எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 30 அக்டோபர், 2024

நாவுகளின் பயணம்

 வலம்புரி கவிதா வட்டம் வெளியிட்ட "வகவக் கவிதைகள்" நூலில் இடம்பெற்ற எனது கவிதை


 - என். நஜ்முல் ஹுசைன்


நாவுகளின் பயணம்


வீதிகள் எங்கும் 

எங்கள் நாவுகளின் 

வெறிப் பயணம்


பழகப் பழகப் 

புளித்த

பாலாய் போனதா 

அம்மாவின் சமையல்


அம்மாக்களையும் சேர்த்துக் கொண்டு

தெருவெங்கும்

அமர்ந்து கொண்டு


வீட்டு அடுப்புகள்

அடிக்கடி ஓய்வில்

பாதையோர அடுப்புகள்

அணையா விளக்காக 


வீட்டுக்குள் ஒதுங்கியிருந்த 

மேசை

பாதையெங்கும்


மறைந்து தின்ற காலம்

மலையேறி விட்டது

காட்டிக் கொண்டு தின்பதில்தானே 

கொம்பு முளைக்கிறது 


நாட்டில் அகோரப் பசி

தாண்டவமாடுகிறது

நிரூபிக்கும் 

பாதையோர மேசைகள் 


வறுமையின் வயிறுகளுக்கு 

நாசி வழியாக 

வைக்கப்படும் விருந்து


மத்திய தரம்

உயர் தரமாகவும்

உயர் தரம் 

மத்திய தரமாகவும்

உரு மாறும் இடம்


எண்சாண் உடம்புக்கு

வயிறே பிரதானம் 

என்பதன் சாட்சி


நளன்கள்தான் 

இப்போது

பணம் வைப்பிலிடப்படும்

இயந்திரங்கள்


அடடா

எப்படிச் சுவைத்து

உண்கிறது நாவு

ஆனால் உடம்புதான்

பாவம் !


- என். நஜ்முல் ஹுசைன்

புதன், 7 ஆகஸ்ட், 2024

கழுதைக்குத் தெரியுமா...... ? - கவிதை

 2024, ஆகஸ்ட் மாத "ஞானம்" சஞ்சிகையில்



கழுதைக்குத் தெரியுமா...... ?

ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி
கற்பூரமும் கழுதையும்
இடம் மாறிக் கொள்கின்றன

எனக்கு
கவிதை கற்பூரம்
என் நண்பன்
கழுதை

அவனுக்கு
கிரிக்கெட் கற்பூரம்
நான்.......

கழுதை !


- என். நஜ்முல் ஹுசைன்


படித்த மாணவன் - சிறுகதை

 04/08/2024 "தமிழன் வாரவெளியீட்டில்" இடம்பெற்ற எனது சிறுகதை -


படித்த மாணவன் !


        -                                                  என். நஜ்முல் ஹுசைன்


சரவணன் ஆசிரியருக்கு தலை சுற்றியது.  குமரன் இப்படி கை விரிப்பான் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எத்தனை நம்பிக்கையோடு அவர் வந்தார். சென்றவுடன் கட்டி அணைப்பான்; சாப்பிடச் சொல்வான்;  சுகம் விசாரிப்பான் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு வந்தவருக்கு, அவன் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவரோடு பேசிய வார்த்தைகள் ஒன்றிரண்டுதான்.  அவன் பேசியதெல்லாம் கைபேசியோடுதான். இப்படி ஏமாற்றமாக போய்விட்டதே.


குமரன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பாடசாலைக்கு வருவதற்கு ஒழுங்கான ஆடைகள் கூட அவனிடம் இருக்கவில்லை. என்றாலும் படிப்பில் கெட்டிக்காரன். சரவணன் ஆசிரியர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். அவனுக்கு இலவசமாக பிரத்தியேகமாக பாடம் நடத்தினார். அவனுக்கு நல்ல ஆடைகள் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட நல்ல உணவும் வாங்கிக் கொடுத்தார். பல வருடங்கள் அவனுக்குத் துணை நின்றார். அவரது கனவு வீண் போகவில்லை. கல்வியிலே குமரன் மிகவும் சிறப்படைந்தான். இப்போது கொழுத்த சம்பளத்தில் பெரியதொரு நிறுவனத்தில் மிகவும் உயர் பதவி வகிக்கிறான்.  அவன் உபயோகிக்கும் வாகனம் மட்டும் பல கோடி பெறுமதியானது. அவன் வாழும்  ஆடம்பரமான வாழ்க்கைக்கு அதுவே கட்டியம் கூறியது. 


குமரன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரவணன் ஆசிரியர் ஒருமுறை கூட அவனைச் சந்திக்கச் செல்லவில்லை. ஆனால் இன்றுதான் முதன்முறையாக அவனது வீடு தேடிச் சென்றார். அதுவும் தனது மனைவிக்காக.  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை செய்ய  பன்னிரண்டு இலட்சம் தேவைப்பட்டது.  தான் செய்த உதவிகளை ஞாபகம் வைத்து இன்று குமரன் கட்டாயம் உதவி செய்வான் என்று நம்பிக்கையோடு போனவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அவன் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் செய்த எந்த உதவியும் அவனுக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை என்று புரிந்து கொண்டார். ஒரு சில வார்த்தைகள் கூட அன்பாகப் பேசாத குமரனை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார். நன்றி கெட்ட அவனைத் தேடி வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார்.


 சுட்டெரிக்கும் வெயிலிலே கவலையோடு நடந்து கொண்டிருந்த சரவணன் ஆசிரியர் யாரோ முன்னால் வந்து பேசுவது கண்டு விழித்தார்,


 "யாருங்க நீங்க ?" அறிமுகமற்ற அவரைப் பார்த்து சரவணன் ஆசிரியர் கேட்டார்.

 

"என்ன சேர், என்ன தெரியலயா. நா ஒங்கக்கிட்ட படிச்ச நடராஜன். 


"அடடா அப்படியா. எனக்கு ஞாபகமில்லையே அப்பா " என்ற சரவணன் ஆசிரியரிடம்,


"நா எங்க சேர் படிச்சன் ? எட்டாம் வகுப்போடயே நின்னுட்டன்.  நீங்க எத்தன முற அடிச்சு அடிச்சி சொல்லித் தந்தீங்க. எனக்கு எதுவும் ஏறல. ஆனா நீங்க அடிச்சி அடிச்சி சொல்லித் தந்த ஒழுக்கத்த, நல்ல பண்புகள இன்னைக்கும் கைவுடல்ல.  ஒங்களயும் என்னைக்கும் மறக்கல்ல" என்றான்.


