித்துக் கொண்டு "இங்கே வா" என்று அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான்

கொஞ்ச தூரம் போனதும் அவர்கள் அங்கே ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள ஒரு கடையின் முன்னால் வந்து நின்றார்கள்.  இருவரும் பிச்சை கேட்டு வந்தவர்கள் போல் அங்கே நின்றார்கள்.  அந்தக் கடையில் வேலை செய்யும் ஒருவர் வந்து இருவரின் கைகளிலும் ஐந்து, ஐந்து ரூபா நாணயக்குற்றியைத் திணிக்கப் பார்த்தார். அதனை எடுக்காத ஜவுபர் கொஞ்சம் தைரியமாக  "நாங்க ஹாஜியார பாக்க வந்தோம்" என்றான். வந்த ஊழியர் முறைத்து விட்டு உள்ளே சென்றார். நீண்ட நேரம் அங்கே அவர்கள் காத்திருந்தார்கள். கவனிக்க யாருமே இல்லை. எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஜமால் ஜவுபரைப் பார்த்து சொன்னான், "வேண்டாம் அப்பா நாங்கள் போவோம். இங்கும் ஒரு வேலையும் செய்ய முடியாது. நாங்கள் போவோம்" என்றான்.  ஜவுபர் "இல்லை இல்லை பார்ப்போம் இங்கே எனக்கு கொஞ்சம் தெரிஞ்ச ஒரு ஹாஜியார் இருக்கிறார். அவர்ட்ட ஏதாவது கேட்டுப் பார்ப்போம்" என்று சொன்னான்.

சிறிது நேரத்தில் அங்கே இருந்த பளீல் ஹாஜியார் வெளியே வந்தார். இந்த இருவரையுமே ஏறெடுத்துப் பார்த்தார்.  ஏன் நிற்கிறீர்கள் ?  என்பது போல் பார்த்துவிட்டு இரண்டு நூறு ரூபாய்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.  ஜவுபர் பேசினான். "இல்லை ஹாஜியார்"  "இல்லையா அப்படி என்றால் என்ன ?" என்று கேட்டார் ஹாஜியார்.  ஜவுபர் தயங்கித் தயங்கி ஜமாலுக்கு நடந்த துயரத்தை தனக்கு தெரிந்த மொழியிலே அவருக்கு எடுத்துச் சொன்னான். ஆச்சரியம் கொஞ்சம் பரபரப்பாக இருந்த போதும் கூட அவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அப்போது பக்கத்திலே இருந்த ஒருவர் ஹாஜியாரின்   காதிலே 'இவர்கள் இருவரையும் பார்த்தால் பெரும்  கள்ளன்கள் போல் இருக்கிறாங்க. கவனம் ஹாஜி' என்று காதில் குசு குசுத்துவிட்டுப் போனார். ஹாஜியார் அதனைக் காதில் போட்டுக் கொண்டே  ஜவுபரின் கதையையும் கேட்டார்.

" அடேய் இங்கே ரெண்டு பேரும் உண்மையா சொல்றீங்களா ? "  என்று கொஞ்சம் உயர்ந்த தொனியில் அதட்டினார். ஜவுபர், "சத்தியமா ஹாஜியார், அல்லாஹ் மேல சத்தியமா ஹாஜியார்" என்று மிகவும் கெஞ்சலாக  சொன்னான்.
ஆனால் ஜமால் மௌனமாகத்தான் இருந்தான். 

என்ன நினைத்தாரோ தெரியாது பளீல் ஹாஜியார்,  "சரி அப்படியே இருங்கள்"என்று கூறிவிட்டு உள்ளே போனார்.  அப்படி சொல்லி விட்டுப் போய் இரண்டு மணித்தியாலங்களில் மேல் கடந்து போனது. யார் யாரோ வந்து போய் கொண்டிருந்தார்கள். ஆனால் பளீல் ஹாஜியார் வெளியே வரவே இல்லை. இப்போது ஜவுபருக்கும் அங்கே நிற்பது வீண் வேலை என்று தெரியத் தொடங்கியது. 

"பரவாயில்லை ஜமால் வா போவோம். நீ கவலைப்படாத அல்லாஹ் ஒனக்கு வழிய காட்டுவான்"

"கவலப்படாதே" என்று ஜவுபர் சொன்ன வார்த்தையில்  எந்த அர்த்தத்தையும் ஜமால் காணவில்லை. ஒரு நடைப்பிணமாக
ஜவுபரின் பின்னால் நடந்தான். வெளியே இருவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரும் போதுதான் யாரோ பின்னால் ஓடி வருவது தெரிந்தது.

"ஹாஜியார் ஒங்கள கூப்புடுரார்!"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும்  ஒரேயடியாக திரும்பினார்கள்.
வந்த கடை ஊழியர் ஹாஜியாரின் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

அவருக்கு முன்னால் அங்கே ஒரு சிறிய நகை பெட்டியில் சவடி இருந்தது.  யாருக்கோ செட்டியார் தெருவில் கோல் எடுத்து கூறி கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்.

