எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 14 ஜூலை, 2026

கவிஞர் மலாய்கவி டிவாங்சோ

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 122 ஆவது கவியரங்கு 02/05/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் மலாய்கவி டிவாங்சோ அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.


   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர்


     வலம்புரி கவிதா வட்டம்

     (வகவம்) 


மதிவளர் மன்றம் என்று மாணவர் நாங்கள் அன்று மாண்புடன் ஒன்று சேர்ந்து ஆற்றலை வளர்த்த வேளை தோளுடன் தோளும் சேர்த்து எம்முடன் ஒன்றிணைந்து தோழராய் வந்தவர்தான் இன்றெங்கள் தலைமை ஏற்றார்

தாய்மொழி தன்னை விடவும் தமிழ்மொழி மீது பற்று அதிகமாய் கொண்டதாலே எங்கள் வகவத்து மேடை தனிலும் தன்பெயர் பொறித்துக் கொண்டார்

கவிதைகள் எழுதிக் குவித்து கற்பனை தன்னைப் பெருக்கி காரியம் ஆற்றும் இவரோ முக நூலிலும் எழுந்து நின்றார்

ஒவ்வொரு நாளும் இவர்க்கு சான்றிதழ் வழங்கி மகிழ  குழுமங்கள் காத்து நிற்கும்

சான்றிதழ் வாங்கிக் குவிக்கும் கவிஞர்கள் பட்டியலில் இவரும்தான சேர்ந்து கொண்டார்

தமிழிலே கவிதை படைக்கும் ஆற்றலே உள்ள இவரும் தன் தாய்மொழி தனையும் நினைத்து தன்பெயர் சூடிக் கொண்டார்

மலாய் மொழி வீட்டு மொழியாய் ஆட்சியே செய்த போதும் இதயத்தில் தமிழை ஏந்தி தன்மொழி ஆக்கிக் கொண்டார்.

மலாய்கவி டிவாங்சோ என்னும் மனங்கவர் கவிஞர் இன்று எங்களின் வகவ மேடை அலங்காரம் செய்ய வந்தார் - அதிகாரம் செய்ய வந்தார்

அரங்கினின் தலைமை ஏற்று அழகுற தமிழை வடித்து எங்களின் மனங்கள் எல்லாம் மகிழ்ந்திட செய்து நிற்பார்

கவிஞர் மலாய்கவி டிவாங்சோ

வான் மழை பொழியும் சோவென்று இன்று கவிதை மழை பொழியும் டிவாங்சோ என்று

வாருங்கள்

கவிஞர் மலாய்கவி டிவாங்சோ



திங்கள், 6 ஜூலை, 2026

கவிஞர் ராஜா நித்திலன்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 123 ஆவது கவியரங்கு 2026 ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் ராஜா நித்திலன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)



மனதுக்குள்குடி யிருந்துஎம்மை

மகிழ்விக்க வைக்கின்ற ஒருவன்

மாண்பினையே தன்னகத்தே வைத்து

மதிப்போடு வாழ்கின்ற கவிஞன்

நினைவுக்குள் எப்போதும்

வகவம்

நிழலாக இவனோடு தொடர

நீங்காத நட்போடு எங்கள் 

வளர்ச்சிக்குத்

தூணாகி நிற்பான் 


தளர்கின்ற வேளைகள் தன்னில்

தட்டியெமை விழித்திடவே 

செய்வான் 

தயங்காதீர் நானிருப்பேன்

என்று

தருகின்ற தைரியங்கள் 

நூறு

வளர்பிறைதான் வகவத்திற்

கென்று

வாஞ்சையுடன் எம்நெஞ்சை வருடி

வார்க்கின்ற வார்த்தை மழையாலே 

துன்பங்கள் மறைந்துவிடும் ஓடி


தமிழன்னை கூட இவன் கவிதை

தனிநடையில் தனைமறந்து இருந்தாள்

தடதடவெ ன்று விழும் மொழியால் 

தலைநிமிர்ந்து மனது அவள் மகிழ்ந்தாள் 

அமிழ்தமழை பொழிகின்ற இவனை 

அகம்தன்னின் அவள்வைத்து புகழ்ந்தாள் 

அவள்அழகை இவன் பாடி மகிழ

ஏந்திடவே இல்லை கையில் ஒருதாள்


ஆசுகவி ராஜா நித்திலனை

சிம்மா சனம் போட்டு 

மனதில் வைத்தோம்

இன்று 

கவியரங்க தலைமையினை 

அவன் தலையில் வைத்தோம் 


மீண்டும் தலைமையினை 

இவன் தலையில் வைத்தோம் 


கவிஞர்

ராஜா நித்திலன்

இன்று நடப்பது

கவியரங்கு

நூற்று 

இருபத்தி மூன்று

இன்னும் எங்கள் கவிஞர் இதயத்தில்

ஆழமாய் நீ ஊன்று!


வருக


கவிஞர் ராஜா நித்திலன்






வியாழன், 18 ஜூன், 2026

இப்போது புரிந்தது - சிறுகதை

 இப்போது புரிந்தது


   - என். நஜ்முல் ஹுசைன் 

அப்துல்லாஹ் கலங்கிப் போனான். இப்படி ஒரு பதில் தனது பொஸ்ஸிடமிருந்து வரும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அவனது பொஸ் தாஹிர் ஹாஜியார் மிகவும் நல்ல மனிதர். இரக்க குணமுடையவர். எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். யாருடைய மனம் நோகும்படியும் பேசமாட்டார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஏழையாக இருந்து செல்வந்தர் ஆனவர். ஆனால் அவரது பிள்ளைகளிடம் அந்தப் பண்புகளை எதிர்பார்க்க முடியாது. அதிலும் அவரது மூத்த மகன் மிகவும் கர்வம் பிடித்தவன். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடன் முகம் கொடுத்தே பேசமாட்டான். அவர்களை மனிதர்களாகவே மதிக்கமாட்டான். 

அவர்களது நிறுவனம் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம். அங்கே நீண்ட காலம் அப்துல்லாஹ் பொறுப்பான பணியில் இருந்தான்.