தான் மறக்காதிருந்த தன் மாணவன் தன்னை மறந்தது எவ்வளவு வேதனை தந்ததோ அதுபோன்றே,

தான் மறந்த தன் மாணவன் தன்னை மறக்காதிருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


"சேர், ஏதோ கவலையா இருக்கீங்க.  என்னென்னாலும் இந்த மாணவன்கிட்ட சொல்லுங்க" என்றான் நடராஜன். 


ஏற்கனவே ஒரு மாணவனிடம் பாடம் கற்ற சரவணன் வாத்தியார்,

"ஒன்றுமில்லை" என்று சமாளிக்கப் பார்த்தார்.


என்றாலும் நடராஜன் விடவில்லை.  


"இல்ல சேர், நீங்க ஏதோ பெரிய கவலயோட இருக்கிறது ஒங்கட முகத்த பாத்தாலே தெரியுது. வாங்க சேர். ஒங்கள வீட்டுல கூட்டிக்கிட்டு போய் விடுறென் சேர் " என்று அன்போடு அழைத்தான். 


அந்த கனிவான சொற்களைத் தட்டிவிட சரவணன் ஆசிரியருக்கு காரணம் இருக்கவில்லை.


ஒரு சிறிய கார் வந்து நின்றது . ஓர் இள வயது பையன் அதனை ஓட்டிக் கொண்டு வந்தான். 


"ஏறுங்க சேர்...." என்று  காரின் முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.


காரை செலுத்திய பையனிடம்               " அப்பா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு காரணம் இந்த சேர்தான் " என்று கூறினான் நடராஜன்.


அந்தப் பையன் மிகவும் மரியாதையுடன் தலையசைத்து புன்னகைத்தான்.


" ஒங்க பையனா..... பேரென்ன ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு நடராஜனிடமிருந்து  பதில் எதுவும் வரவில்லை.


 " சேர் ஒங்க கவல எதுன்னாலும் பரவாயில்ல சேர். தைரியமா சொல்லுங்க சேர்"

என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.


பெரியதொரு ஆளாக வளர்ந்திருந்த நடராஜன் தன்னை இத்தனை "சேர்" போட்டு அழைத்தது சரவணன் ஆசிரியருக்கு என்னவோ போலிருந்தது.


தனது மனக் கவலையை சரவணன் ஆசிரியர் தயங்கித் தயங்கி நடராஜனிடம் எடுத்துச் சொன்னார்.


அதனைக்  கேட்ட உடனேயே, " சேர், பன்னிரண்டு லட்சமா ? அது எனக்கு ஒரு பணமே இல்ல. நா தாறேன் சேர். அதுக்கும் மேலயும் தாறேன்.  நா இப்ப பெரிய கோடீஸ்வரன்" என்று சொன்னதோடு நிற்காமல்   " சேர் என்ட மகன்ட பேரென்ன என்று கேட்டீங்களே.  ஒங்க ஞாபகமா ஒங்கட பேரத்தான் அவனுக்கு வச்சிருக்கேன் " என்று நா தழுதழுக்க நடராஜன் சொன்ன போது 

   விழிகளிலிருந்து வழிந்த நீரை 

   துடைப்பதற்கும் சரவணன் 

  ஆசிரியரின் கைகளில் திராணி  

  இருக்கவில்லை.

திங்கள், 24 ஜூன், 2024

கவிஞர் திலகம் பிரேம்ராஜ் !

 

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கு 21/06/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடத்த கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ்என்னும் அமுதைத்தான் நாவில்

தடவியிவன் கவிதைக்குள் மிளிர்ந்தான் 

அமிழ்ந்திடவே எம்மையெல்லாம் வைத்து

அவனுடனே நடைபயில செய்தான் 

இமியளவும் சோர் வென்பதின்றி

இதயத்தை இலக்குடனே வைத்தான்

நிமிர்ந்துள்ளான் வர்த்தகத்தின் வழியில்

நிலைபெறவே இலக்கியத்தைப் பற்றி 


சுவையாகவே இவனும் கவிதை

சுடச்சுடவே கருப்பொருளை வைத்து

அவையோர்முன் சமர்ப்பிக்கும் பாங்கில்

ஆவென்றே வாய்ப்பிளந்தே நிற்பர்

எவைஎதனைச் சொல்லிடவே வேண்டும்

எனும்கலையை இவன் அறிந்ததாலே

துவையல்போல் இவன்கவிதை ரசித்து

துள்ளித்தான் குதித்திடவே வைப்பான்


இவனுக்கு என்று ஒரு கூட்டம்

இதயத்தால் இணைந்துளது உண்மை

அவசியமாய் வகவத்திற் கிவனும் 

ஆனதிலே ஏது இங்கு புதுமை

தவறாது வகவத்தின் பணிகள்

தலைமேலே இவனும்தான் வைப்பான் 

சுவராக சித்திரங்கள் வரைய

சுழன்று இவன் தன்னையுமே தருவான்



நூற்றியொன்று இன்றெங்கள் அரங்கு

நூலாகினான் பட்டம் ஏற

ஆற்றலுடன் தலைமையினை ஏற்று

ஆளவந்தானே கவிஞன் பிரேம்ராஜ்

சாற்றுகின்ற தமிழ் அமுதம் கடைந்து

சாறெனவே எம்செவியில் பிழிவான் 

போற்றியே நாம் வரவேற்றோம் கவிஞா 

பிரேம்ராஜே கவியரங்கை கலக்கு


வருக

கவிஞர் திலகம் பிரேம்ராஜ் !



புதன், 19 ஜூன், 2024

அந்தக் கோடுகள்

 


"விழுமியம்" சஞ்சிகையின் ஏப்ரல் - ஜூன் 2024 இதழில் இடம்பெற்றது 


கோடுகள் கீறி
வைத்திருக்கிறார்கள் -

தாண்ட முடியாமல்

ஆனாலும்
அவர்கள் வெளியே
ஆடம்பரமாய்

இங்கே
பலமில்லாத
சம்பளம்

வியர்வையின் ஊதியம் -
பிடுங்கிக் கொள்ள
எத்தனைக்
கொள்ளையர்கள்

எட்டாக் கனிகளுக்கு
மத்தியில்
மறக்கடிக்கப்பட்ட
மரக்கறிகள்


உணவு கூட
கனவாய் போன போது
கல்விப் பசிக்கு
சோளப் பொறிதானே

இரைப்பைதானே
பலருக்கு
இறப்பைச் சொந்தமாக்குகிறது

ஒவ்வொரு குடும்பமும்
போர்க்களமாய்

தாயும், தந்தையும்
பிள்ளைகளும்
எதிரிகளாய்

செல்வம் படைத்தோரே
உங்கள்
கோட்டைக்குத்தானே
இருக்கிறது

அந்தக் கோட்டை
அழிக்கும் வலிமை -

அந்த வறுமைக்
கோட்டை !

