எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 23 மார்ச், 2025

ரமழான் கவிதை 2025

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/03/2025 ஞாயிறு இரவு ஒலிபரப்பான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'கவிதா நதி' யில் ஒலிபரப்பான எனது ரமழான் கவிதை.


ரமழானே
உன்னிடம் நாங்கள்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம்

எம்மிடம் நீ
ஒப்படைக்கப்பட்டிருக்கிறாய்

இது ஓர்
உடன்படிக்கை

எங்களுக்கும் உனக்கும்
சில
பொறுப்புகள் உண்டு

உன்னை நாங்கள்
இபாதத்தால்
அலங்கரிக்க வேண்டும்

நீ எங்களை தக்வாவால்
கழுவி
சுத்தம் செய்ய வேண்டும்

உனக்காக
எங்கள் வயிறுகளை
நாங்கள்
வெறுமையாக்க வேண்டும் 

எங்கள் ஆத்மாவுக்கு
நீ
விருந்து வைக்க வேண்டும்

நீ வந்து
எங்களுக்கு
ஏழைகளை ஞாபகப்படுத்த வேண்டும்

நாங்கள் பொட்டலம் ஏந்தி
வறுமையின்
வாசல் தேடி
பயணம் செய்ய வேண்டும்

நாங்கள்
வணக்கத்தின் எண்ணிக்கைகளை
அதிகரிக்க வேண்டும்

நீ
ஒன்றுக்கு பல என்று
பதிவு
செய்ய வேண்டும்

நாங்கள் குர்ஆனின்
பக்கங்களில்
தஞ்சமாக வேண்டும்

நீ
சொர்க்கத்தின் பக்கங்களில்
எங்கள் பெயரையும்
எழுதி வைக்க
வேண்டும்

முடிவில் நீ
விடை பெறுவாய்
நாங்கள்
விடை தருவோம்

நீ மீண்டும் வருவாய்
என்ற நம்பிக்கையில் -

நாங்கள் மீண்டும்
பழைய
வாழ்க்கைக்குள்
மூழ்கி விட மாட்டோம்
என்ற நம்பிக்கையில்!

- என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 10 பிப்ரவரி, 2025

பிறந்த நாள் !

 


பிறந்த நாள் !


உன் பிறந்த நாள்
உனக்கான நாளா ?

இல்லை அது
உன்
அன்னைக்கான நாள் !

தன்
வயிற்று மாளிகைக்குள்
உனக்கு
மெத்தைப் போட்டு

அவளோ
சிறையில் இருந்தாள் !

உன் இருட்டறையை
அவள்
வெளிச்சம் போட்டு
வைத்திருந்தாள்

அவள்
பிரசவித்ததால்தான்
நீ பிறந்தாய் !

அவள் பிரசவம்
முதலாமிடத்தில்
உன் பிறப்பு
இரண்டாம் இடத்தில்தான் !

இன்றைய உனது
மகிழ்ச்சிக்கு மூலதனம்
அவளது வேதனைதானே !

ஒவ்வொரு முறை நீ
பிறந்த நாள்
கொண்டாடும் போதும்

முதலில்
உன் அன்னையைக்
கொண்டாடு !

- என். நஜ்முல் ஹுசைன்

2025 பெப்ரவரி மாத 'ஞானம்' இதழில் என் கவிதை - பிறந்த நாள்.

வெலிமடை ரபீக்

 வெலிமடை ரபீக்

நீ
நோய்வாய்பட்டிருக்கிறாய்
என்று கேள்விப்பட்டதும்
என் வாய்
நோய்ப்பட்டது

அதனால்
எனது கவிதையில்
திக்கலும், திணறலும்
விக்கலும் இருக்கலாம்

ஆனாலும்
இந்த வாழ்த்துக் கவிதையில்
எந்த சிக்கலும் இருக்காது

ஏனெனில்
இது வெறும்
வாழ்த்துக் கவிதை அல்ல

எனது
இல்லை இல்லை
இங்கிருக்கும் அனைவரினதும்
பிரார்த்தனைக் கவிதை

கவிதைகளுக்கும்
பிரார்த்தனைகளுக்கும்
சக்தி இருக்கிறது
உனது துன்பங்களோடு
பேச்சு வார்த்தை நடாத்த

கவிஞனே
இலட்சங்கள் உன்னை
அலட்சியப்படுத்தலாம்
இதயங்கள் உன்னோடு
உறவாட மறக்காது

உன் கூர்
மைக் கவிதைகள்
"மைக் " கவிதைகளாய்
வாசகர்கள்
இதயங்களில் எதிரொலித்தது
செவிப்பறைகளில் அதிரும்

மானுடர்
இடர் களைய
நீ வடித்த கண்ணீர்
கவிதை பிரக்ஞையில்லா
மானுடர்க்கும்
முடர் நீர் பருக்கும்

நீ கவிஞனென
உன்னை அடையாளப்படுத்திய
வரிகளிலே
ஜொலிக்கும் உன் புகழ்

தாய்ப்பாலை
பால் மாக்களிலே கரைக்கும்
அன்னையருக்காய்
நீ வடித்தாய்
'பாழ்' மானுட கவிதை

அன்னையரே
அது பால் மாதிரி அல்ல
பாழ் மானுட என்று
விழிகளைத் திறந்து வைத்தாய்

கவிதைகளோடு பயணித்து
எங்கள் இதயங்களோடு
கை கோர்த்தவனே

வலிமையான வார்த்தைகளால்
கவிதை யாத்தவனே

கவலைப்படாதே
உனக்கும்
பூக்காலம் பூக்கலாம்

இன்னும் இன்னும் நீ
கவிதை படைக்க வேண்டும்
இன்னும் மின்னும்
கவிதை படைக்க வேண்டும்

நீ நீடு வாழ
சுகதேகியாய்
கவிதை உலகை ஆள
இது இதயத்துப் பிரார்த்தனை

இந்தக் கண்ணீரில்
மீன்கள் மட்டுமல்ல
ஆமீன்களும் இருக்கின்றன!


(கவிஞர் வெலிமடை ரபீக் அவர்களின் 'பூக்காலம் ' நூல் வெளியீட்டு விழா 2017 ல் கொழும்பு, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)