தாஹிர் ஹாஜியார் அப்துல்லாஹ்வுடன் மிக அன்பாக இருப்பார். அவன் தனது பணிகளிலே நேர்மையாக இருப்பதை பலமுறை அவதானித்திருக்கிறார். சிலவேளை சில விடயங்களில் தாஹிர் ஹாஜியாருக்கே அப்துல்லாஹ் ஹலால், ஹராம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அதனால் மற்றவர்கள் மேல் காட்டும் அன்பைவிட அப்துல்லாஹ் மீது கொஞ்சம் கூடுதலான அன்பும், நன்மதிப்பும் தாஹிர் ஹாஜியாருக்கு இருந்தது.

அப்துல்லாஹ் எப்போதுமே எனக்கு அது வேண்டும், இது வேண்டும் எனக் கேட்க மாட்டான். தவிர்க்க முடியாத தேவையிருந்தால் மட்டுமே தாஹிர் ஹாஜியாரிடம் கேட்பான். மற்றபடி தனக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான். அதனை நன்றாக தெரிந்த தாஹிர் ஹாஜியார் அவன் இடையில் என்ன உதவி கேட்டாலும் அதனைக் கொடுக்கத் தயங்க மாட்டார்.

இன்றுதான் முதன்முறையாக அப்துல்லாஹ் கேட்டு தாஹிர் ஹாஜியார் "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த அப்துல்லாஹ்வுக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அவர் "இல்லை" என்று சொன்னபோது அருகில் மூத்த மகனும் இருந்தான். அவன்தான் அவரது நல்ல மனதைக் கெடுத்திருக்க வேண்டும். "இப்போது யாவாரம் ரொம்ப டல். பொறவு பார்ப்போம்" என்று சொன்ன பதிலை அப்துல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆம் ஹாஜியாரின் மூத்த மகன்தான் அதற்கு காரணம். அப்துல்லாஹ் கொடுத்த கடிதத்தை மகனிடம் கொடுத்துதான் ஹாஜியார் வாசிக்கச் சொன்னார். 

அதை வாசித்த உடனே அவன் அந்தக் கடிதத்தை மேசையில் வீசினான்.

"டெடி, இப்படி கேக்குற கேக்குற நேரமெல்லாம் இவங்களுக்கு பணம் குடுக்க வாணாம். நாங்கதான் நல்ல செலரி குடுக்குறோமே. அதுல இத எல்லாம் அவங்க பார்த்து கொள்ளணும். எங்களுக்கே எவ்வளவு கொமிட்மன்ட்ஸ் இருக்கு"

தன் டெடி அப்துல்லாஹ்வுக்கு உதவி செய்வதற்கு பெரியதொரு தடையைப் போட்டு நின்றான் அந்த மகன். ஹாஜியார் என்னதான் நல்ல குணமுள்ளவராக இருந்தாலும் தனது அன்பு மகனின் பேச்சை மீற அவரால் முடியவில்லை.

அதுதான் அவர் அப்துல்லாஹ்வுக்கு சொன்ன "இல்லை"க்கு காரணம்.

உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அப்துல்லாஹ் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டுக்குச் சென்று மகளிடம் என்ன சொல்வது ? மனைவியிடம் என்ன சொல்வது ? என்ற கவலை அவனை உறைந்து போக வைத்தது.

இவ்வளவுக்கும் அவன் பெரிதாய் எதையும் முதலாளியிடம் கேட்கவில்லை. உயர்தரம் படித்துக் கொண்டிருந்த தனது மகளது டியூஸன் பீஸ், புத்தக செலவுகளுக்காக உடனடியாக அவனுக்கு 26,000/- ரூபா அளவில் தேவைப்பட்டது. அதனைத்தான் அவன் சரியாகவே கணக்கிட்டு தனது மகளின் படிப்புச் செலவுக்காக
 25,600/- ரூபாய் தேவை என எழுதிக் கொடுத்திருந்தான்.

கலங்கிப் போயிருந்த அப்துல்லாஹ் "யா அல்லாஹ், நீயே போதுமானவன்" என்று மொழிந்தவனாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

வழமையாக வரும் தபால்காரன் அலுவலகத்திற்கு வந்த தபால்களை அப்துல்லாஹ்விடம் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் போன கையோடே அன்றைய பதிவுத் தபால்காரனும் வந்து சேர்ந்தான். அப்துல்லாஹ்விடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான்.  

அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டுச் சென்று முதலாளியின் கெபினைத் தட்டி கடிதங்களை கொடுத்துவிட்டு வந்து தனது பணிகளில் மீண்டும் ஈடுபடலானான் அப்துல்லாஹ். 

ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும், தாஹிர் ஹாஜியார், "அப்துல்லாஹ், அப்துல்லாஹ்" என்று கூப்பிடுவது கேட்டது. 

அப்துல்லாஹ் உள்ளே சென்றான். தாஹிர் ஹாஜியார் ஒரு என்விலப்பை நீட்டினார். கையில் வாங்கிய அப்துல்லாஹ் ஒட்டாமல் இருந்த என்விலப்பை அங்கேயே திறந்துப் பார்த்தான். அதில் 30,000/- ரூபா பணம் இருந்தது. எதுவுமே விளங்காமல் விழித்த அப்துல்லாஹ்விடம், "இது நீங்க காலையில கேட்ட பணம். முதலுல இல்லன்னு சொன்னேன்னு ஒன்னும் நெனைக்க வாணாம். இத கொண்டு போய் ஒங்கட மகள்ட படிப்ப பாருங்க" ஹாஜியார் சொன்னார். அருகே அவரது மகனும் அப்துல்லாஹ்வை சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென ஏன் இந்த மனமாற்றம். ஒன்றும் புரியவில்லை.

"ஜஸாக்கல்லாஹ் கைர்" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான் அப்துல்லாஹ்.


அல்ஹம்துலில்லாஹ் ஒருவழியாக மகளது பிரச்சினை தீர்ந்தது. என்றாலும் ஹாஜியாருக்கும் அவரது மகனுக்கும் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்தின் காரணத்தை யோசிப்பதை மட்டும் அவனது மனம் நிறுத்தவில்லை.


தனது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த அப்துல்லாஹ்வைக் கூப்பிட்டு அன்று வந்திருந்த கடிதங்களை பைல் பண்ணக் கொடுத்தார் தாஹிர் ஹாஜியார்.