- என். நஜ்முல் ஹுசைன்




வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நோன்புப் பெருநாள் கவிதை 11/4/2024

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



இனிமையாம் பெருநாள் இன்று
எங்களைச் சூழ்ந்த வேளை
அருமையாய் கெப்பிட்டல் டிவி
அன்புடன் அழைத்து எம்மை
பாடுக பெருநாள் கவிதை
பாருளோர் சிந்தை அள்ள
என்றதே; அதனால் இங்கு
எம் மனம் சொல்ல வந்தோம்

செவிகளை, விழிகளைத்தான்
எமக்கென
இங்கே தந்த
அன்பர்க்கே ஸலாம் உரைத்து

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பெனும் மாதம் வந்து
நன்மைகள் அள்ளித் தந்து
நோகின்ற மானிடர்கள்
இடரினை
எடுத்துச் சொல்லி
ஆன்மாவில் கலந்திருந்து
நேற்றுதான் போனதம்மா

உற்றதோர் தோழனாக
ஒரு மாதம் இணைந்திருந்து
பக்குவப்படுத்திச் சென்ற
ரமழானை நினைத்தால் கண்ணீர்
நண்பனே சென்றாய் என்று
அழுதிட வேண்டும் இன்று
அத்தனை உறவாய் இருந்தாய் -
எம்மை
சொத்தென பாது காத்தாய்
எம் பாவத்திற்கு நீ
வைத்தாயே
தீ


எண்ணம் போல் வாழ்ந்திருந்தோம்
பாவத்தில் மூழ்கிப் போனோம்
எங்களின் கண்கள் இரண்டை
கூடா காட்சிக்கே
கொடுத்திருந்தோம் - அது
பாவமே இல்லை என்றே
எமக்கு நாம் சொல்லி
நாளும்
பாவியாய் அலைந்திருந்தோம்
பாதகம் புரிந்திருந்தோம்

பிறரது பிழைகள் தன்னை
பெரியதாய் கண்டு நாமும்
அவர் மனம் நோகுமென்ற
எண்ணமே சிறிதுதுமின்றி
புறமது பேசி நாளும்
திரிவதில் இன்பம் கண்டோம்

எம்மிடம் எந்தப் பிழையும்
இல்லை நாம் சிறந்த மனிதர்
என்ற
எண்ணத்தில் இறுமாந்திருந்து
ஏமாந்து போனோம் நாமும்

நாவினால் மட்டுமல்ல
எங்கள்
எழுத்தினால் கூட
பிறரின்
குப்பைகள் கிளறி மகிழ்ந்தோம்

வலைதள புகழில் மயங்கி
வீண்
வலையிலே மாட்டி நின்றோம்

சகோதரன் இறைச்சியைத்தான்
சுவையென புசித்து மகிழ்ந்தோம்

நான் மட்டும் தானே இங்கே
நல்லவன் என்ற நினைப்பில்
எத்தனை பாவம் செய்தோம்
எம்மை
நரகுக்கே அனுப்பப் பார்த்தோம்

வந்ததே ரமழான் மாதம்- எம்
வயிற்றினை கையில் எடுத்து
வயிற்றிலே பசியை வைத்து
எம்
மமதையை அடங்க வைத்து -
ஒற்றுமை
கயிற்றையே கையில் தந்து
எம்மை
மாற்றியே போனதம்மா

வயிற்றதன் வழியால் எங்கள்
ஆன்மாவை
சிறையில் வைத்தோம்
அலைகின்ற விழிகளைத்தான்
அடக்கியே கட்டுள் வைத்தோம்

எம்மை கெடுக்கின்ற தூதன்
விழிகள் என்பதை
உணர்ந்து கொண்டோம்

வீறாப்புப் பேசித் திரிந்த
நாங்களே மாறிப் போனோம்
வீறுடன் வந்த ரமழான்
ஆணைக்குள் அடங்கிப் போனோம்

என்னென்ன பாடம் சொல்லி
எங்களைத் திருத்தி ரமழான்
அட இது
நாங்களா என்று
எண்ண
வைத்ததை
என்ன வென்பேன்

படைத்தவன் தன்னைத் தொழவும்
பக்குவம் இன்றி இருந்தோம்
கிடைக்கின்ற நேரம் மட்டும்
தொழுதிடல் போதும் என்று
எம்மையே ஏமாற்றித்தான்
அதுவரை வாழ்ந்திருந்தோம்

வந்ததும் ரமழான் கையில்
தந்ததும் குர்ஆன்தானே
ஓது நீ ஓது என்று
ஓர் அமைப்பிலே
எம்மை வைத்து
ஓதி நீ அல்குர்ஆனை
வெறுமனே மூடிடாதே
என்னதான் இந்தக் குர்ஆன்
சொல்கின்ற பாடம் என்று
ஆராய்ந்து பார் நீ என்று
எமக்கது பாடம் நடத்தி

தொழுகைக்கு என்று நேரம்
இருக்கிற ததனை எங்கள்
நெஞ்சத்தில் ஏற்றி வைத்து
பாங்கொலி கேட்ட நேரம்
பள்ளிக்கே விரைய வைத்து
பக்குவப் படுத்திச் சென்ற
பாசமே மிகுந்த நண்பன்
ரமழானே சென்று விட்டான்

ஏழைகள் வீட்டிலுள்ள
பூனைகள் படுத்த அடுப்பை
எரியவும் செய்த அந்த
அற்புதம்தானே ரமழான்
நேற்று
விடைபெற்றுச்
சென்றதம்மா

ஏழைகள் வீட்டு வாசல்
உணவுப்
பொருட்களால் நிரம்பவைத்து
ஆனந்தக் கண்ணீர் தன்னை
விழிகளில் வரவழைத்து
பிரார்த்தனை சாவி
மூலம்
சொர்க்கத்தின் கதவை  எல்லாம்
திறக்கவே செய்த ரமழான்
நேற்றுடன் சென்று விட்டாய்

அள்ளியே அள்ளித்தானே
கொடுக்கவே சொன்ன
ரமழான்
புள்ளியே போட்டு நம்மை
சொர்க்கத்தில் சேர்க்க வைத்தாய்

நேற்று நீ -

விடை பெற்றுச் சென்றதாலே
வேதனை உற்றோம் உண்மை
நண்பனே கலங்கிடாதே என்றுதான்
நீயும் சொல்லி
எம் கண்ணீரைத் துடைத்து விட்டாய்

