எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கலாபூஷணம், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி




24/12/2015 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 23 வது கவியரங்கை தலைமை ஏற்று நடத்த வகவ ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான கலாபூஷணம், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்


இலக்கியத்தில் பழுத்த பலா
இவரென்றாலும்
இதயத்தில் துளி கூட
அதனைக் கொள்ளார்

இலக்கினையே இழக்காது
பேனாமுனையை
சமுதாய துயர் தீர்க்க
இயங்கச் செய்தார்

சத்திய எழுத்தாளர்
பட்டம் தாங்கி
வித்துவத்தை காட்டி இவர்
வியக்க வைத்தார்

துலங்கிடவே வலம்புரியும்
கவிதை உலகில்
துணை நின்று
தூணானார்
தாயும் ஆனார்

இளைஞனென சுறுசுறுப்பாய்
இயங்கி வகவ
பணிகளையே இன்றும்தான்
தலைமேற் கொண்டார்
வாழைத்
தோட்டத்தை முற்படுத்தும்
இவரும் Kகனிதான்
இலக்கியத்தில் கனிவுதரும்
இதயக்கனிதான்
எங்கள்
இதயத்தைக் கவர்ந்து நிற்கும்
நாகூர் Gகனிதான்

கலாபூஷணம்
காத்திபுல் ஹக்
சத்திய எழுத்தாளர்
நாகூர் Gகனியே
நா கூர் Kகனியே
வாழைத்தோட்டத்து
தாகூர் Gகனியே

வகவத்தை உங்கள்
தலைமேல் வைத்தீர்கள்
இன்று வகவம்
கவியரங்கை உங்கள்
தலைமேல்
வைத்தது......

வியாழன், 31 டிசம்பர், 2015

Islamic Song written by N. Najmul Hussain








அல்லாஹ்வின் பாதையிலே அழைத்தே வந்தாய்
அல்லல்களை களையும்வழியும் சொல்லித் தந்தாய்
பொல்லாத தீங்கெல்லாம் போக்கியே நின்றாய் - ரமழானே
பெருமையுடன் விடையும் பெற்றாய்


எத்தனையோ பாவத்திலே மூழ்கிக் கிடந்தோம்
எம்மை நாம் மறந்தே மயங்கி இருந்தோம்
நித்திரையை கலைத்தே விழிக்கவும் செய்தாய்
நிம்மதியை மறுமையிலே கிடைக்கச் செய்தாய்
சொத்தான ரமழானே எங்கள் வாழ்க்கை
சொர்க்கத்தில் தொடர்வதற்கு வழி நீ அமைத்தாய்                               

(அல்லாஹ்வின் பாதையிலே..)


எங்களையே மறைவழியில் வைத்தே நின்றோம்
எம்மோடு ஈமானை சுமந்தே கொண்டோம்
தங்காத செல்வத்தை மகிழ்ந்தே தந்தோம்
தாரணியில் வறுமையினை குறைத்தே வைத்தோம்                             
சங்கைமிகு ரமழானே உன்னால் நாங்கள்
சத்தியத்தை உண்மையிலே உணர்ந்தே வென்றோம்    

(அல்லாஹ்வின் பாதையிலே)




-              என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 30 நவம்பர், 2015

கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது கவியரங்கு 25/11/2015 அன்று இடம்பெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞரும் இசைக் கலைஞருமான எம்.ஏ.எம். ஆறுமுகம் அவர்களை நான் இவ்வாறு அழைத்தேன்.
                                                                                  - என். நஜ்முல் ஹுசைன் 


நாடெங்கும் இவன் பார்வை சுற்றும்
அழுகுரல்கள்
இவன் நெஞ்சைப் பற்றும்
வைப்பானே இவன் அங்கு பற்றும்
உணர்வெங்கும் கொழுந்தே தீ பற்றும்


மரபுக்குள்ளே
தானே நிற்பான்
எண்ணத்தை
பிசகின்றி வைப்பான்
தீமைகள் கண்டாலே கொதிப்பான்
அது யாராக இருந்தாலும்
எதிர்ப்பான்

போலீஸ் -
காக்கிச் சட்டையும்
அணிந்தான் - கையில்
துப்பாக்கியும் கூட கொண்டான்
இரண்டுக்கும் உள்ளே பாயும்
கவிதையை
ஆயுதம் என்றான்