அதற்கான பைல்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பைல் பண்ணத் தொடங்கினான் அப்துல்லாஹ்.

அப்போதுதான் அவனது கண்களைக் குத்திக் கொண்டு நின்றது ஒரு கடிதம். அது அரசாங்க கடிதம். டெண்டர் ஒன்றில் கலந்து வெற்றி பெற்று பொருள்களை இறக்குமதி செய்து கொடுத்ததற்கான கொமிஷனைக் குறிக்கும் கடிதம். 

சில மாதங்களுக்கொரு முறை இப்படியான கடிதங்கள் வருவது வழக்கம். கொமிஷனுக்கான காசோலையும் அதனோடு வரும்.

இப்போதுதான் அப்துல்லாஹ்வுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது.

அப்துல்லாஹ் கொடுத்து விட்டுச் சென்ற கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கலானார் தாஹிர் ஹாஜியார். பதிவுத் தபாலில் வந்த கடிதத்தைத்தான் முதலில் உடைத்தார். 

உள்ளே இருந்த செக்கையும், கடிதத்தையும் பார்த்த ஹாஜியாருக்கு பெரிய அதிர்ச்சி. 

இம்முறை கொம்பெனிக்கு வந்த கொமிஷன் பணம் 853,000/-. எப்போதுமே அந்தக் கொமிஷன் பணம் முழுமையாகவே வந்து விடும். ஆனால் இந்தத் தடவை அந்தத் தொகையிலிருந்து மூன்று சதவீதம் எனக் கூறி ரூபா 25,599/- கழித்து வந்திருந்தது. புதிய நடைமுறைக்கேற்ப இனிவரும் காலங்களில் கொமிஷன் பணத்திலிருந்து மூன்று சதவீதத்தை வரியாக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எப்போதுமே முழுமையாக வரும் கொமிஷன் பணம் இம்முறை மூன்று சதவீத கழிவுடன் வந்திருக்கிறது. அதுவும் அந்தக் கழிவுத் தொகை ஏறக்குறைய அப்துல்லாஹ் கேட்ட அந்தத் தொகை. அல்லாஹ் கணக்குப் போடுவதில் மாபெரும் வல்லவன்.

மகனைப் பார்த்து ஹாஜியார் சொன்னார், " இங்கப் பாருங்க. நாங்க அப்துல்லாஹ்வுக்கு கொடுக்க ஏலாது என்று சொன்ன பணத்தை அல்லாஹ் கழிச்சிட்டு அனுப்பிட்டான். அப்துல்லாஹ் போன்ற நேர்மையானவங்க எங்களுக்கிட்ட கேட்காம வேறு யாரிடம் கேட்பாங்க ? மகன் அல்லாஹ் மிக வல்லம உள்ளவன். எல்லாத்தையும் அறிஞ்சவன். நாங்க இப்படி உதவி செய்றதெல்லாம் எங்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொண்டு வராது. அல்லாஹ்ட பரக்கத்தான் கொண்டு வரும்"

கடிதத்தையும், காசோலையையும் கையிலே எடுத்துப் பார்த்துக் கொண்டே தனது டெடி சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் ," இயஸ் டெடி, நீங்க சொல்லுறது சரி. ஒருநாளும் இல்லாம இப்படி நடந்திருக்கு. இது அல்லாஹ்ட வேலதான். அல்லாஹ் எங்கட கண்ண தொறந்திருக்கான். நீங்க நெனச்சத அப்துல்லாவுக்கு கொடுங்க டெடி" என்றான். அவனது பேச்சிலும் ஒரு தெளிவு இருந்தது.

•••••••••••••••••••••••••••••••••

(விடிவெள்ளி 18/06/2026)

திங்கள், 25 மே, 2026

கவிச்சமர்


 24/05/2026 ஞாயிறு காலை கொழும்பு புதுச்செட்டித் தெரு, ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் கவிஞர் எழுத்தாளர் ந. தாமரைச்செல்வியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

பல கலைநிகழ்ச்சிகளோடு ஒரு கவிச்சமரும் இடம்பெற்றது.

"பரபரப்பான வாழ்க்கையில்

பல்லாங்குழி ஆடும் துயரத்திற்கு காரணம் 

கணவனே, மனைவியே" என்பது தலைப்பு.

மனைவியே என்ற தலைப்பில் நானும் கவிச்சமர் செய்தேன்.

அதிர்ஷ்டவசமாக எனது கவிதையை நண்பர் மொழிவாணன் தனது கைபேசியில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Neethirajah Molivaanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன் நடுவராக இருக்க கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், ந. தாமரைச்செல்வி, இறைஞானக்கவி ரமீஸ், தயாளினி ஆகியோர் சமர் புரிந்தனர்.


- என். நஜ்முல் ஹுசைன்



வியாழன், 26 மார்ச், 2026

கெப்பிட்டல் எப்.எம். நோன்புப் பெருநாள் கவிதை

 


நோன்புப் பெருநாள் தினமான 

21/3/2026 அன்று 

கெப்பிட்டல் எப்.எம். மில்

ஒலிபரப்பான எனது கவிதை







புதன், 4 மார்ச், 2026

கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர்


  

வலம்புரி கவிதா வட்டத்தின் 120 ஆவது கவியரங்கு 02/03/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.