கைகுட்டையாக நீயும்
ஷவ்வாலைப் பரிசளித்தாய்
பெருநாள்
கொண்டாடு எனப் பணித்தாய்


பெருநாள்
கொண்டாட
ஒன்று சேர்ந்தோம் 
உன் பெருமையை
எண்ணிக் களித்தோம்

மீண்டும் நீ அடுத்த வருடம்
எங்களை காண வருவாய்
இன்ஷா அல்லாஹ்

நீ புகட்டிய பாடம் எல்லாம்
மனதிலே இருத்தி நாங்கள்
அதுவரை காத்திருப்போம்
அழுக்கிலே அமிழ்ந்திடாமல்
என்றுதான் உறுதி சொன்னோம்

பெருநாளின் மகுடம் சூடி
பெருமிதம் கொண்ட யார்க்கும்
உரிமையாய் வாழ்த்து கூறி
உவகை நாம் கொள்ளுகின்றோம்

ஈத் முபாரக் !


- என். நஜ்முல் ஹுசைன்

(நோன்புப் பெருநாள் தினமான 11/4/2024 அன்று கெப்பிட்டல் டிவியில் ஒளிபரப்பான கவிதை)






புதன், 24 ஏப்ரல், 2024

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கம் 23/4/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் 

   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


சுறுசுறுப்பாய் பல பணிகள் தன்னில் நுழைந்து

சுமையென்றே எண்ணாது கடமை ஆற்றும் 

முறுவலிக்கும் இதயத்தார்; என்றும் முன்னே 

செல்வதற்கே துணிகின்ற மனமு முள்ளார் 

வறுத்தெடுக்கும் வெயிலிலே வாடும் மாந்தர் துயர்தீர்க்கும் 

மழையெனவே கவிதை பாடி

நறுமணத்தில் நம்மையெல்லாம்

மகிழவைக்கும் கவிஞரிவர் 

வாழ்த்துரைத்து வரவேற்போமே 


சட்டத்தை தன் வாழ்க்கைப் பயணமாக்கி

சத்தியத்திலும் நிலைக்க வேண்டுமென்று

கட்டத்துக்குள் தன்னை நிலைநிறுத்தி

கண்ணியமாய் பலர் மனதில் எழுந்து நிற்கும்

பட்டங்கள் பலவற்றை கல்வியோடும் 

பற்றித்தான் பிடித்திருக்கும் 

கவிதையோடும்

எட்டித்தான் பிடித்தவர்க்கே 

எங்கள் தலைமை தந்தேதான் நாம் மகிழ்ந்தோம்; அரங்கில் வைத்தோம்


எத்துறையில் தான் சார்ந்து இருந்த போதும்

இலக்கியத்தின் தாகத்தை நெஞ்சில் ஏந்தி

பத்திரிகை கவிதையென நின்றே இலங்கி

படித்ததுவும் பகர்வதுவும் பத்தி எழுத்தில்

முத்திரையே பதித்தவரை அழைத்து வந்தோம்

முன்னின்று கவியரங்கைத்

தலைமை யேற்க 

வித்துவத்தை காட்டுங்கள் எங்கள் அரங்கில்

வீறுடனே எம் கவிஞர் படையினோடு 


கவிஞர்

சட்டத்தரணி

ரஷீத் எம். இம்தியாஸ் 

தொண்ணூற்றி எட்டுக் கவியரங்கைத் தூக்கி வந்தோம்

தொண்ணூற்றி ஒன்பதனை 

உங்கள் தலைமேல் வைத்தோம்

நூறினிலே நாங்களுமே 

சுடராய் மின்ன

நூற்று ஒரு கவி படித்து

வாசல் திறப்பீர் 


வருக

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்






வெள்ளி, 12 ஏப்ரல், 2024

கவிஞர் ராஜா நித்திலன்

 (வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கு 24/03/2024 ஞாயிறு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ராஜா நித்திலன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்)


   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)



வளமாக வேஎங்கள் வலம்புரியும்
வீறுநடை போட்டிடவே
வேண்டுமென்ற உளம்கொண்ட ஓரிளைஞன் எம்மோடு
உறுதியுடன் உழைத்திடவே முன்னே வந்தான்
இளம்ரத்தம் எமக்கிங்கு
உறுதுணையாய்
இருப்பதனை நாம்கண்டு மகிழ்வே உற்றோம் உள்ளம் நெகிழ்ந்தோம்
களம்தன்னில் இவனை நாம்
ஏற்றிவிட்டு
கண் இமைக்காம லே நாம்
பார்த்து நின்றோம்

இவன் சொல்லும் கவிதைகளோ
தாளிலி ல்லை
இதயத்திலே ஏந்தி
வந்துநிற்பான்
அவல்போலே இனித்திடவே
வாய்திறந்து
அருவியென தமிழெடுத்துக் கொட்டிடுவான்
சுவரினிலே சித்திரமே தீட்டுகின்ற
ஆற்றலுளான்
மனங்களிலே அழகுறவே செம்மையுடன் கவிதை படம்
வரைந்திடுவான்
கவர்ந்தேதான் நெஞ்சங்கள்
பலவற்றில் நீங்காமலே இவனும் குடியிருப்பான்
கருப்பொருளில் வேதாந்தப்
புதையல் வைத்து
சிந்தைக்கு இவன் தீனிப் போட்டிடுவான்

மேடையிலே கவி படித்துப் போகும் இவனை
மேல்தட்டிப் பாராட்டா தாரும்
உளரோ
கூடையிலே தமிழ் அள்ளி வந்தே நிற்கும்
ராஜா நித்திலனைப் பாராட்ட
முடிவெடுத்தோம்
மேடையிலே கவித் தலைமை
உனக்கே என்று
மேன்மையுடன் சீராட்டி
அமர வைத்தோம்
ஏடைநீ திறந்து விடு எங்கள் கவிஞர்
ஏற்றம் பெற துணை வருவார்
என்றே சொன்னோம்


கவிஞர் ராஜா நித்திலன்

இது கவியரங்கு
தொண்ணூற்றி எட்டு
நீ
வண்ணத் தமிழெடுத்து
வானை முட்டு


எங்கள் கவிஞரொடு
கைகள் பிணைத்து
ஏறிச் சென்றே நீ
புகழை எட்டு

வருக
கவிஞர் ராஜா நித்திலன் !


 - என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 11 மார்ச், 2024

வருக ரமழானே !