" ஏய் இங்க பாருங்க அல்லாஹ்வை நம்பி உங்களோட வார்த்தைகளை நம்பி குமரு காரியம் என்று இந்த சவடிய தாரன்.  இதை கொண்டு போய்  மகள்ட கல்யாணத்தை சந்தோஷமா நடத்துங்க. சரி பிஸ்மில்லா போங்க" என்று ஜமாலின்  கையிலே கொடுத்தார் ஜமாலுக்கு எதையுமே நம்ப முடியவில்லை. யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஹாஜியாருக்கு நன்றி  சொல்வதா ? இல்லாவிட்டால் இத்தனை காலம் பகையாக இருந்த ஜவுபர் வந்து இப்படியான ஒரு பேருதவியை செய்திருக்கிறானே அவனுக்கு நன்றி சொல்வதா ? தலைகால் புரியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். "அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று அவனது நாவு பலமுறை முணுமுணுத்தது.

ஹாஜியாருக்கு பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஜமால் ஜவுபரின் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பளீல் ஹாஜியாரின் மகனைப் பரிசோதித்த அவர்களது குடும்ப டொக்டர் தொண்ணூற்றி ஒன்பது வீதம் அது கென்சர் என்று இரகசியமாக சொல்லி ஒரு விசேட டொக்டரைப் பார்க்கும்படி அறிவுரைச் சொன்னார். மிகவுமே கலங்கிப் போன பளீல் ஹாஜியார் யாருக்குமே பெரிதாக காட்டிக் கொள்ளாமல் நவலோக்கவில் ஒரு விசேட டொக்டரிம் காட்டி ஆலோசனைப் பெற்றார். மகனை ஸ்கேன் பண்ணச் சொன்ன டொக்டர் இன்று காலைதான் அவருக்கு மருத்துவ நிலையத்திற்கு வரச் சொல்லியிருந்தார். நீண்ட தொழுகையின் பின்பும் பிரார்த்தனையின் பின்பும் சென்ற பளீல் ஹாஜியாரிடம் ஸ்பெஷலிஸ்ட் டொக்டர் மிகவும் தீர்மானமாக சொன்னார் " இது கென்சரே இல்லை. இது வெறும் வயிற்று வலிதான். மிகவும் சாதாரணமாக  இதைக் குணப்படுத்தி விடலாம். கவலைப்படவே தேவையில்லை"

டொக்டர் சொன்ன அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டதுமே பளீல் ஹாஜியார் மனதுக்குள் நிய்யத் வைத்தார்.

"யா அல்லாஹ் இன்று எந்த ஏழை வந்து எதைக் கேட்டாலும் அதனை நான் கொடுக்கிறேன்"

அந்த நிய்யத்தை நிதர்சனமானமாக்கி விட்டு ஜமால், ஜவுபருடன் போய் கொண்டிருந்ததை பளீல் ஹாஜியார் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


(தினகரன் வாரமஞ்சரி - 21/01/2023)

வெள்ளி, 20 ஜனவரி, 2023

கவிஞர் கவிநேசன் நவாஸ்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 83 ஆவது கவியரங்கு 06/01/2023 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கவிநேசன் நவாஸ் அவர்களுக்கு  இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் -

என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


மொழியினையே தனக்கேற்ற விதத்தில் வளைக்கும்
மோகனமாய் ஆற்றலினை நிரம்ப வைத்து
வழியெங்கும் இவன் தமிழை வாழ்த்திப் பேச
வாசகர்கள் கூட்டமதை பெற்றான்; பேறான்
அழியாத தமிழினிலே கோலம் போட்டே
அற்புதமாய் வானவில்லின் கவிதை யாப்பான்
பிழிந்தேதான் எம்மனதை ஆட்சி செய்ய
பிறந்தேதான் வந்து நின்றான் கவிதை நேசன்

வலம்புரியும் வளம்பெறவே வேண்டுமென்ற
வாஞ்சையினை நெஞ்சமெல்லாம் ஏந்தி இவனும்
வலம்வருவான்; நாள் தோறும் தோளும் தருவான்
வார்த்தையினால் மட்டுமல்ல இவனும் எங்கள்
நலம்கருதி பலவேலை நன்றாய் செய்வான்
நாம் இவனை கவியரங்கத் தலைமைதன்னில் இன்றமர்த்தி
நெஞ்சமெல்லாம் மகிழ்வு கொண்டோம்

கவிநேசன் நவாஸ் இன்று கவிதைத் தலைவன்
கவிஞர்களை ஒன்றிணைத்து முன்னே செல்வான்
புவிவெல்லும் இவன் கவிதை நாளை என்றே
புள காங்கிதம் கொண்டே வாழ்த்தி அழைப்போம்

கவிஞர் கவிநேசன் நவாஸ்
83 ஆவது வகவ கவியரங்கம்
உன்னிடத்தில்
அணைத்தே நீ வைத்துக் கொள்
எம்மையெல்லாம்
உன்னிடத்தில் !

கவிநேசன் நவாஸ் !