   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர்

     வலம்புரி கவிதா வட்டம்

     (வகவம்) 




எழுந்திவன் கவிதை மண்ணில்

எடுப்புடன் உலவுகின் றான்

எழுதிய கவிதை தன்னால்

எழிலுற திகழுகின் றான்

அழுத்தியே மரபு தன்னை

அகமதில் வளரவிட் டான்

பழுதிலா பலரின் நெஞ்சை

பறித்திவன் இடம்பிடித் தான்


முனைப்புடன் முகநூல் தன்னில்

முழுவதும் பழகுகின் றான் 

வினைதிறன் காட்டும் வண்ணம்

விசையுடன் தொடருகின் றான் 

நினைக்கவே முடியா ரசிகர்

நினைவினில் நிலவுகின் றான்

தனக்கென பெயரும் பெற்று

தலைதனை நிமிர்த்திநின் றான்


வாழையின் தோட்டம் என்ற

வளமுறு பெயருக்கேற் ப

வாழையின் வரிசை தன்னில்

வஸீரிவ னுழைந்துவிட் டான்

பேழையாம் இலக்கி யங்கள்

பெருமையாய் வழங்கிவைத் த

வாழையின் வாரிசென் ற

வெகுமதி இவனும்பெற் றான்


வலம்புரி களத்தில் மின்னி

வலமிவ னிருக்கைபோட் டான்

நிலவென இவனும் இன்று

நிறைவுடன் தலைமையேற் றான்

உலகெலாம் தமிழை வார்த்து

உரியதோர் இடமும்பெற் றான்

மலரதன் மணத்தை வெல்லும்

மகிமையாய் அரங்கில்நின் றான்


கவிஞர்

வாழைத்தோட்டம் எம். வஸீர்


இன்றுங்கள் கையில் இருப்பது

நூற்று இருபது

இதில் 

காட்டியே நிற்க வேண்டும்

கவிதை சிறப்பது 

இடையிடைய 

எழவேண்டும் 

உணர்வுகளின் நெருப்பது 

நிறைவேற்றி வைக்கவேண்டும்

எங்கள் விருப்பது

சபை

கரகோஷம் செய்து 

உதிர்க்க வேண்டும் 

அழகிய சிரிப்பது


வாருங்கள் கவிஞர் 

வாழைத்தோட்டம் எம். வஸீர்




செவ்வாய், 3 மார்ச், 2026

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா



வலம்புரி கவிதா வட்டத்தின் 119 ஆவது கவியரங்கு 01/02/2026 அன்று கொழும்பு, ஜிந்துபிட்டி நீதிராஜா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் எம்.பீ.எஸ். பாலா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)

எம்.பீ.எஸ். பாலா

இவர் எம்மைக் கவர்ந்தது

இவருக்குள்ள நல்ல மனதின்
சிறப்பாலா ?
இவருக்குள் குடியிருக்கும்
தமிழின் இருப்பாலா ?
எப்போதும் பணிவு காட்டும்
நல்ல பண்பாலா ?
எல்லோரையும் அரவணைக்கும்
இவரின் அன்பாலா ?
இவர் ஏந்தும்
புகைப்படக் கருவி எனும்
துருப்பாலா ?
கவிதைப் படகை
இவர் செலுத்தும் துடுப்பாலா ?
பிறருக்கும் வாரி வழங்கும்
கைகளின் சிகப்பாலா ?
இவரிடம் இருக்கும்
வெள்ளை மனதின் வனப்பாலா ?
எப்போதும் காட்டும்
முகச் சிரிப்பாலா ?
எறும்புபோல் இயங்கும்
இவர் சுறுசுறுப்பாலா ?
இவரிடம் இருப்பது
வள்ளுவன் முப்பாலா ?
இவர் எங்களவர்
என்று சொல்ல ஆசைப்படும்
எங்கள் தவிப்பாலா ?

எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி
எங்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

சின்னக் கவிதைகளில்
சின்னம் பொறிப்பவர்
எம்.பீ.எஸ். பாலா
தமிழக மண்ணில்
முடிசூடிக் கொண்டதும்
இதனாலா ?

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
இன்றவர் தலைமையில்
போடப் போகிறார்  கோலா
கவியரங்கில் ஓடப் போகிறது
கவிதை
தேனா பாலா



கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

இந்தக் கவியரங்கு
நூற்றுப் பத்தொன்பது
இன்றெங்கள் உள்ளங்களை
வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!

உறுதியாய் சொல்கிறேன்

இன்னல்களுக்கு மத்தியிலும்
இன்று
தலைமையேற்றிருக்கிறீர்கள்
நீங்கள்

எங்களை வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!
வாருங்கள்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா





செவ்வாய், 27 ஜனவரி, 2026

புதன், 14 ஜனவரி, 2026

கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கு 03.01.2026 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
   தலைவர்
   வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)

வழிகாட்டும் ஒளி விளக்காய்
இவரும் இங்கே
வீற்றிருந்து மாணவர்கள்
உலகம் செய்தார்
விழிதிறந்தார் இவரென்று
போற்றி மகிழ்ந்து
வீறுடனே பலரின்று
உயரம் தொட்டார்
களிப்புடன் நான்
இவரிடமே கற்றேன் என்று
கண்களிலே நீர் முட்ட
சொல்லி இவர்க்கு
அளிக்கின்றார் அள்ளி அள்ளி பிரார்த் தனைகள்

இலக்கியமே என்றதுமே
தூரம் மறந்து
இன்பமுடன் சுறுசுறுப்பாய்
பறந்து வருவார்
நிலவுஅது பௌர்ணமியாய் ஜொலிக்கும் நாளில்
நின்றிடுவார் வகவத்தின்
வாசல் வந்து
உலவுகின்ற உறவுக்கு
பாலம் அமைத்து
உயரத்தில் நின்றிருப்பார்
எங்கள் மனதில்
பலமாக இவர் எமக்கு
ஆனார் வகவ
பாதையிலே ராஜநடை போடுகின்றார் -
ராஜன் நடை போடுகின்றார்

நமடகஹ வரலாறு தன்னை எழுதி நல்லதொரு பணி செய்து
தலையும் நிமிர்ந்தார்
கமகமக்கும் கவிதைகளால்
எங்கள் மேடை
கலகலப்பாய் ஆவதற்கு
துணையும் நின்றார்
நமதுள்ளம் கவர்ந்தவரை
அழைத்து வந்து
நாமின்று இவ்வரங்கின்
தலைமை தந்தோம்
எமதரங்கின் தலைமை கவி
ராஜன் நசீர் தீன்
எழுகின்ற கரவோசை
வாழ்த்தும் உமையே

கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்

கவியரங்கில் நாம் தொட்டோம் நூற்று பதினெட்டு
உங்கள் தலைமையிலே ஜொலிக்கட்டும் புதுமை பல தொட்டு தமிழ் பாலில் தேன் கலந்து
நீ முரசு கொட்டு
சபையே
கவியரங்கு கலகலக்க
நீ கையைத் தட்டு

வாருங்கள்
கவிஞர் கலவெல ராஜன் நசீர்தீன் !