 


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


ரமழான் வசந்தம் கவியரங்கு

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டமும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்தியமும் இணைந்து புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த   ரமழான் வசந்தம் சிறப்புக் கவி ராத்திரி கவியரங்கம் 29/2/2024 வியாழன் மாலை கொழும்பு தெமட்ட கொட வீதி,  தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில்   நடைபெற்றது.

மறைதாஸன் தாஸீன் நத்வி அரங்கில்  ரமழானை வரவேற்று நடைபெற்ற கவியரங்கிற்கு
கலாபூஷணம் தமிழ்த்தென்றல்  அலி அக்பர்  தலைமைத் தாங்கினார்.

கவிஞர்கள்  என். நஜ்முல் ஹுசைன்,  அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி)  , அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி), புத்தளம் மரிக்கார்    ஆகியோர் கவிதை பாடினர்.

அங்கே நான் பாடிய கவிதை -

- என். நஜ்முல் ஹுசைன்






எழுந்து நின்றேன் சபையில்
என் கவிதை
சென்று விழட்டுமே உங்கள் அகப் பையில்
என்னதான் இருக்கிறது என் கையில்; பயமில்லை
அல்லாஹ்வே
என்னோடு நீ இருக்கையில்


அமலால் அழகுப்படுத்த வரும்
ரமழான் மாதம்
இன்ப அலை எழுந்து
நெஞ்சில் மோதும்

தமிழ்த் தென்றலோ டிணைந்து
கவிதை பேசும்
எங்கள் கவிதை வரி எங்கும்
சுகந்தம் வீசும்

தமிழ்த் தென்றல் அலி அக்பர்
ஏறி நிற்கின்றார்
இன்று கவியரங்க  மிம்பர்
அவர்
தலைமையிலே பாடுகின்ற
கவிஞர்களும்
எழுந்து நிற்பர்

இது மறைதாசன் யூ. எம். தாஸீன் நத்வி அரங்கு

சிறகடித்துப் பறக்கின்ற தவர்
ஞாபகமே
அவர் அரங்கில் நிற்பதெந்தன்
பாக்கியமே

அவரின் மாணவனாய்
முன் வீட்டுச் சிறுவனாய்
அன்புக்குப் பாத்திரமானவனாய்
பார்த்திருக்கிறேன் அவர் பா திறம்

"குர்ஆனே கூறாயோ"
கவிதைகளை
என் கையெழுத்தில்
பிரதி எடுத்துக் கொடுத்துள்ளேன்
அப்போதே அவர் கவிதைகளைச்
சுவைத்துள்ளேன் அவையெல்லாமே
தேன்

பிரதி எடுத்துக் கொடுத்ததற்கு
பிரதி உபகாரமாகவா
இங்கே நான் !

பெருந்தகையின்
மேலான ஜன்னத்துக்காய்
பிரார்த்தித்து !

கவியரங்கத் தலைவர்,
தாளெடுத்து
கையில் கோல் எடுத்து
தோள் சேர்ந்த கவிஞர்கள்
செவியெடுத்து
அவை சூழ்ந்த அறிஞர்கள்
அன்பர்கள்
அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் !


தேய்ந்து பிறை செல்கிறது
வளர்பிறையை
அழைத்து வர

ஓய்ந்திருந்த சொந்தங்களை
மீண்டும் பள்ளி
இழுத்து வர

ரமழான் பிறையை
வரவேற்க
ஷஃபான் பிறையும்
நோன்பு வைத்திருக்கிறது


பள்ளிவாசல்களே
நீங்கள்
கொஞ்சம்
கொழுக்க வேண்டியிருக்கும்

வானத்தில் ரமழான்
பிறை வரும் போதே
உங்கள் வாசலுக்கு
புதிதாய் பலர்
வந்து விடுவார்கள்

தொழுகையும் அழுகையும்
புதுக் குரலில்
உங்களிடம் சங்கமிக்கும்

இடித்து இடித்துக்
கட்டிய
பள்ளிவாசல்களை
இடிக்கும்
இபாதத்வான்கள்

அவர்களையும்
நீங்கள்
தழுவிக் கொள்ளுங்கள்
ஒரு சிலராவது
இறுதிவரை
வாழ்நாள்
இறுதிவரை
நழுவிக் கொள்ளாமல்
இருப்பர்

வானத்தைப் பார்ப்போருக்கு
ரமழான் பிறை தென்படும்
வாழ்க்கையைப் பார்ப்போருக்கு
தங்கள் குறை தென்படும்

குறையகற்றி
தூசு தட்ட
இதோ ரமழான்
அருகிலே

ஆம் ரமழானே
நீ
எங்களை
ஒட்டடை அடிக்கும்
மாதம்

சைத்தானிய
சிலந்தி வலைகளால்
எங்களை
நாங்களே
பின்னிக் கொண்டு

சென்ற முறை
சென்ற போது
எமக்கு
விலங்கிட்டுச் சென்றாய்

விலங்கை உடைத்து
விடுதலைப் பெற்று
இப்போது
விலங்காகி
இருக்கிறோம்

புனிதத்தை
ஒரு மாதத்துக்கு
மட்டுமே
மட்டுப்படுத்திக் கொள்ளும்
சமுதாயம்

ரமழானே
எமது பாதுகாப்பு அரணே
ஏன் நாம் ஆகிப் போகிறோம்
உனக்கு முரணே

நாம்
கயிறுகளை விட்டுவிட்டாலும் -
இஸ்லாமிய வயிறுகளையெல்லாம்
ஒற்றுமையாக்கும்
அதிர்ஷ்டசாலி நீ

கஜானாக்களைத்
திறந்து கொடுப்பவர்களை
மட்டுமல்ல
கைகளைப் பொத்திக் கொடுப்பவர்களையும்
உருவாக்கும் நீ

இல்லாதவர்கள் கூட
இல்லாதவர்க்கு
எதையாவது கொடுக்க
சொல்லிக் கொடுக்கும்
மாதம் நீ

கொடுப்பதை செல்வந்தருக்கு
மட்டுமல்ல
மிஸ்கீனுக்கும்
பொதுவுடமையாக்கும்
மாதமே

ஸக்காத்தும் ஸதக்காவும்
ஒன்றையொன்று
முந்திக் கொள்ள
போட்டி நடாத்தும்

வீடு தோறும்
கையேந்தித் திரிவோர்
ஒரு புறமிருக்க
வீடு வீடாய்
மூட்டைக் கட்டிக்
கொடுப்போரை
வறுமையின் கொடும்போரை
எதிர்க்கச்
சொல்லிக் கொடுப்போரை
உருவாக்கும்
மாதம் நீ