கவிதை ஆயுதம் ஏந்தி - அன்றே
வகவ அரங்கினில் மிளிர்ந்தான்
நெஞ்சை நிமிர்த்தித்தான் சொன்னான்
இன்றும்
அந்த நெஞ்சோடே உள்ளான்

இசைந்தான் இன்றவன்
இசைக்கும்
எமையெல்லாம்
அசைக்கும் வரமும்தான் பெற்றான்

வெள்ளையாய் கொண்டான் அகமும்
பேச்சினில் தந்தான் சுகமும்
கொள்ளையாய் சுவைகள் ஏந்தி
கவியரங்க தலைமை ஏற்று
கவர்ந்திட வந்தான்
ஆறுமுகமும்

கவிஞா
எம். ஏ.எம். ஆறுமுகம்
இன்றுனக்கு கவியரங்க
தலைமை
கொண்டு வா மீண்டும்
எம் இளமை


புதன், 11 நவம்பர், 2015

இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது கவியரங்கு 27-10-2015 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமை ஏற்று நடத்துமாறு இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்

மீண்டும் வகவம்
உயிர் பெறவே
தனது மூச்சைத் தந்தவனாம்


வேண்டும் வகவம்
கவிஞருக்கு
என்று
வேர்வை சிந்தி உழைத்தவனாம்

தூண்டும் கோலாய்
தானிருந்து
திறம்பட
பணியைச் செய்பவனாம்

மாண்டுப் போகக் கூடாது
முனைப்பில்
வெற்றிப் பெற்றவனாம்

அஞ்சா நெஞ்சன்
இளநெஞ்சன்
அகலப் பார்வை
பார்த்திடுவான்

ஆழம் இருக்கும்
கவி வரியில்
அகிலம் முழுதும்
பறந்திடுவான்

உலகில் அவலம் கண்டாலே
பேனா வழியால்
கொதித்தெழுவான்
துயரக் கதைகள்
சொல்லி இவன்
மேடை மீதே
கிளர்ந் தழுவான்

அவர்க்காய்
நெஞ்சை நிமிர்த்தி இவன்
கவிதை வழியால்
போர் தொடுப்பான்

போராளி இவன்
போராளி
உரிமைக்காக -
அலைகள் வீசும்
பேராழி

பிறருக்காய்
குரல் எழுப்பும்
படைப்பாளி

ஊரெல்லாம் வாழ்த்துவது
“இவன் வாழி”

எங்கள்
செயல் வீரர் செயலாளர்
இளநெஞ்சன் முர்ஷிதீன்
கவிதைகளில்
கொட்டுவது தேன்
கொட்டுவது தேள்

இளநெஞ்சன் முர்ஷிதீன்
இன்று
கவியரங்கை நடத்து
எங்கள் இதயங்களைப் பிடித்து…………

வியாழன், 1 அக்டோபர், 2015

கவிஞர் ஈழகணேஷுக்கு................

வலம்புரி கவிதா வட்டத்தின் 20வது கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் ஈழகணேஷுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
 

- என்.நஜ்முல் ஹுசைன்



ஆழம் நிறைந்த சொல்லுக்கு
சொந்தக்காரன்
ஆளும் இவனது வரிகள்
எங்கள் நெஞ்சின்ஓரம் - ஓர்
ஆளும் இவனது பார்வையை விட்டுச்
செல்லான் தூரம்
நாளும் சூழலைப் போற்றிப் பாடும்
பாட்டுக்காரன்


வாழும் மனித நேயன்
எங்கள் சொந்தக்காரன்
வாழும் வகவ மூச்சுக்காற்றின்
பங்குக்காரன்
சூழும் எங்கள் சிக்கல் தீர்க்கும்
கெட்டிக்காரன்
எதையும் இதமாய் எடுத்துக் கொள்ளும்
பக்குவக்காரன்

நீளும் இவனது புகழைப் பட்டியல்
போட்டுச் சொன்னால்
போதும் இனிநாம் தலைமை ஏற்க
அவனை அழைப்போம்

ஆளும் கவியே ஈழகணேஷே தலைமை ஏற்பாய்
கோலும் ஏந்தி கொள்கை நாட்டி இதயம் அமர்வாய்

ஈழகணேஷ்
இன்றுனக்கு தலைமை
மறையவை எங்கள் முதுமை