வெள்ளி, 19 டிசம்பர், 2025

கவிஞர் பர்ஹாத் சித்தீக்


வலம்புரி கவிதா வட்டத்தின் 112 ஆவது கவியரங்கு 10/06/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் பர்ஹாத் சித்தீக்குக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)

சுறுசுறுப்பின் இலக்கணத்தை தன்னில் காட்டி
சுகமென்றே பொதுச்சேவை
தன்னை ஆக்கி 
விறுவிறுப்பாய் செயல்புரிந்து
நிற்கும்இவனை
விருப்பமுடன் பாராட்டி
நிற்பர் பலரும்
அருவருப்பு என்பதனை          என்றும் காட்டா

அன்பு மகன் எல்லோர்க்கும் இனியன்; உயர்ந்தோன் பொறுப்பெடுத்து பணியாற்றும்
இவனை இன்று
பெருமனதாய் நாமழைத்து தலைமை தந்தோம்

பொதுச்சேவை  மட்டுமல்ல   கவிதை என்னும்
பேராறில் மூழ்கிஇவன்
முத்தும் எடுப்பான்.        விதவிதமாய் வகவத்தின்
மேடை தன்னில்
வியப்பூட்டும் கவிதைகளால் உள்ளம் நனைப்பான்
இதமாக இவன் கவிதை     இருக்கும் அதுபோல்
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் பொருளும் இருக்கும்
சதம்போட்டு கவியுலகில்    நிலைத்து நிற்பான்
சாதிக்கும் இளையமகன்      பர்ஹாத் சித்தீக்


கவிஞர் பர்ஹாத் சித்தீக்

இன்றெங்கள் கவியரங்கு        நூற்றுபன் னிரண்டு
உன்றன்                            தலைமையிலே வடியட்டும் தமிழ்த்தேனும் திரண்டு

வரவேற்று நாம் தந்தோம்  எம்மேடை இன்று
காட்டி நில்லு  உன் புலமை எம்மனதை வென்று


- என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 9 நவம்பர், 2025

மஸாஹிரா கனி நூல் வெளியீடு

 

(09/11/2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 க்கு இடம்பெற்ற மஸாஹிரா கனியின் 'வேரெழுது', 'விடத்தல்தீவு புலவர் முஹம்மத் காசிம் ஆலிம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அனைவருக்கும்.                                அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்


வேறெழுத முடியாமல்

வேரெழுத வந்தார்


வேறெதுவும்

எழுத முடியாமல்

தன்

வேரெழுத வந்தார்


போர் எழுதியதால்

ஊர் அழுத

பொழுதெழுதி


பேர் எழுதிக் கொண்டார்


சுவைப்

போர் எழுதிய

சுவையால்

தன்

சுமை எழுதிக் கொண்டார் 


தன் இமைப் பொழுதில்

எழுதியதை

இதயத்தில் எழுதி -

நூல் எழுதி -

நிஜம் எழுதி 

எம்முன்னே

வைத்தார்

பல நெஞ்சங்கள்

தைத்தார் 



மஸாஹிரா கனி 

கனிந்தெழுதினாலும் 

கனி எழுத வரவில்லை

காய் எழுத வரவில்லை


மானிடர்க்காய்

எழுத வந்தார்

வேரெழுத வந்தார் 



வேரெழுது

என்று

ஏர் உழுது சென்றார்  


கிளை பரப்பி

தலை நிமிர்ந்து

தன்

கனி கொடுத்து நிற்கும்

விருட்சத்தின் 

அடி காண

எமை

அழைத்துச் சென்றார்


எமை

வளைத்துக் கொண்டார்


தன் பாட்டன் 

விடத்தல்தீவு புலவர்

முஹம்மது காசிம் ஆலிம்

புகழ் எழுதிச்

சென்றார்


தன் வேர்

கண்டு கொண்டார்


அதனால்

வீறு கொண்டார்


நீர் எழுதியதால்

கண்ணீர் எழுதிய

காவியங்கள் பிறந்த 

நாட்டில்


மஸாஹிரா கனியே

நீர் எழுதியது

ஆனந்தக் கண்ணீர்

காவியம்


தமிழ்

மார் எழுதிய

பால் குடித்து

தமிழ்ப்பால் 

தனை வளைத்து

தாழ்ப்பாள் போடாது

கவிதை

மடை திறக்கும்

மஸாஹிரா



இவர் விழித்திருந்தது 

பல இரா



அதில் கண்டதெல்லாம்

வேர் காணும் கனா


வயிற்றுக்கு

சோறெழுதிய 

ஏர் எழுதிய

கவிதை 

நெற்கதிர்


எங்கள்

வாழ்க்கைக்கு 

வாழ்த்தெழுதிய

மஸாஹிரா கனியின்

எழுத்துக்கு

யார் நிற்கப் போகிறார்கள்

எதிர்


கார் எழுதியது

மழை

கெட்டிக் காரி

இவள் எழுதியது

கலை

அதை வைத்துத்தானே 

எமக்கெல்லாம் 

வீசியிருக்கிறார் 

வலை


மஸாஹிரா கனி

விண்மீன் சொற்கொண்டு

எழுதிய கவிதையில் 

வலைமீனாய் 

வசியப்பட்டுப் போயிருக்கிறோம்


மூல வேர்

விடத்தல்தீவு புலவர்

முஹம்மது காசிம் ஆலிம்

பேத்தியே 

மஸாஹிரா கனியே


இன்னும் இன்னும்

உன்

வேரெழுது


அங்கெல்லாம்

உன்

பேரெழுது 


உனை

வாழ்த்தி மகிழ்கிறேன்

வல்லான் அல்லாஹ்

தொழுது !


நன்றி !


- என். நஜ்முல் ஹுசைன்

வெள்ளி, 7 நவம்பர், 2025

இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு..

 



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி 09/11/2025 தொகுத்து வழங்கிய 'பொய்கை' நிகழ்ச்சியில் இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு ஒலிபரப்பான கவிதை. 