கண்ணியவான்களையும்
புண்ணியவான்களையும்
உருவாக்குவதில்
முன்னணியில் நீ

நரகத்துக்கு மட்டுமே
போய் கொண்டிருப்போரை
தடுத்து நிறுத்தும்
அணைக்கட்டே ரமழானே

சுவனம்கூட
நீ வந்த பிறகுதானே
தன் பேனாவுக்குள்
அதிக மையை
ஊற்றிக் கொள்கிறது
தன் ஏட்டில்
பல இலட்சம் பேரின் பேரை
எழுதிக் கொள்ள

பாவம் நரகம்
தலையைத்
தொங்கப் போட்டுக்
கொண்டு

ரமழானே
இபாதத்தை
உனக்காக மட்டுமே
சுருக்கி வைத்துக்
கொள்ளும் சமுதாயம்

ரமழான் முழுவதும்
சூபி ஞானிகளாய்
குர்ஆனை ஏந்தும்
தேனிகளாய்

ஒரு மாதப் பயிற்சியோடு -
இடையில் முளைக்கும்
பல்கலைக்கழகங்களைப்
போல் -
எங்களுக்கு நாங்களே
கலாநிதி பட்டம்
சூடிக் கொண்டு

இருந்தாலும்
ரமழானே

பலரது வாழ்க்கையைப்
புரட்டிப் போடும்
நெம்புகோல்
உன்னிடம்

பலரின் முதல் சுஜூதுகளை
பதிவு செய்தவன்
நீ



இஸ்லாம்
உலகெங்கும்
வியாபித்துள்ளது

என்றாலும்

எமது
அடுத்த வீட்டுக்குள்
இன்னும்
நுழையாமல்

சில அப்துல்லாஹ்கள்
நோன்பு மாதத்திலும்
நோன்பு பிடிப்பதில்லை

ஏனெனில்
அவர்களுக்கு
நோன்பு
பிடிப்பதில்லை

இல்லை இல்லை
நோன்பே
உனக்கு அவர்களைப்
பிடிப்பதில்லை

அலைந்து திரிந்த
மனங்களை
கட்டிப்போடவும்
சிதைந்து போன
உள்ளங்களுக்கு
கட்டுப் போடவும்
நீ வருவாய்
முஃமீன்களுக்கு
நீ வருவாய்
தருவாய்

நாடே கஞ்சிக்காக
கெஞ்சிக் கொண்டிருக்கையில்
பிஞ்சுக் கைகள் ஏந்திக்
கொண்டு வரும்
கஞ்சிக் கோப்பைகளைத்
தட்டி விடாதீர்கள்

யாருக்குத் தெரியும்
அதுதான்
அவர்களின்
சஹர் சாப்பாடோ?

முஸ்லிம்கள்
சட்டை அணிந்திருக்கிறோம்
ஈமானை
அசட்டை செய்து கொண்டே

ஹராமும் ஹலாலும்
அருகருகே
ஓடும் நதிகளாய்

கால்
சேற்றிலா
ஆற்றிலா என்று
தெரியாமல் நாங்கள்

எமது வயிற்றைக் கிள்ளும்
பாலஸ்தீன
பசியும்
மெக்டோனோல்ட்ஸ்
உணவுகளால்
செரித்துப் போகும்

பல வண்ண மைகளும்
கலக்க வேண்டிய
ஒற்றுமை
ஒற்றை மையாய்
கருமையாய் -
கடுமையாய்

சரி என்ற வாதத்தால்
சரிந்து கொண்டு
பிழைக்குள்
பிழைத்துக் கொண்டிருக்கிறோம்

ஒருவரையொருவர்
அணைத்துக் கொள்ள
சொல்லித் தந்தது
இஸ்லாம்

ஒருவருக்கொருவர்
அடித்துக் கொண்டு
இஸ்லாமிய ஒளியை
அணைத்துக் கொண்டிருக்கிறோம்

இருந்தாலும்
நன்றி மறந்த
எங்களை மன்னித்து

ஆண்டுதோறும்
எங்கள் தலையில்
மகுடம் சூட
நீ வந்து
நிற்கிறாய்
ரமழானே

ஷஃபானும் நாங்களும்
குதூகலமாய்
வான வீதியில்
செங்கம்பளம் விரித்துக்
காத்திருக்கிறோம் -

அமலால் அழகு சேர்க்கும்
ரமழானே
உன்னை வரவேற்க !

நீ
கற்றுத் தரும்
பாடங்களை
கைவிட மாட்டோம்
என்ற
உறுதி மொழியோடு....

உனக்காய்
மீண்டும் வெள்ளையடித்த
பள்ளிவாசல்களைப் போல்

நாங்களும்
மீண்டும் வெள்ளையடித்துக் கொண்டு
காத்திருக்கிறோம் !

வருக
ரமழானே !

வாய்ப்புக்கு
ஜஸாக்கல்லாஹ் கைர்

அஸ்ஸலாமு அலைக்கும் !

  - என். நஜ்முல் ஹுசைன்

29/02/2024






















ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்

 



வலம்புரி கவிதா வட்டத்தின் 97 ஆவது கவியரங்கு 23/02/2024 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
 
- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர், வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)


தலைமைக்கு நீங்கள்தான் வேண்டும் என்று
தலைமேலே வகவத்தைத் தூக்கி வைத்து
அலைபாயும் எனமனதுக் கணையும் போட்டு
அருகிருந்து பத்தாண்டை
தொடவும் செய்தார்
நிலைமைகள் எதுவாக இருந்தபோதும்
நிழலாக இவரொன்றாய்
கூட வந்தார்
மலைபோல செயலாளர் அமைந்த தாலே
மலைத்திடவே கலையுலகை
வைத்தோம் நாமே


தகைமைகள் பலவற்றைத் தன்னில் கொண்டு
தலைநிமிர்ந்து வெளிநாடு
பயணம் சென்று
வகையோடு பல்வேறு பதவி கண்டு
வளமாக ஊடகத்தில் ஜொலித்து நின்று
பகையின்றி தொலைக்காட்சி
செய்திப் பிரிவில்
பலம்வாய்ந்த பதவியிலே மிளிர்ந்து வென்று
திகைக்கின்ற வண்ணம் இவர் இலக்கியத்தில்
தனக்கென்று தனிப்பாணி கொண் டுயர்ந்தார்


இளநெஞ்சன் முர்ஷிதீன் உயர்ந்த கவிஞர்
இருக்கின்றார் வகவத்தை நிமிர்த்தும் எலும்பாய்
களம்புகுந்து தன் கருத்தை வலுவாய் சொல்லி
காரியங்கள் ஆற்றிடுவார்
ஓயமாட்டார்
வளம்பெற்ற வலம்புரியின் கவிதை அரங்கை
வண்ணமய மாக்கிடவே தலைமையேற்றார்
இளமையின்னும் மாறவில்லை முன்பைப் போன்றே
இயக்கிடுவார் நம்அரங்கை
இனிமைப் பொங்க


கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்

தொட்டுவிட்டோம்
கவியரங்கு தொண்ணூற்றேழு
தேனூறும் கவிதைகளால் எம்மைச் சூழு
கவிதை படை நீ நடத்தி
நெஞ்சில் வாழு
மகிழ்ந்திடவே
வைக்கிறது இந்த நாளு !