எங்கள் காது பிடித்து
தூக்கி விட்ட
அன்னை வானொலிக்கு
அகவை நூறு
வாழ்த்துகள்

எங்கள் அகப் பை
நிறைந்தது
இலங்கை வானொலியே
நீ உன்
அகப்பையினால்
பரிமாறிய உணவில்தானே

நீ
எங்கள் செவிகளிலூட்டிய
பல்சுவையினால்தானே
எங்கள் செல்நெறி
உருவானது

எங்கள் வாழ்க்கையையே
உன்னிடம்தானே
ஒப்பமிட்டுத் தந்திருந்தோம்
இன்று நாங்கள்
ஜொலிக்கின்றோம் என்றால்
எம்மை
ஒப்பமிட்டுத் தந்தது நீயல்லவா

செல்நெறி காட்டிய
உனக்கு
செய்நன்றி செய்வதற்கு
காத்திருக்கிறோம் -
மிக மிக நீண்ட வரிசையில்

உன் ஒவ்வொரு ஆண்டும்
எம்மை ஆண்டுதான்
சென்றிருக்கிறது

நீ என்றென்றும்
வீற்றிருப்பாய்
ஒலிபரப்புச் சக்கரவர்த்தியாய் -
மற்றவர்களைப்
பின்தள்ளி !

- என். நஜ்முல் ஹுசைன்

வியாழன், 6 நவம்பர், 2025

மொழிவாணன் விரலி வெளியீடு

 



ஜனரஞ்சக எழுத்தாளரின் விரலி Pendrive வெளியீட்டு விழா 02/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை






இந்த ஆண் டிரைவர்

பெண் டிரைவரை
கண்டுபிடித்துள்ளார்

ஆம்
மொழிவாணன் எனும்
இந்த
மொழி வானம்

எழுத்து வானவில்லில்
வர்ணங்கள் பூசியவர்

நம் மொழிவாணன்
எழுத்து டிரைவர்

எத்தனை வேகமானவை
இவர் எழுத்துகள்

அவை
அதிவேகப்
பாதைகளில்தான்
பயணம்
செய்துள்ளன

நாவலுக்குள்
ஆவலைத் தூண்டியவர்
நா சுவைக்க
பா வலை வீசுபவர்

தசாப்தங்கள் தாண்டிய
இவர் எழுத்துப் பயணம்

ஜனரஞ்சக எழுத்தாளர்
மகுடத்தை
சுவீகரித்துக் கொண்டது

எழுத்தை ஆண்டு
வந்த
மொழிவாணன்
பல தடைகள்
தாண்டியவர்
பலரை
எழுதத் தூண்டியவர்

அது மட்டுமல்ல

பல முதல்களில்
காலடி
எடுத்து வைத்தவர்

பல முதலைகளை
கண்டவர்

பல முதல் அலைகளை
கண்டவர்

வீடியோக்களில்
விசித்திரம் காட்டியவர்

ஒளிக்கலவையால்
சித்திரம் தீட்டியவர்

மொழிவாணனும்
ஒரு கடல்தான்

இவரது அலைகளும்
ஓய்வதில்லை
கைகளும்
சோர்வதில்லை

இதோ
புதிய படையல்

எம் நாட்டின்
முதல் முயற்சி

விரலியில் செய்து
விரலினில் தந்திருக்கிறார்

நடிப்பையும்
வாய் அசைப்பையும்
பிடித்து வைத்து
வித்தைக் காட்டியுள்ளார்

வியப்பைக் கூட்டியுள்ளார்
மனப்பை நிறைத்துள்ளார்

மலைப்பை ஊட்டியுள்ளார்

பென்டிரைவுக்கு
பின்னாலுள்ள
ஆண்டிரைவ்
மொழிவாணன்

சாதிக்க வேண்டும் என்ற
உத்வேக நாயகன்

இன்றும் இளைஞனாய்

இன்னும் இன்னும்
வித்தியாசப் படைப்புகள்
இவரிடமிருந்து வரவேண்டும்

இவர் புகழ்
நின்று நிலைக்க வேண்டும்

என வாழ்த்தி அமர்கின்றேன்

நன்றி

- என். நஜ்முல் ஹுசைன்


கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்

 




வலம்புரி கவிதா வட்டத்தின் 117 ஆவது கவியரங்கு 05/11/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் ஸ்ரீதேவி கணேஷனுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)




அழகு தமிழ் சொல்லெடுத்து
இதயம் கவர்வாள்
அலங்கார மொழி உரைத்து முன்னே நிற்பாள்
பழகியவள் பண்பினிலே
உயரம் காண்பாள்
பணிவினிலே தலைகுனிவாள்; நிமிரும் கூர்வாள்
சுழன்றுஅவள் தன்பணியை தலைமேல் வைப்பாள்
சுறுசுறுப்பாய் நடைபயின்று
நெருப்பாய் உழைப்பாள்

அறிவிப்புத் துறையினிலே
ஆற்றல் காட்டி
அதிலுள்ள நுணுக்கங்கள்
அறிவாய் போற்றி
குறிப்பாக தன்நாமம்
மிளிர்ந்தே ஒளிர
குறையகற்றி செயல்பட்டு
முன்னே செல்வாள்
பறித்தேதான் இதயங்கள்
பாவை இவளும்
பாங்காக வே நல்ல
பெயரில் வாழ்வாள்
குறித்தேநாம்  இவள்ஆற்றல்
தன்னைக் கண்டு
கொடுத்தோமே நம்தலைமை
இன்றே இங்கே


ஸ்ரீதேவி கணேஷ னெனும்
இவளின் வரிகள்
சிரித்தேதான்  பலர் சிந்தை
கவர்ந்து நிற்கும்
அறிந்தேநாம் இவரழைத்து
வகவ அரங்கை
தலைமேலே வைத்தோமே
நாமும் மகிழ்ந்தோம்
தரித்தெங்கும் நிற்காமல்
கவிதை கங்கை
தலைநிமிர்ந்து நடைபோட்டு
தடைகள் தாண்டும்
பறித்தெங்கள் கவிஞர்களும் கவிதைஉள்ளம்
பின்செல்வார்
இக்கவிதை பெண்ணாளோடு

கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
இன்று
வகவக் கவியரங்கு
நூற்றிப் பதினேழு
வான்முட்டும் கரகோஷம்
ஒலிக்கும் நீகேளு

வாருங்கள்
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்








செவ்வாய், 14 அக்டோபர், 2025

பாத்திமா நளீரா

 ( 12/10/2025 அன்று கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பாத்திமா நளீரா எழுதிய 'ஏழாம் வானத்தின் சிறகு' கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது வாசிக்கப் பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்



நான் தயார் 

நீங்கள் தயாரா


ஏழாம் வானம்

சென்று வர


சிறகுகள் தர தயாராய் 

இருக்கிறார்


நளீரா


கவிதைகளின் தாயாராய் 

அவற்றுக்கு 

சொல் உணவு ஊட்டி

எங்களை

சொக்க வைத்துள்ளார்


சொற்களுக்குள் 

மாணிக்கக் கற்கள்

வைத்துள்ளார்


தோண்டிப் பாருங்கள்

என்று

புதையல் வைத்துள்ளார்


பாத்திமா நளீரா

என்ற இந்த

கவிதைப் பெண்ணாள்


இவ்வுலகைக் கண்டிருக்கிறாள் 

தன்

காத்திரக் கண்ணால்

தன் கரம் பற்றிய 

மை சிந்தும் 'பென்'னால் 


இவள் தாள்

பூமியைத் தொடாமல் 

பார்த்துக் கொண்டிருக்கிறது

இவள் எழுதிக் குவித்திருக்கும் 

கவிதைத் தாள்


நான்

பறந்து கொண்டிருக்கிறேன்


ஏழாம் வான் சென்று

சிறகடித்துக் கொண்டிருக்கும்

இந்தக்

கவிதை ஆளுமையை 

அடையாளமிட


எழுத்துத் தேரில் 

அன்றே

பவனி வந்து


இலக்கிய உலகே

கவனி என்று

பேரிகை கொட்டிய 

காரிகை இவர்


இவர்

எழுதிக் குவித்ததை

அவர்

எங்களிடம் தந்துள்ளார்


யார் அவர் ?


நளீரா சித்திரம் வரைய

சுவர் கொடுத்தவர்


ஆம்

அவரின் அவர்

எங்கள்

சித்தீக் காரியப்பர்


செய்திருக்கும்

காரியமோ 

வெரி வெரி சுப்பர்


இலக்கிய உலகில்

இருவருமே

நிலைத்து நிற்பர்


மனைவிக்கு 

மகுடம் சூடும்

பாக்கியம்

எத்தனைப் பேருக்கு

வாய்க்கிறது ?


அத்தகு உள்ளம்

எத்தனைப் பேருக்கு

இருக்கிறது ?



நளீரா

சிறிது காலம்

தன் கைகளை

கட்டிப் போட்டிருந்தார்


தன் கைகளுக்கு

கட்டில் போட்டிருந்தார்-

உறங்கிக் கொள்ள


இக்கட்டில் இருந்தவரை

இக் கட்டில் வேண்டாமென்று

திக்கெட்டும் பறக்கும்

சிறகுகள் கொடுத்தார் 

சித்தீக்


மனைவிக்கு

சிறை கொடுக்கும்

கணவர்கள்

இன்றும் இருக்கும்போது

சித்தீக் காரியப்பர்

சிறகுகள் கொடுத்திருக்கிறார்


அதனால் நளீரா

ஏழாம் வானத்திற்கு

எம்மையும்

அழைத்துச் சென்றிருக்கிறார்


நாளையும் 

சிறகு விரித்துப்

பறக்கப் போகும்

பாத்திமா நளீரா

உங்களுக்கு

வாழ்த்துகள் வந்து சேர்கிறது

கலரா கலரா


தையலாய் தைத்த

பாத்திமா நளீரா

இன்னும் பல நூல்கள்

நீங்கள்

நூற்க வேண்டும்

சமுதாய அவலங்கள்

மாய்க்க வேண்டும்


நன்றி


 - என். நஜ்முல் ஹுசைன்








 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

கவிஞர் லைலா அக்ஷியா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு 06/10/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் லைலா அக்ஷியாவிற்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
 
- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர்
  வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)

எத்தனையோ ஆற்றல்கள் தன்னுள் வைத்து
எப்போதும் சுறுசுறுப்பின் வடிவமாகி
வித்தைகள் பலகாட்டும்
விந்தை செய்து
இத்தினத்தில் வகவத்தின்
தலைமை ஏற்று
வித்துவமாய் கவியரங்கை
நடத்திச் செல்ல
வஞ்சியிவள் வந்துநின்றாள்
எங்கள் மேடை

அறிவிப்புத் துறையினிலே
அழகாய் மின்னி
அகமகிழும் வார்த்தைகள்
அன்பாய் பேசி
தெறிக்கின்ற பொருளுள்ள
கவிதை பாடி
தெரியாதோர் மனங்களையும்
தன்பால் இழுத்து
அறிவென்னும் ஆயுதத்தால்
தன்னை வடித்து
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
எழுந்து நிற்பார்

எப்போதும் எம்கவிதை
மேடை வந்து
ஏற்றமிகு கவிதைகளால்
சபையை ஈர்த்து
தப்பேதும் இல்லாமல்
தனக்கே என்று
தனியான தோர்இடத்தை
பெற்றுக் கொண்டார்
இப்போது இவரழைத்து
இவரின் தலையில்
எம்கவிதை அரங்கினையே
நாமும் வைத்தோம்
அப்பப்பா என்றேநாம்
போற்றி மகிழ
கவிதைமகள் லைலாக்கே
செவிகள் தந்தோம்

கவிஞர்
லைலா அக்ஷியா

இன்றெங்கள் கவியரங்கு
நூற்றுப் பதினாறு
உங்கள் தலைமையிலே
ஓடட்டும்
அமுதத் தேனாறு

வாருங்கள்
கவிஞர் லைலா அக்ஷியா

சனி, 12 ஜூலை, 2025

கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா

 வலம்புரி கவிதா வட்டத்தின் 113 ஆவது கவியரங்கு 10/7/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்க தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.