வருக
கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்


  - என். நஜ்முல் ஹுசைன்



திங்கள், 5 பிப்ரவரி, 2024

மொழி பெயர்ப்புக் கவிதை

 எங்களுக்கெல்லாம் ஒரு கதை இருக்கிறது



எங்களுக்கெல்லாம் ஒரு கதை இருக்கிறது
நாங்கள் அனுபவித்த இன்பங்களை
நாங்கள் அறிந்த இன்னல்களை
சரிதமாய் சொல்வதற்கு

சில வேளைகளில் எல்லோரும்
அறியும் வண்ணம்
வெளியே
அணிந்து கொள்கிறோம் -
எனினும்
அடிக்கடி அவை இயலுமான வரை
ஆழத்தில் புதைக்கப்படுகின்றன

எனவே நாம் அன்பாய் இருப்போம்
ஏனெனில்
மற்றவர்கள் அடைந்த துன்பங்களையும்
கடந்த போராட்டங்களையும்
நாங்கள் உண்மையிலேயே
ஒரு போதும் அறியமாட்டோம்

நாங்கள் காட்டும்
பரிவும் பச்சாதாபங்களும்
வழிகாட்டும் ஒளியாய்
விளங்கட்டும்

எப்போதும் நினைவில் வைத்திருப்போம்
ஒவ்வொருவரின் கதைக்கும்
எங்கள் அக்கறை அவசியமாக
இருக்கிறது

இந்த மானுட பயணத்தில்
எங்கள் அனைவருக்கும்
அன்பும் அரவணைப்பும்
தேவைப்படுகின்றன
எனவே நாம் ஒருவருக்கொருவர்
அன்புடையவராய் இருப்போம்
நாமிருக்கும்
இடத்தை இன்னும் சிறப்பாக்குவோம் !

ஆங்கிலம் மூலம் -
மிச்செல் ஹாவர்ஸன்
Michelle Harverson

தமிழில் -

என். நஜ்முல் ஹுசைன்


(ஞானம் - பெப்ரவரி 2024)

சனி, 6 ஜனவரி, 2024

இந்த வீடு வேண்டும் - சிறுகதை

 


இந்த வீடு வேண்டும்


                - என். நஜ்முல் ஹுசைன்

திக் கொண்டிருந்த குர்ஆனை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டு தலையைத் தூக்கிப் பார்த்தார் சமத் சேர். இன்னும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் கதவைத் தட்டுபவர் மிகவும் மெதுவாகத்தான்  தட்டிக் கொண்டிருந்தார். அதனால்தான் அந்தச் சத்தம் உள் அறைக்குள்ளும், சமையலறைக்குள்ளும் இருந்த அவரின் மனைவி மகள்கள் யாருக்கும் கேட்கவில்லை.

சமத் சேர் குர்ஆனை வைத்து விட்டு மெதுவாகச் சென்று கதவைத் திறந்தார்.

அங்கே சுந்தரம் ஐயா நின்று கொண்டிருந்தார்.

'சுந்தரம் ஐயாவுடன் இருந்த அனைத்து கணக்கு வழக்குகளையும், கொடுக்க வேண்டிய கோப்புகளையும் பரிபூரணப்படுத்தி கொடுத்து விட்டேனே. மறுபடியும் ஏன் வந்திருக்கிறார் ?'

சிந்தனையோட்டம் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க ஐயா, வாங்க. சுகமா இருக்கிறீங்களா ?"

"ஓம் ஓம்  ஐயா சுகமா இருக்கிறானான். ஒரு முக்கிய விஷயமா உங்கள பாக்க வந்தன்" என்றார்.

சமத் சேர் தனது மனைவியுடனும் நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த வீட்டை வாங்கியவர், இந்த சுந்தரம் ஐயாதான் .

சமத் சேர் ஒரு ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.  மினுவன்கொட பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தவர்.

கொழும்பு புதுக்கடையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நான்கு பெண் பிள்ளைகள் இருந்தாலும் இன்னும் ஒரு மகளுக்குக் கூட திருமணம் நடக்கவில்லை. மூத்த மகளுக்கு மட்டுமே திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆசிரியர் தொழில் மூலம் கிடைக்கும் பென்ஷன் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடச் செய்தது. மின்சார கட்டண பில்லை பார்க்கும் போதெல்லாம் சமத் சேர் எங்கே தனக்கு ஹார்ட் எட்டேக் வந்து விடுமோ என்று அச்சப்படாத வேளை இல்லை. போதாதற்கு தண்ணீர் பில்லும் தனது பங்குக்குச் சேர்ந்து கொண்டது.

மூத்த மகளுக்கு மிகவும் எளிமையாக திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டுமென்றால் கூட சில லட்சங்கள் தேவை.  சமத் சேர் யாரிடமும் சென்று கை நீட்டிப் பழக்கமில்லாதவர். வயதும் ஏறிக் கொண்டிருந்த மூத்த மகளின் திருமணத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்று சமத் சேரும் மனைவியும் மிகவும் உறுதியாக இருந்தனர்.

அதற்காக புதுக்கடையில் தாங்கள் வசித்து வந்த வீட்டை விற்கத் தீர்மானித்தனர்.   பல பேர் வீட்டைப் பார்த்து விட்டுப் போனாலும் எல்லோருமே மிகவும் குறைந்த விலைக்குத்தான் வீட்டைக் கேட்டனர்.

சமத் சேருக்கோ வீடு விற்கும் பணத்தில்தான் மூத்த மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும், தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறிய வீட்டை வாங்கவும் வேண்டும் என்ற நிலை. அத்தோடு மற்றைய மூன்று மகள்களுக்கும் எதையாவது சேமித்து வைக்கவும் வேண்டும்.

அதனால் சரியான விலை கிடைக்கும் வரை காத்திருந்தார்.  சுந்தரம் ஐயாதான்  சமத் சேர் எதிர்பார்த்த பணத்தைத் தர சம்மதித்தார். முதலில் சுந்தரம் ஐயாவும் சமத் சேரிடம் பேரம் பேசினாலும் கூட சமத் சேர் தனது பெண் மக்களைப் பற்றி கூறியவுடன் மறு பேச்சு பேசாமல் வீட்டை சமத் சேர் சொன்ன விலைக்கே வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார். இதுவே சுந்தரம் ஐயாவின் மனிதாபிமானத்தைக் காட்டி நின்றது.

சுந்தரம் ஐயா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் கொழும்புக்கு அடிக்கடி வந்து வியாபார பொருட்களை வாங்கிச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். கொழும்புக்கு வரும் போது தங்குவதற்கும் வாங்குகின்ற சில பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அவருக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. தரகர் மூலம் வந்த சமத் சேரின் வீடு அவருக்கு பிடித்திருந்தது. எழுபது லட்சத்துக்கு அந்த வீட்டை அவர் வாங்கிக் கொண்டார். 

வீடு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டப்பூர்வமான வேலைகளையும் ஒரு சட்டத்தரணி மூலம் பூர்த்தி செய்து கொடுத்து சமத் சேர் பணத்தை வாங்கிக் கொண்டார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.  புதியதொரு சின்ன வீட்டினை வாங்கி அங்கேதான் சமத் சேர் குடும்பம் குடியிருக்கின்றது. மூத்த மகளின் திருமண ஏற்பாடுகளும் மெது மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது.

'இப்போது சுந்தரம் ஐயா எதற்கு தேடிக் கொண்டு வந்திருக்கிறார் ?' சிந்தனையோடு சமத் சேர் சுந்தரம் ஐயாவை அமரச் சொன்னார்.

பரஸ்பரம் இருவரும் சுக நலன்களை விசாரித்துக் கொண்டனர்.

"ஐயா சொல்லுங்க. என்ன விஷயமா தேடி வந்திருக்கீங்க ?"

"சேர், எல்லாம் நல்ல விஷயமாத்தான் வந்தனான். உங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க வந்திருக்கன்" என்று கூறி தான் கொண்டு வந்திருந்த கைப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு காசோலையை எடுத்து சமத் சேரிடம் நீட்டினார்.

அதில் 3 ம் சில பூஜ்ஜியங்களும் எழுதப்பட்டிருந்தன. அது முப்பதினாயிரமா அல்லது மூன்று லட்சமா ? என்று சமத் சேருக்கு யூகிக்க முடியாதிருந்தது.

"சுந்தரம் ஐயா, வீட்டுக்குத்தான் நீங்க முழுசா பணத்த தந்திட்டீங்களே ? எதுக்கு இந்தப் பணம் ?"

"சேர், நீங்க சொன்ன பணத்த தந்து நா வீட்ட வாங்கிட்டன்தான்.  ஆனா இது அதுக்குப் பிறகு உங்களுக்கு கிடைச்ச பணம். உங்களின்ர பணம்"

சமத் சேர் குழப்பத்தில் இருந்தார். கையை நீட்டி காசோலையை வாங்கவில்லை. சுந்தரம் ஐயா ஏதோ பகிடி பண்ணுகிறார் என்று சமத் சேர் நினைத்தார்.

"இல்ல இல்ல சேர் இது உங்களின்ர பணம்தான். மூண்டு கோடி ரூபா."

சமத் சேருக்குத் தலை சுற்றியது.

'என்ன மூணு கோடியா....?'

இப்போதுதான் சமத் சேருக்கு சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது.
சுந்தரம் ஐயா ஏதோ ஏமாற்றப் பார்க்கிறார். இந்த முகநூலில எல்லாம் உங்களுக்கு கோடி கிடைத்திருக்கிறது என்று சொல்லி வங்கி விபரங்களையெல்லாம் எடுத்து அதிலுள்ள பணத்தையெல்லாம் சுருட்டுகிற கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். அப்படித்தான் இதுவுமோ என்று நினைப்பதை சமத் சேரினால் தவிர்க்க முடியாமலிருந்தது.

அவரது சிந்தனையை கலைத்து சுந்தரம் ஐயா பேசினார். 

"நான் உங்களிட்டை வீட்டை வாங்கி பத்து நாளைக்குள்ள ஒரு பெரீய மனிசன் வசதியானவர் அழகான காரிலை வந்து வாசலிலை இறங்கினார்.

இந்த வீட்டை எனக்குத் தாருங்கோ எண்டு கரச்சல் படுத்தினார். நானோ இது என்ரை தொழிலுக்காய் வாங்கின வீடு. இதை விக்கிற எண்ணமில்லை என்று ஒரேயடியாய்ச் சொல்லிப் போட்டன்.

அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமே ? இந்த இடத்திற்கு எவ்வளவு விலையெண்டாலும் நான் தரத் தயாராய் இருக்கிறன்.இந்த இடம் எனக்கு வேணும் எண்டார். அவர் ஒரு போரா பாய் கண்டியளோ! அவர் என் வீட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும்உள்ள வீடுகளையும் வாங்கிப்போட்டாராம். நடுவிலை உள்ள எங்கடை வீட்டையும் வாங்கினால்தான் தன்ரை வேலையள் செய்யச் சுகமாம். பெரீய எபாட்மண்ட் கட்டப் போறவராம்.  அவர் கடைசியாக என்ன சொன்னவர் தெரியுமே? மூண்டுகோடி தருவதாகச் சொன்னார்.
                        அவர் மூண்டு கோடி எண்டோணை உங்கடை நாலு பொம்புளைப் புள்ளையளும் என்ரை கண்ணுக்கு முன்னுக்கு நிண்டினம்.
                 அந்தப் பத்து நாளும் அங்கை நீங்கள் இருந்திருந்தால் அந்த "பாய்"உங்களிட்டை வீட்டை விலைக்கு வாங்கியிருப்பார் .
நான் அவர்ர விருப்பத்திற்கு மறுப்புச் சொல்லேல்லை. நேற்றுத்தான் எல்லா வேலையும் முடிஞ்சுது .இந்தாருங்கோ உங்கடை மூண்டுகோடி ரூபா. எனக்கு எழுபது லச்சத்தை தாருங்கோ"

என்று கூறி சமத் சேரின் கைகளில் காசோலையை சுந்தரம் ஐயா திணித்தார்.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா ? 

" உயர் குணம் கொண்ட மனிதர்களைத் தீர்மானிப்பது காலமல்ல" சமத் சேரின் உள்ளம் சொன்னது. அவர் சுந்தரம் ஐயாவின் கரங்களைப் பற்றி முத்தமிட்டுக் கொண்டிருந்தார் - கண்ணீர் அந்தக் கரங்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தது.

==============================

ஞானம் - ஜனவரி, 2024