- நஜ்முல் ஹுசைன் 

தலைவர் 

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ் என்று மொழிவதிலே இன்பங் கண்டு 

அமிழ் தென்று அதன் சுவையில் தேனை உண்டு திமிர் கொண்டு நான் கவிஞன் என்றே மொழிந்து நிமிர்ந் தேதான் படைக்கின்ற ஆற்றல் உள்ளான் 


பல்வேறு பட் டங்கள்

தன்னைச் சுமந்து 

வல்ல மைகள் தன்எழுத்தில் 

காட்டி நின்று 

அல்லல் படும் மாணவர்க்கு கரங்கள் நீட்டி 

எல்லை இல்லா மகிழ்ச்சியிலே திளைக்கும் ஒருவன் 


வகவத்தின் படிகளிலே 

ஏறி நின்று 

அகமதிலே குடியிருக்கும் 

கவிதை பாடி 

சுகமாக தன் பணிகள் 

தலையில் கொண்டு 

திகழ்கின்றான் தனக்கும் என பெயரை வைத்து 


ஒரு கவிதை யேபாடி 

ஓடிச் செல்லும் 

அருங்கவிஞர் சிவராசா 

மேடை அமர்த்தி 

பெருங் கவிஞர் கூட்டத்தை பொறுப்பாய் தந்தோம் 

இருந்தே தான் தலைமையிலே நன்றே சிறக்க 


கவிஞர் தெஹியோவிற்ற 

இரா. சிவராசா


இன்றெங்கள் கவியரங்கு 

நூற்றி பதின்மூன்று -இதில் காட்டிடவே வேண்டும் நீங்கள் 

நல்ல பல சான்று 

தலைமைதான் உங்களுக்கு 

அதை மனதில் ஏற்று பெருக்கெடுத்து ஓடட்டும் கவிதை எனும் ஊற்று !

சனி, 7 ஜூன், 2025

ஈத் முபாரக்

 அவர்கள்

துல்ஹஜ்ஜிலும்
ரமழானோடு வாழ்கையில்

வீடில்லாமல் இருக்கும்
அவர்களுக்கு எதிராய்
வீட்டோ இருக்கையில்

'நாவே'
நா அடங்கிப் போயிருக்கையில்

எப்படி
சுதந்திரமாய் சொல்லமுடியும்

ஈத் முபாரக்

   - என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 20 மே, 2025

கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா

வலம்புரி கவிதா வட்டத்தின் 110 ஆவது கவியரங்கு 12/04/2025 சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர்,
  வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)



எழுத்துலகை நிமிர்ந்தேதான்
பார்க்க வைத்தார்
எழுத்தாளர் பலர்மனதை
கொள்ளையிட்டார்
அழுதிருக்கும் சமூகத்தின்
அவலம்தீர
அடம்பிடித்தே தன் எழுத்தில்
படமும் பிடித்தார்
எழுந்திருக்கும் சிறுகதையில்
கவிதையுலகில்
எடுப்பாக இவர்நின்று
மிளிருகின்றார்

உண்மைதான் சிலகாலம்
அஞ்ஞா வாசம்
இவர்புரிந்து
பண்ணாமல் எழுத்துப் பணியும்
தனித்திருந்தார்

கண்ணியமாய் வகவம் தான்
இழுத்து வந்து
கசடறவே எழுதுங்கள்
மீண்டும் என்று
திண்ணியமாய் உற்சாகம்
ஊட்டியதை
இவ்விடத்தில் சொல்வது எம் கடமையன்றோ

கல்வியிலும் முடிசூடி இருந்த
எம்ஏ
ரஹீமா வின்
பேராற்றல் மீண்டும்
துளிர்க்க
எல்லையற்ற மகிழ்ச்சியுடன்
எழுதுகின்றார்
கவியரங்க தலைமையினில்
அன்றும் ஜொலித்த
வல்லவராம் ரஹீமாவை
விழைந்தே அழைத்தோம்
நூற்றிபத்தின் தலைமையினை
அவர்க்கே தந்தோம்

கவிஞர், எழுத்தாளர்
எம்.ஏ. ரஹீமா
110 ஆவது கவியரங்கம்
உங்களிடத்தில்


எம் கவிஞர்கள்
வைக்கட்டும் உங்களை
உயரிடத்தில்!







ஞாயிறு, 23 மார்ச், 2025

ரமழான் கவிதை 2025

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/03/2025 ஞாயிறு இரவு ஒலிபரப்பான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'கவிதா நதி' யில் ஒலிபரப்பான எனது ரமழான் கவிதை.


ரமழானே
உன்னிடம் நாங்கள்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம்

எம்மிடம் நீ
ஒப்படைக்கப்பட்டிருக்கிறாய்

இது ஓர்
உடன்படிக்கை

எங்களுக்கும் உனக்கும்
சில
பொறுப்புகள் உண்டு

உன்னை நாங்கள்
இபாதத்தால்
அலங்கரிக்க வேண்டும்

நீ எங்களை தக்வாவால்
கழுவி
சுத்தம் செய்ய வேண்டும்

உனக்காக
எங்கள் வயிறுகளை
நாங்கள்
வெறுமையாக்க வேண்டும் 

எங்கள் ஆத்மாவுக்கு
நீ
விருந்து வைக்க வேண்டும்

நீ வந்து
எங்களுக்கு
ஏழைகளை ஞாபகப்படுத்த வேண்டும்

நாங்கள் பொட்டலம் ஏந்தி
வறுமையின்
வாசல் தேடி
பயணம் செய்ய வேண்டும்

நாங்கள்
வணக்கத்தின் எண்ணிக்கைகளை
அதிகரிக்க வேண்டும்

நீ
ஒன்றுக்கு பல என்று
பதிவு
செய்ய வேண்டும்

நாங்கள் குர்ஆனின்
பக்கங்களில்
தஞ்சமாக வேண்டும்

நீ
சொர்க்கத்தின் பக்கங்களில்
எங்கள் பெயரையும்
எழுதி வைக்க
வேண்டும்

முடிவில் நீ
விடை பெறுவாய்
நாங்கள்
விடை தருவோம்

நீ மீண்டும் வருவாய்
என்ற நம்பிக்கையில் -

நாங்கள் மீண்டும்
பழைய
வாழ்க்கைக்குள்
மூழ்கி விட மாட்டோம்
என்ற நம்பிக்கையில்!

- என். நஜ்முல் ஹுசைன்